samedi 9 mai 2020

ஆனந்தக் களிப்பு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

கண்ணன் என் காதலன்!
[ஆனந்தக் களிப்பு]
  
நல்லிசை மீட்டிடும் கண்ணா! - காதல்
   நற்கவி தீட்டிடும் பொற்புடை மன்னா!
சொல்லிசை யூட்டிடும் பொன்னா! - நெஞ்சம்
   சொர்க்கமே ஈட்டிடும் உன்பெயர் சொன்னா!
          [நல்லிசை]
  
மாமலை யாண்டிடும் மாயா! - மார்பில்
   மங்கையைப் பூண்டிடும் பொங்கெழில் துாயா!
பூமலை காத்திடும் நேயா! - வண்ணப்
   புன்னகை பூத்திடும் இன்மது வாயா!
          [நல்லிசை]
  
விண்ணொளி சூட்டிடும் திருவே! - உன்றன்
   கண்ணொளி ஓட்டிடும் புண்ணெறி யிருளே!
மண்ணொளி நாட்டிடும் உருவே! - பாடும்
   பண்ணொலி காட்டிடும் பாவையென் உறவே!
          [நல்லிசை]
  
வேங்கடம் போற்றிடும் வீரா! - நெஞ்ச
   வேதனை மாற்றிடும் சாதனை மாறா!
தேங்கனி ஏற்றிடும் தீரா! - என்னைத்
   தேற்றிடும் சாற்றிடும் காத்திடும் சீரா!
          [நல்லிசை]
  
மின்மணி மாலைகள் கொண்டாய்! - வாச
   வெண்பனிச் சோலைகள் விண்மணி கண்டாய்!
நன்மணிச் சேலைகள் தந்தாய்! - இந்தப்
   பெண்மணி வேலைகள் இன்புற வந்தாய்!
          [நல்லிசை]

பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
09.05.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire