விருத்த மேடை - 52
எண்சீர் விருத்தம் - 5
[ஒவ்வோர் அரையடியிலும் முதல் மூன்று சீர்கள் வெண்டளையில் அமையும்]
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி!
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!
ஓவாத சத்தத் தொலியே போற்றி!
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி!
காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
[திருநாவுக்கரசர் தேவாரம் - 6794]
வருவதை மகிழ்ந்துண் [பாரதியின் புதிய ஆத்திசூடி
தன்னலம் வேண்டாமே! தம்பி என்றும்
தலைக்கனம் வேண்டாமே! தீதால் வந்த
பன்னலம் வேண்டாமே! வஞ்சம் பற்றிப்
பழியுற வேண்டாமே! காசால் உற்ற
இன்னலம் வேண்டாமே! ஆசை பொங்கி
இழிவுற வேண்டாமே! ஊரைச் சாய்த்த
பொன்னலம் வேண்டாமே! கூடி யுண்ணும்
பொதுநலம் பூத்துப் பொலிவாய் நன்றே!
[பாட்டரசர்]
முதல் மூன்று சீர்கள் வெண்டளை பெறும். ஓவ்வோர் அரையடியிலும் காய்ச்சீர்கள். மாச்சீர்கள், விளச்சீர்கள் கலந்து முதல் இரண்டு இடங்களில் வரும். மூன்றாம் சீர் மாவாகும். நான்காம் சீர் தேமாவாகும். இதுபோன்றே மற்ற அரையடி அமையும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஏற்கும்.
தேமாங்காயும்
புளிமாங்காயும் இவ்விருத்ததில் நல்லோசை தரும். விளங்காய் இன்றி வரும் விருத்தத்தில்
நேரசையில் தொடங்கினால் அரையடிக்கு 10 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் 11 எழுத்துக்களும்
வரும்.
ஆத்திசூடி
நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.11.2021
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
RépondreSupprimer