காசி ஆண்டவா!
நான்மையின ஏக தாளம், மும்மை நடை
1
கங்கை யணிந்தவா!
மங்கை புனைந்தவா!
திங்கள் முகத்தவா!
எங்கள் அகத்தவா!
தங்கு நலத்தவா!
பொங்கு வளத்தவா!
சங்கு மனத்தவா!
கொங்கு மணத்தவா!
ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo
தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo
2.
ஏடும் புனைந்தவா - செவித்
தோடும் அணிந்தவா!
காடும் புகுந்தவா - தமிழ்க்
காதல் மிகுந்தவா!
ஆடு கலையவா - ஒளி
சூடு மலையவா!
பாடும் இறையவா - எம்
பாவங் குறைய..வா!
ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo
தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo
3
காசி அளித்தவா! - தமிழ்
பேசிக் களித்தவா!
நாசிக் காற்றவா - உனை
நாளும் போற்ற..வா!
பாச குணத்தவா - பூ
வாச இனத்தவா!
தேசு நிறத்தவா - எம்
மாசும் அகற்ற..வா!
ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo
தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo
4.
காக்கும் ஈசனே - புகழ்
பூக்கும் நேசனே!
யார்க்கும் தேவனே - வீரம்
சேர்க்கும் தேசனே!
ஆக்கும் இனியனே - துயர்
போக்கும் புனிதனே!
நோக்கும் அழகனே - வினை
நீக்கும் அமுதனே!
ஆண்டவா! காசி ஆண்டவா!o ooo
தாண்டவா! எம்மைத் தாங்க...வாo ooo
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.12.2022