பாவலர்மணி பட்டம் பெற்ற கவிப்பாவை அவர்களுக்கு வாழ்த்து
பெயர்ப் பத்து [எண் செய்யுள்]
1.
சொல்ல இனித்திடுமே! துாயமண நல்கிடுமே!
வல்ல திறனை வழங்கிடுமே! - நல்லதமிழ்
தீட்டும் கவிப்பாவை தேன்பெயா் வாழியவே!
ஊட்டும் அமுதை உயிர்க்கு!
2.
ஊட்டும் அமுதை உயிர்க்குத் தமிழழகைக்
காட்டும்! கருணைக் கலைசூட்டும்! - ஈட்டுபுகழ்
நங்கை கவிப்பாவை நற்பெயா் வாழியவே!
கங்கை யருளால் கமழ்ந்து!
3.
அருளால் கமழ்ந்திடுமே! ஆற்றல் தருமே!
பொருளால் இதயம் புகுமே! - திருமகளைப்
போற்றுங் கவிப்பாவை பூண்டபெயர் வாழியவே!
சாற்றுந் தமிழ்போல் தழைத்து!
4.
தழைக்கின்ற சோலை! தணிக்கின்ற தென்றல்!
உழைக்கின்ற ஆற்றல்! உயர்ந்தே - செழிக்கின்ற
சந்தக் கவிப்பாவை தண்பெயர் வாழியவே!
கந்தத் தமிழ்போல் கமழ்ந்து!
5.
கமழ்மணங் கொண்டும் கனிமன முற்றும்
இமைகணங் காக்கும் இயல்பும் - உமையருள்
போற்றும் கவிப்பாவை பூண்டபெயர் வாழியவே!
ஏற்றும் கொடியென ஈங்கு!
6.
ஈங்குத் தமிழோங்க ஈடில் இனமோங்கத்
தேங்கு வளமோங்கச் சீரோங்கத் - தாங்குதிறம்
ஓங்கக் கவிப்பாவை ஒண்பெயர் வாழியவே!
பூங்குவளை போலெழில் பூத்து!
7.
பூத்த இதயத்துள் மூத்த குறண்மணக்கும்!
காத்த நெறிமணக்கும்! கற்றவர் - ஏத்திடவே
வாழும் கவிப்பாவை வண்பெயர் வாழியவே!
யாழின் இனிமையை ஈந்து!
8.
ஈந்துவக்கும் நெஞ்சம்! இசையுவக்கும் நல்லறிவு!
ஆழ்ந்துவக்கும் ஆற்றல்! அறத்தமுதைத் - சேர்ந்துவக்கும்
வண்ணக் கவிப்பாவை வல்லபெயர் வாழியவே!
மண்ணின் மரபை வளர்த்து!
9.
மண்ணின் மரபை வளர்க்கின்ற நல்வாழ்வு!
பெண்ணின் சிறப்புப் பெருமாண்புத் - தண்மைசேர்
கன்னல் கவிப்பாவை காத்தபெயர் வாழியவே!
என்றும் இறையருள் ஏற்று!
10.
ஏற்ற பணிசிறக்கும்! இன்பத் தமிழ்சிறக்கும்!
சாற்றச் செயல்சிறக்கும்! சால்பளிக்கும்! - ஆற்றழகு
முற்றும் கவிப்பாவை மூத்தபெயர் வாழியவே!
சுற்றும் உலகமே சொல்லு!
[பாட்டுடைத் தலைமகனின் பெயரைப் புகழ்ந்துரைக்கும் பொருண்மையில் பாடப்பெற்றுப் பாடிய எண்ணளவால் பெயரேற்பது எண் செய்யுள் என்பர்] பாட்டரசர் கி. பாரதிதாசன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.12.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire