விருத்த மேடை - 53
எண்சீர் விருத்தம் - 6
குறிலீற்றுமா
+ கூவிளம் + விளம் + மா
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா
அருவி
அள்ளி யள்ளியே மக்களுன் களித்த
ஆன்ற வள்ளலும் அழிந்தனர், அறிவேன்!
வள்ளல் வாரியே வழங்கிய பொருளும்
வற்றிப் போனதும் அழிந்ததும் அறிவேன்!
கொள்ளக் கொள்ளவும் குறைவுறா தளிக்கும்
குன்றம் சூழ்மலை அருவியே! உனது
வெள்ள நீரினை வழங்கியும் குறையா
வீறு பெற்றவர் உலகினில் இலையே!
[கவிஞரேறு வாணிதாசன், எழில் விருத்தம்]
வருவதை மகிழ்ந்துண் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
கூடி யுண்ணுமே கருநிறக் காக்கை!
கோத்த பூச்சரம் கூந்தலைச் சேரும்!
பாடி
ஓங்குமே பண்ணுடன் இசையும்!
படையின் ஒற்றுமை படைக்குமே வெற்றி!
தேடி யூட்டுமே கூடுடைக் குருவி!
திரண்ட தேனடை ஈக்களின் உழைப்பு!
நாடி மின்னுமே நற்புகழ் மாட்சி
நாளும் ஈந்தருள்! வருவதை மகிழ்ந்துண்!
[பாட்டரசர்]
ஆதி மாவொடும் கூவிளம் விளமா
ஆகு மாயரை யடியிருங் குழலே
என்னும் விருத்தப் பாவியல் விதிக்கேற்ப அமைந்த எண்சீர் விருத்தம். முதலில் குறிலீற்று மாச்சீரும், கூவிளமும் விளமும் மாச்சீரும் அரையடிக்கு வரும். மற்றை அரையடி இவ்வாறே அமையும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஏற்கும்.
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.11.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire