எண்சீர் விருத்தம் - 4
காய் + காய் + காய் + புளிமா
காய் + காய் + காய் + புளிமா
இரவு
வீட்டிடையில் ஒளியடங்கும்! மக்களொளி அடங்கும்!
விரிகடலில் பேரலைகள் கரைமோதி அடங்கும்!
கூட்டிடையில் இசையடங்கும்! வண்டடங்கும் மலரில்!
குயிலடங்கும் பழத்தோப்பில்! மயிலடங்கும் புதரில்!
காட்டிடையில் விலங்கடங்கும்! கலையடங்கும் பிணையில்!
காரெருமை கொட்டகையுள் கால்நீட்டி அடங்கும்!
மேட்டிடையில் வான்பார்க்கும் சிறுகுடிசை உழவர்
வெறுவயிற்றுப் பசியடங்க அடங்கும்கண் ணிமையே!
[கவிஞரேறு வாணிதாசன், எழில் விருத்தம்]
நீதி தவறேல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
வாய்மொழியைக் காத்திடுவாய்! வாழ்வளிக்கும் குறளின்
வளர்மொழியைக் கோத்திடுவாய்! உளமுற்ற உயிராய்த்
தாய்மொழியைப் போற்றிடுவாய்! தமிழ்த்தொண்டர் உரைத்த
தகைமொழியை ஏத்திடுவாய்! எந்நாளும் கசக்கும்
காய்மொழியை நீக்கிடுவாய்! கமழ்கின்ற கவிதைக்
கனிமொழியைத் தேக்கிடுவாய்! புகழ்மேவும் அறிஞர்
ஆய்மொழியைக் கற்றிடுவாய்! நீதி தவறா
அணிமொழியைப் பற்றிடுவாய்! அறமுணர்வாய் அகமே!
[பாட்டரசர்]
முதல் மூன்று சீர்கள் காயாகும். நான்காம் சீர் புளிமாமாகும்.
இதுபோன்றே மற்ற அரையடி அமையும். நான்கடிகளும்
ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.
ஆத்திசூடி
நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு
அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.11.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire