ஆதி தாளம் - மும்மை நடை
காதல் காவியமே - என்
கண்ணைக் கவ்வும் ஓவியமே!
மோதல் பார்வை வாட்டுதடி - மன
மோகத் தீயை மூட்டுதடி!
சொக்கும் விழியழகே - தேன்
சுரக்கும் துாய மொழியழகே!
கொக்கி போட்டே இழுக்குதடி - பல
கோடி ஏக்கம் கொழுக்குதடி!
பச்சை வயற்கிளியே! - நற்
பருவஞ் செழித்த பசுங்கொடியே!
உச்சந் தலைக்கே ஏற்றுதடி! - காம
உணர்வைப் பொங்கி ஊற்றுதடி!
மூக்கு நேரழகி - நெஞ்சை
முட்டித் தாக்கும் மாரழகி!
நாக்குச் சிவந்து மின்னுதடி - எனை
நார்போல் கிழித்துப் பின்னுதடி!
வைரக் காதழகு - உன்
வடிவுக் கிணையாய் ஏதழகு?
தைல நெடிபோல் ஏறுதடி - ஆசை
தமிழ்போல் நெஞ்சுள் ஊறுதடி!
வட்டப் பொட்டழகு - உடல்
மாய மிகுந்த கட்டழகு!
தொட்டுப் பார்க்கத் துடிக்குதடி - உனைத்
துாக்கி யணைக்கக் குதிக்குதடி!
சிவந்த வாயழகு - உன்
சிரிப்புக் கொஞ்சும் சேயழகு!
கவர்ந்து மெல்லக் கொல்லுதடி - உளம்
கட்டிக் கொள்ளத் துள்ளுதடி!
இஞ்சி இடுப்பழகி - நீர்
ஏற்றப் பாட்டின் தொடுப்பழகி!
மஞ்சள் விளைந்து மயக்குதடி - என்னுள்
மஞ்சம் விளைந்து இயக்குதடி!
சின்ன இடையழகு - எனைச்
சிதைக்கும் வாழைத் தொடையழகு!
என்ன என்ன வித்தையடி - வா..வா
இனிக்கும் பஞ்சு மெத்தையடி!
பவளக் காலழகு - எழில்
பாடும் பாக்கள் பாலழகு!
தவளை சத்தம் போடுதடி - உயிர்
தழுவிக் களிக்க ஆடுதடி!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
03.12.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire