samedi 2 juillet 2022

கலிவிருத்தம் - 3

 

கலிவிருத்தம் - 3 [இழைபு அமைந்தது]

 

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் 

 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை யிணையடி நீழலே!

[திருநாவுக்கரசர் தேவாரம்]

 

சிந்தை இன்புறும்! செவ்வுரை சீர்தரும்!

முந்தை நன்னெறி முன்வரும் பேர்தரும்!

விந்தை மின்னிட மேன்மையின் தார்தரும்!

எந்தை பாடிய இன்றமிழ் வண்ணமே!  

 [பாட்டரசர்]

 

கன்னல் ஊறிடும்! காதலை ஏந்திடும்!

இன்னல் மாறிடும்! இன்னிலை ஓங்கிடும்!

தென்றல் வீசிடும்! தேன்கவி பேசிடும்!

என்னுள் வந்தவள் என்னவோ செய்கிறாள்!

[பாட்டரசர்]

 

வல்லொற்றே வாராமல் நெடிலும் மெல்லொற்றும் மிகுதியாக வரும் பாடல் இசைக்கு ஏற்றதாயிருக்கும். அதனை இழைபு என்னும் வனப்பு என்பர். மேற்கண்ட பாடல்களில் இவ்வியல்புகளைக் காண்க.

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

மேலுள்ள இழைபு கலிவிருத்தம்  குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

 

இவ்வகைக் கலிவிருத்தத்தில் கூவிளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வரும்.

விளம்வரும் இடத்தில் மாச்சீர் வந்து அடுத்து வரும்சீர்  நிரை முதலால் அமையும்!

 

இவ்வகையில் நேரசையில் தொடங்கினால் 11 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தும்  இருக்கும்.

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம்+ கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் இழைபு கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.06.2022

கலிவிருத்தம் - 2

 

கலிவிருத்தம் - 2

 

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்!

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே!

 

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை!

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்!

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது!

நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே!

 

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது!

சொல்லக விளக்கது சோதி யுள்ளது!

பல்லக விளக்கது பலருங் காண்பது!

நல்லக விளக்கது நமச்சி வாயவே!

 

[திருநாவுக்கரசர் தேவாரம்]

 

வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்

உயிரெலாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்

செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்!

 

[கம்பன், பால. அரசியல் - 10]

 

அன்பெனும் தேனதி அகத்தில் பாய்ந்திடும்!

துன்பெனும் வல்வினை துார ஓடிடும்!

நன்பெனும் பண்பினை நாளும் நல்கிடும்!

இன்பெனும் தமிழினை என்றும் ஏத்துவோம்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரும்.

 

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
18.06.2022

கலிவிருத்தம் - 1

கலிவிருத்தம் - 1

 

குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம்

 

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே!

 

[கம்பம், கடவுள் வணக்கம்]

 

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்!

நிலவு லாவிய நீர்மலி வேணியன்!

அலகில் சோதியன்! அம்பலத் தாடுவான்!

மலா்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!

 

[சேக்கிழார். பெரிய புராணம் - 1]

 

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்

காசில் கொற்றத் திராமன் கதையரோ!

 

[கம்பன். பாயிரம் - 4]

 

ஒற்றி மேவிய உத்தம னே!மணி

தெற்றி மேவிய தில்லையப் பா!விழி

நெற்றி மேவிய நின்மல னே!உனைப்

பற்றி மேவிய நெஞ்சமுன் பாலதே!

 

[வள்ளலார். திருவருட்பா - 1098]

 

உலகு நின்னருள்! ஒள்ளொளி நல்கிடும்

நிலவு நின்னருள்! நீர்,வளி, தீ,வெளி

பொலிவு நின்னருள்! பொற்கவி நற்றிற

வலிவு நின்னருள்! வந்தருள் செய்கவே!

 

[பாட்டரசர்]

 

கண்ணன் நல்லடி கண்மலர் மேவிட

மண்ணில் வந்துறும் வல்வினை மாய்ந்திடும்!

எண்ணம் சீர்பெற இன்றமிழ் கற்றிட

விண்ணின் வீடென மேதினி மின்னிடும்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

மேலுள்ள கலிவிருத்தம்  குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

 

குறிலீற்று மா என்றால் என்ன?

 'உலகம்' என்ற மாச்சீர் இறுதியில் கம் குறிலொற்று வந்தது. 'நிலவு' என்ற மாச்சீர் இறுதியில் வு குறில் வந்தது. குறிலையோ, குறிலொற்றையோ இறுதியாகப் பெற்றுவரும் மாச்சீர், குறிலீற்று மாச்சீர் எனப்படும்.

 

இவ்வகைக் கலிவிருத்தத்தில் கூவிளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வரும். மேலுள்ள முன்றாம் பாடலில் 'றேன்மற்றிக்' என விளம் வரும் இடத்தில் மாங்காய் வந்தது.

 

மேலும் 2, 3, ஆம் இடங்களில் மாச்சீர்வரின் அடுத்தசீர் நிரை முதலாகும், மேலுள்ள  மூன்றாம் பாடலில் பற்றி, இராமன் என விளம்வரும் இடத்தில் மாச்சீர் வந்து அடுத்து வரும்சீர்  நிரை முதலால் அமைந்தது!

 

இவ்வகையில் நேரசையில் தொடங்கினால் 11 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தும்  இருக்கும்.

குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
11.06.2022

ஒன்றில் ஐந்து

ஒன்றில் ஐந்து

ஒரு செய்யுளுக்குள் ஐந்து செய்யுள் இருக்கும் வண்ணம் பாடுதல் ஒன்றில் ஐந்தென்னும் சொற்சித்திரக் கவியாம். இவ்வகை நான் கண்டுணர்ந்த புதிய வகையாம்.

 வஞ்சித்துறையில் ஓரடியில் இரு சீர்கள் இருக்கும். வஞ்சித்துறையடியில் ஒரு சீர் கூடினால் வஞ்சி விருத்தமாகும். வஞ்சி விருத்தவடியில் ஒரு சீர் கூடினால் கலிவிருத்தமாகும். கலிவிருத்தவடியில் ஒரு சீர் கூடினால் கலித்துறையாகும். கலிதுறையடியில் ஒரு சீர் கூடினால் அறுசீர் ஆசிரிய விருத்தமாகும்.

 முன்னோர் வகுத்த  வாய்பாடுகளில் செய்யுள்கள் ஐந்தும் அமைய வேண்டும். புதிய வாய்பாட்டைப் போட்டு எழுதக்கூடாது என்பது முன்னோர் வகுத்த உரையாம். 

ஐந்து பாடல்களிலும் மோனை அமைய வேண்டும். முதல் பாடலில் அமைந்த புணர்ச்சி விதிகள் தொடரும் பாடல்களிலும் வர வேண்டும்.

அறுசீர் விருத்தம்

[மா+மா+ மா+ மா+ மா+ காய்]

நேரசையில் தொடங்கும் இவ்விருத்தம் ஓரடியில் 17 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 18 எழுத்தும் பெறும்.

 பெண்ணே வருவாய்! பெயர்சேர்

            பேறாம் பேணிப் பயனிடுவாய்!

பண்ணே தருவாய்! பனிசேர்

            பாங்காய்க் கட்டிக் கலையிடுவாய்!

கண்ணே இணைவாய்! கனிந்து

            காக்குந் தாயே! நலமிடுவாய்!

தண்ணே புனைவாய்! தமிழே!

            தாயே! அன்பே! மனம்புகுவாய்!  

கலித்துறை

[மா+மா+ மா+  தேமா+ தேமா]

முதல் மூன்று சீர்கள் வெண்டளையால் அமையும். 1, 3 மோனை யமையும்.  நேரசையில் தொடங்கும் கலித்துறை ஓரடியில் 12 எழுத்தும், நிரையசையில் தொடங்குங் கலித்துறை 13 எழுத்தும் பெறும்.

பெண்ணே வருவாய்! பெயர்சேர் பேறாம் பேணிப்

பண்ணே தருவாய்! பனிசேர் பாங்காய்க் கட்டிக்

கண்ணே இணைவாய்! கனிந்து காக்குந் தாயே  

தண்ணே புனைவாய்! தமிழே! தாதே! அன்பே!

 கலிவிருத்தம்

[மா+மா+ மா+மா]

[ஒவ்வொரு சீரும் நான்கு சந்த மாத்திரையால் அமைந்தது]

[ஒவ்வோர் அடியிலும் 10 எழுத்துகள் வந்தன]

 

பெண்ணே வருவாய்! பெயர்சேர் பேறாம் 

பண்ணே தருவாய்! பனிசேர் பாங்காய்க் 

கண்ணே இணைவாய்! கனிந்து காக்குந்   

தண்ணே புனைவாய்! தமிழே! தாதே!

 

வஞ்சி விருத்தம் [வெண்டளை]

[ஒவ்வொரு சீரும் நான்கு சந்த மாத்திரையால் அமைந்தது]

[ஒவ்வோர் அடியிலும் 8 எழுத்துகள் வந்தன]

 

பெண்ணே வருவாய்! பெயர்சேர்  

பண்ணே தருவாய்! பனிசேர்  

கண்ணே இணைவாய்! கனிந்து 

தண்ணே புனைவாய்! தமிழே!

 

வஞ்சித் துறை [வெண்டளை]

[ஒவ்வொரு சீரும் நான்கு சந்த மாத்திரையால் அமைந்தது] [ஒவ்வோர் அடியிலும் 5 எழுத்துகள் வந்தன]

 

பெண்ணே வருவாய்!   

பண்ணே தருவாய்!   

கண்ணே இணைவாய்! 

தண்ணே புனைவாய்!

 இப்பாடலை எளிதாக எழுதும் முறை

 முதலில் வஞ்சித் துறையை எழுத வேண்டும். வஞ்சித் துறையின் முதற்சீர் தேமா அல்லது புளிமா வரலாம். இரண்டாம் சீர் புளிமா வர வேண்டும்.

வஞ்சித் துறையடியில் ஒரு சீரைச் சேர்த்தால் வஞ்சி விருத்தமாகும். மூன்றாம் சீர் புளிமா வர வேண்டும். முதல் சீரின் மோனையும்  அதில் அமைய வேண்டும்.

 வஞ்சி விருத்தவடியில் ஒரு சீரைச் சேர்த்தால் கலிவிருத்தமாகும். நான்காம் சீர் தேமா வர வேண்டும். முதல் சீரின் மோனையும் அதில் அமைய வேண்டும். [ இந்தப் பாடலில் 1, 3, 4 ஆகிய சீர்களில் மோனை  அமைந்திருக்கும். இவ்வாறு மோனை வந்தால் அறுசீர் விருத்தத்திற்கு மோனை சரியாக அமையும்.

 கலிவிருத்தவடியில் ஒரு சீரைச் சேர்த்தால் கலித்துறையாகும். ஐந்தாம் சீர் தேமாவாகும்.

 கலித்துறையில் ஒரு சீரைச் சேர்த்தால் ஆசிரியர் விருத்தமாகும். ஆறாம் சீர் காய்ச்சீர் வர வேண்டும். நான்கடிகளிலும் ஒரே வகையான காய்ச்சீர் வந்தால் எழுத்து எண்ணிக்கை ஒன்றிவரும். மேலுள்ள பாடலில் நான்கடிகளிலும் கருவிளங்காய் வந்துள்ளது.

 அறுசீர் விருத்தத்தில் வந்த புணா்ச்சி நெறிகள் அனைத்துப் பாடல்களிலும் அமைய வேண்டும்.

 மேலுள்ள பாடலில்

 பெண்ணே வருவாய்! பெயர்சேர்

            பேறாம் பேணிப் பயனிடுவாய்!

பேணிப் பயனிடுவாய் - ப் வல்லினம் மிகுந்து வந்தது.

கலித்துறையிலும் ப் வரவேண்டும்

பெண்ணே வருவாய்! பெயர்சேர் பேறாம் பேணிப்

பண்ணே தருவாய்! பனிசேர் பாங்காய்க் கட்டிக்

பேணிப் பண்ணே என வல்லினம் மிகுந்தது

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

01.07.2022

முன்னோர் இடத்தில் ஆசிரியப்பாவில் ஒன்றில் ஐந்து அமைந்த பாடல் உள்ளது. அவ்வகையை ஒன்றில் ஐந்து என்ற தலைப்பில் முன்பே பதிந்துள்ளேன்.