mardi 9 mars 2021

கும்பச் சித்திரக் கவிதை

 

கும்பச் சித்திரம்

 

பாவே மணக்கப் படைத்தருள்! பசுமைக்

காவே வழங்கும் கவிகள் வேண்டும்!

வண்ண மாதே! மதுவே! புகழே!

எண்ண மினிய தளிர்கவி யே!தாயே!

விண்பனி பண்சேர்!சீர் சேர்!மாரி மார்பன்

வன்பகர் தமிழே! தேவே! வருகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.03.2021

 

 

மீன் சித்திரக் கவிதை


 

மீன் சித்திரம்

மீன்விழியளே!

 நாவே யினிக்க நறுமொழி தரும்..வாய்!

காவே மிகுதமிழ் கற்கும் திருவிழி!

கன்னல் கூட்டுங் கவிமொழிப் பார்வை!

மின்னல் மின்னுதே! விந்தைகள் பின்னுதே!

அன்பின் பெருக்கே! அருளே!சீர்ப் பொழிலே!

இன்பின் யாழிசை மீட்டித் துன்பொழி!

வான்மழைபோல் குவித்திடும் பன்னலன் மீட்டி

மீன்விழி யாளே! தேன்மொழி தருகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.03.2021

mercredi 3 mars 2021

வழிமோனை வழியெதுகை வெண்பா

 


வழிமோனை வழியெதுகை வெண்பா

[பதினைந்து சீர்களும் ஓரே மோனையை ஒரே எதுகையைப் பெற்றுவர வேண்டும்]

 

கண்மாட்சி கண்ணிமையாள்! கண்ணிதரும் கண்டினியாள்! 

கண்காட்சி கண்டுமகிழ் கண்ணழகாள்! - கண்ணாட்சி

கண்சூடும் கண்ணாடிக் கண்ணமுதாள்! கண்ணனைக்

கண்பாடும் கண்ணாரக் கண்டு!

 

கண்டு - கற்கண்டு, காணுதல்

 

கருத்து:

 

கண்ணுக்கு அழகூட்டும் இமைகளை உடையவள். இசைப்பாட்டுத் தருகின்ற இனிமையைப் பெற்றவள். கண்டுகளிக்கும் கண்காட்சியைப்போல் வண்ணங்கள் கொண்ட கண்ணழகை உற்றவள். கண்ணமுதான அவள் கண்களை ஆண்டு அழகைக் கூட்டும் கண்ணாடியை அணிந்தவள். கண்ணனைக் கண்ணாரக் கண்டு பாடுகின்ற கண்களை உடையவள்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

02.03.2021

dimanche 21 février 2021

நாலடி ஆனந்தக் களிப்பு

 

நாலடி ஆனந்தக் களிப்பு

 

தந்தன தந்தன தானாo - oசிவன்

         தந்தது தந்தது தண்டமிழ்த் தேனாo

ஆடிய நெஞ்சத்தைக் கட்டிo - oஅதன்

         ஆணவப் போக்குறும் ஈனத்தை வெட்டிo

தேடிய பெண்ணெழில் குட்டிo - oவந்து

         தீட்டிய ஆசையைக் கூட்டியே கொட்டிo

நாடிய தீவினைச் சட்டிo - oஅதன்

         நாற்றத்தை நீக்கிட வைத்தேனே எட்டிo

பாடிய நற்பொருள் சுட்டிo - oஈசன்

         பார்வையே தீர்த்தது வாழ்வுற்ற வட்டிo!

                                                        [தந்தன]

 

பொய்யுறும் பாழகம் மாற்றிo - oமின்னும்

         பொன்னுறும் வண்ணத்தில் இன்வழி சாற்றிo

மெய்யுறும் வாழ்க்கையைப் போற்றிo - oஅன்பு

         மேலுறும் தொண்டினைச் சால்புற ஆற்றிo

நெய்யுறும் நல்லொளி ஏற்றிo - நன்றே

         நெஞ்சுறும் ஞானத்தை விஞ்சியே கூட்டிச்o

செய்யுறும் நற்பயன் சூட்டிo - oஈசன்

         சீருறும் என்னகம் பேரிசை மீட்டிo

                                                        [தந்தன]

 

எத்தனை எத்தனைத் துன்பம்o - oஎல்லாம்

         இன்றோடு நீங்கிட அன்பூறும் இன்பம்o

முத்தியை முத்தியைப் பாடும்o- oசிவ

         மூர்த்தியைப் போற்றியே கூத்தினை யாடும்o

சித்தமே முற்றுமே ஓங்கும்o -oமுன்னைச்

         செய்வினை நீங்கியே மெய்யருள் தாங்கும்o

மத்தெனச் சுற்றுமே வாழ்வுo - oசிவ

         மங்கலம் சூடினேன்! இங்கிலை தாழ்வுo

                                                        [தந்தன]

 பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.02.2021