dimanche 31 janvier 2021

காதல் கும்மி

 காதல் கும்மி

 

பார்த்திடும் பார்வையில் பித்திடு வாள் - அவள் 

பாவலன் உள்ளத்தில் மத்திடு வாள்

சேர்த்திடும் சொற்களில்  தேனிடு வாள் - வாழும்

சீரிடு வாள்! தங்கத் தேரிடு வாள்

 

பொன்னிதழ் புன்னகை பூத்தது மே - அடி

புத்தியும் சுற்றிடும் சத்திய மே

மின்னிதழ் தொட்டது தாக்கிடு மே - வண்ண

மீன்விழி சுட்டெனைக் கூத்திடு மே

 

பொங்கிடும் ஆசைகள் பாயுத டி - வாசப்

பூவிழி என்னெஞ்சை மேயுத டி

பங்கிடும் போலெனை ஆயுத டி -காதல்

பைத்தியம் கொண்டுயிர் சாயுதடி

 

கண்ணெழில் காட்டிய காரிகை யாள் - எனைக்

கட்டியே போட்டிங்குச் செல்வது மேன்

பண்ணெழில் மீட்டிய நேரிழை யாள் - ஒரு

பார்வையால் என்னெஞ்சைக் கொல்வது மேன்

 

கூந்தலைச் சீவியே பின்னிடு வாள் - தமிழ்

கூத்திடும் சீர்களில் மின்னுடு வாள்

சாந்தமே கொண்டவள்  என்னிட மே - தினம்

சண்டைகள் செய்திட எண்ணிடு வாள்

 

மென்னடை அன்னமும் வாடிடு மே - அவள்

மின்னிடை நற்கவி பாடிடு மே

பொன்னகை நாடியே கூடிடு மே - மதுப்

புன்னகை, என்துயர் ஓடிடு மே

 

வண்டுகள் மொய்திடும் சோலைய டி - அவள்

வார்த்தைகள்  கட்டிய மாலைய டி

தொண்டுகள் நெய்திடும் ஆலைய டி - அவள்

தொல்லைய டி!இணை யில்லைய டி

 

ஊற்றெனப் பொன்மகள் துள்ளிடு வாள் - குளிர்

காற்றெனத் தொட்டெனைக் கிள்ளிடு வாள்

நாற்றென நல்வளம் கூட்டிடு வாள் - கொடுங்

கூற்றென ஆசையை மூட்டிடு வாள்

 

பொன்மழை போல்வரும் சின்னவ ளே - வாசப்

பூமக ளே!தமிழ்ப் பாமக ளே..

இன்னடை போல்சுவைத் தென்னவ ளே - வண்ண

ஏந்திழை யே!என்னுள் நீந்தினை யே..

 

எத்தனை எத்தனை வண்ணங்க ளோ - சின்ன

ஏந்திழை ஏந்திய பேரழ கு..

இத்தரை மீதிணை இல்லைய டி - தமிழ்

மீட்டிசை பாடிடும் சீரழ கு..

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.01.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire