jeudi 15 janvier 2026
mercredi 7 janvier 2026
சாற்றுகவி
பாவலர்மணி வா.
சண்முகம் எழுதிய
வெண்பாத் திரட்டு
நுாலுக்குச்
சாற்றுகவி
வெண்பா
அழகில் விருப்பம் மிகுந்தோங்க
நண்பா
படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்
ஆற்றல்
நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்
போற்றப்
புனைந்தார் புகழ்!
பாட்டின்
இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,
ஏட்டின்
எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே
காட்டின்
மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்
நாட்டில்
பெறுமே நலம்!
ஊரோங்கப்
பாரின் உறவோங்க நெஞ்சத்துள்
நேரோங்க
நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,
பெற்றோர்
பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்
கற்றோர்க்[கு]
அளித்தார் களிப்பு!
எங்கும்
தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்
சங்கப்
புலமைத் தகைபோற்றித் - தங்கமென
வெண்பாத்
திரட்டு விளைத்த..வா. சணமுகனார்
பண்பால்
அடைந்தார் பயன்!
தண்ணிலா
முற்றத்தில் தத்தி விளையாடி
எண்ணிலா
ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்
காட்சியைக்
கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்
மாட்சியை
வாழ்த்துமே மண்!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
07.01.2026
jeudi 1 janvier 2026
புத்தாண்டு வாழ்த்து 2025
உலக உயிர்கள் உவப்புற
ஆங்கிலப் புத்தண்டு வாழ்த்து
அன்பு
நிறைந்தோங்கப் பண்பு படர்ந்தோங்க
இன்பக்
கலைக்கல்வி நன்றோங்க – மன்பதை
தாங்கிய
தண்மைத் தமிழோங்க நல்வாழ்வை
ஆங்கில
ஆண்டே அருள்!
ஒற்றுமை
யோங்க உலக உறவோங்க
நற்றுணை
நட்பு நனியோங்கப் – பொற்பெலாம்
தந்துள
மோங்கத் தமிழோங்க நல்வாழ்வை
வந்துள
ஆண்டே வழங்கு!
விண்ணக
ஞானம் விளைந்தோங்க, வள்ளலென
வண்ணக
மோங்க, வளமோங்கப், – பெண்ணோங்கப்
பண்ணகப்
பைந்தமிழால் பாரோங்க வந்திடுவாய்
மண்ணக
ஆண்டே மகிழ்ந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
01.01.2026
vendredi 21 novembre 2025
ஓம் ஓம் ஓம்
ஓம்.. ஓம்..
ஓம்
கலமுடைந்[து]
ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்
பலமுடைந்து
சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து
சென்றதுபோல்
பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..
என்றதுமே
நீங்கும் இடர்!
காக்கும்
வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்
தாக்கும்!
துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற
கோது..மன
நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..
ஓதுமனம்
காணும் ஒளி!
பொய்யர்
உறவால் புழுங்கி மனநொந்தேன்!
மெய்யர்
எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி
வாழ்ந்த
நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..
ஆழ்ந்த
ஒளியால் அறி!
திருடும்
தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்
உருளும்!
உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்
முற்றும்
ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..
பற்றும்
பரம பதம்!
அடியாள்
பலர்கொண்டே ஆடிய ஆட்டம்
இடியாய்
விழும்நம் மிடமே! - படிபடியாய்
வந்த
வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..
தந்த
ஒலியே தவம்!
பட்ட
அடியென்ன? நட்ட வினையென்ன?
சுட்ட
நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்
ஆணைத்
திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..
ஆனை
முகனே அகற்று!
வறுமை
வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்
கருமை
மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை
உளங்கொண்டு
பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..
வளங்கொண்டு
ஞானம் வழங்கு!
பாட்டரசா
வென்று பழித்திடுவார்! வீண்வெற்று
வேட்டரசா
வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!
ஏட்டரசா!
உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..
வீட்டரசா
தீராய் வினை!
நாடி
நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!
கூடிக்
குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே
நிற்கின்றேன்!
அத்தனையும் நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..
கற்கின்றேன்
உள்ளம் கனிந்து!
ஆசையலை
சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்
வேசையலை
சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்
தங்கும்
அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..
தொங்குங்
கரங்கொண்டு துாக்கு!
எங்குக்
குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?
இங்குச்
சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு
தடையின்றித்
தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..
இடையின்றி
வேண்டும் எழுத்து!
அம்மைத்
தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!
வெம்மை
வினைகளை வேரறுப்பாய்! - மும்மை
மலம்போக்கிக்
காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..
நலந்தேக்கி
ஞானம் நவில்!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
27.08.2025


