lundi 1 novembre 2021

வெண்பா மேடை - 215

 


வெண்பா மேடை - 215

 

குமரேச வெண்பா

 

வெல்லும் வழியிருக்க வேண்டாப் பிரிவுகளால்

கொல்லும் துயரேன் குமரேசா! - தொல்லுலகில்

சாதி இரண்டென்று சாற்றும் தமிழ்நெறியை

ஓதி யுரைப்பாய் உயர்வு!

 

இரண்டாம் அடியில் மூன்றாம் சீர் 'குமரேசா' என முன்னிலை விளி அமைய வேண்டும். முன்னோர் நுால்களில் உள்ள நன்னெறியை வலியுறுத்தி வெண்பாவின் கருப்பொருள் அமைய வேண்டும்.

 

இவ்வகையில் அமைந்த 'குமரேச வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

01.11.2021

1 commentaire:

  1. குமரேச வெண்பா
    கட்டி யணைக்க இரக்கமும் இன்முகமும்
    கொட்டிக் கிடக்கே குமரேசா- பட்டியெங்கும்
    நெஞ்சம் பதறும் செயல்கள் நலிவுற
    நெஞ்சில் இனிமையை நாடு !
    தேடும் பகையும் திரளும் பழிகளும்
    கேடுறக் காட்டும் குமரேசா - நீடுற
    ஆற்றும் பணிகள் அறமாய்த் திகழவே
    போற்றிடு பூசல் விடுத்து!
    செல்வத்துள் ஆயசெல்வம் ஏழைக் களித்திடும்
    கல்வியாம் என்பர் குமரேசா - வல்வினை
    போக்கி வழிசெல்லும் பாதை ஒளியேற்றி
    ஆக்கும் செயலை அளி!
    முற்றாய் வறுமை குறையாதோர் ஆட்சியில்
    குற்றம் பெருகும் குமரேசா- கற்றோர்
    வழங்கும் கடும்தண்டம் மட்டும் களத்தில்
    நிழலாய்த் தொடரும் நிலைத்து!
    மூத்த குடிமகன் முற்றாய் நலம்வாழ
    காத்தல்நல் ஆட்சி குமரேசா - ஆத்திரம்
    பொங்கும் அவச்செயல் கூடின் புவியிடையில்
    மங்கும் புகழும் மிகுத்து!
    அமுதை வழங்கும் அரியோன் மனத்தை
    குமுற விடலாமோ குமரேசா - திமிராய்
    உழவை அழித்து உறுபசி நீக்க
    விழைதலா வேந்தர்க் கழகு!
    அள்ளிக் கொடுத்து அடுக்காச் செயலினால்
    கிள்ளிப் பறிப்பர் குமரேசா - கள்ளால்
    உடல்நலம் கேடுறும்! ஊணுடல் வாட்டும்!
    திடமுடன் தீங்கைத் தவிர் !
    அஞ்சற்க காலனே ஆயினும் கண்கலங்கி
    துஞ்சற்க சோர்வாய் குமரேசா - எஞ்சிடும்
    நாட்கள் எதிர்கொள்! நிலவாது எந்நாளும்
    கூட்டுள் உலவும் உயிர்.
    --பாவலர் பயிலரங்க மாணவன்

    RépondreSupprimer