dimanche 31 janvier 2021

ஒயிற்கும்மி இயைபு

 

செந்தமிழ்ப் புதுவை

ஒயிற்கும்மி [சதுசிர இன ஏகதாளம்]

 

நேர்வழி பாதைகள் சீரெழில் கூட்டுமே!

நீதியை நெஞ்சின்மேல் நாட்டுமே - சன்மார்க்க

சோதியை ஏற்றிப்பா மீட்டுமே - நல்வாசத்

தார்மொழித் தண்டமிழ் பார்மொழி என்றேதான்

தாய்மொழி மேன்மையைத் தீட்டுமே!

 

பூமரச் சாலையைப் பூங்குயில் சோலையைப்

பொற்கவி பாரதி பாடினான் - வீரத்தை

நற்கவி யூடாகச் சூடினான் - தேங்கனி

மாமரத் தோப்பையும் வண்டமிழ்க் காட்டையும்

வாயாரப் போற்றியே ஆடினான் ooo

 

தண்கடல் உண்டங்கு! பண்கடல் உண்டங்கு!

தாய்மொழி தேனலை பாயுமே -  மாறாத

வாய்மொழி முன்துயர் மாயுமே -  பேரெழில்

கண்கடல் காரிகை காதலை எண்ணியே

கற்பனை வந்துளந் தோயுமே ooo

 

சங்கொலி ஆலைகள் தர்மத்தின் சாலைகள்

தாமுற்றுச் சீரோங்கும் எம்மூரே - புதுவை

தேமுற்றுப் பேரோங்கும் பாட்டாறே - அந்நாளில்

எங்கெங்கும் நாற்றாடும் என்னெஞ்சம் கூத்தாடும்

இக்கும்மி தாய்தந்த நற்பேறே ooo

 

பாரதி தாசனாய்ப் பாட்டுக்கோர் மன்னனாய்ப்

பற்றுடன் நான்வந்த பூமியே - எந்நாளும்

பொற்புடன் நான்தொழும் சாமியே - பாண்டவர் 

சாரதி கண்ணனைச் சங்கர தேவனைத்

தாள்பற்றிப் போற்றுமென் ஆவியே ooo

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.01.2021

 

Aucun commentaire:

Enregistrer un commentaire