இலாவணி
உழவனும்
உழத்தியும் பாடும் வண்ணம் இந்த இலாவணிக் கண்ணிகள்
அமைந்துள்ளன. ஒவ்வொரு கண்ணியிலும் முதலடி உழவனின்
கேள்வியாக அமைகிறது. உழத்தியின் பதிலாக இரண்டாமடி தொடர்கிறது.
1.
1.
சோலையெழில்
பூத்தொளிரும் சேலையெழில் கொண்டவளே
துாயமொழி
ஒன்றெடுத்துச் சொல்லு சொல்லு...!
காலைமுதல்
மாலைவரை காளையுனைக் காணுகிறேன்
கட்டுடனே
கையடக்கி நில்லு நில்லு...!
2.
ஏர்நடத்தும்
நீர்வயலில் போர்நடத்தும் பூங்குயிலே
ஈட்டுகிறாய்
எப்பொழுதும் வெற்றி வெற்றி...!
வேர்பழுத்த
வாசமெனச் சீர்பழுத்த வாயழகா
வீசுவதேன்
பொய்யுரைகள் சுற்றிச் சுற்றி...!
3.
சின்னஇடை
பின்னவர, அன்னனடை மின்னிவர,
சில்லெனவே
ஏறுதடி போதை போதை...!
என்னவொரு
பொய்நடிப்பு! என்னதொட உன்னுடிப்பு!
இவ்வகையில்
நீயுமொரு மேதை மேதை!
4.
நாற்றுநடும்
நல்லவளே! ஏற்றுமெனைக் கூத்துமிட
நல்லதொரு
சொல்லெடுத்துப் பாடு பாடு...!
ஆற்றுநடை
ஆணழகா! சாற்றுமொழி ஏறலையோ?
அத்தைவரும்
நேரமடா ஓடு ஓடு...!
5.
கட்டழகு
காரிகையே! தொட்டழகு நேயமுறக்
கண்ணடித்துப்
பூங்கணையை ஏவு ஏவு...!
மொட்டழகு
சீர்படைத்துப் பட்டழகு காட்டுவதேன்
மோகநிலை
விட்டிடமே தாவு தாவு...!
6.
ஏற்றமிடும்
ஏந்திழையே! காற்றுமிடும் வேதனையை
ஆற்றிடவே
அன்புமொழி பேசு பேசு...!
ஆற்றலுடன்
ஆசைகளைச் சாற்றுகின்ற பைத்தியமே!
நாற்றெடுத்து
மூலையிலே வீசு வீசு...!
7.
கள்ளளிக்கும்
கண்ணழகி! முள்ளளிக்கும் செயலகற்றிக்
காதலுறம்
நல்லுறவைக் காட்டு காட்டு...!
நெல்லடிக்கும்
நேரமிது மல்லடிக்கும் வீணகற்றி
நெஞ்சொழுகும்
ஆசைகளை ஓட்டு ஓட்டு...!
8.
ஆலமரத்
துாஞ்சலிலே கோலமுடன் ஆடிடவே
அத்தமகச்
சித்திரமே வாடி வாடி...!
பாலமுத
உன்மொழியைக் கேளவொரு நாழியிலை
பார்..எனக்கு
வேலைபல கோடி கோடி...!
9.
வேர்பிடித்து ஓங்குதடி மார்பிடித்த உன்னினைவு
வேண்டுவரம்
தந்திடுவாய் கண்ணே கண்ணே...!
கார்பிடித்து
வான்பொழியும்! நார்பிடித்துத் தேர்நகரும்!
கால்பிடித்துப்
பேசுவதோ மண்ணே மண்ணே...!
10.
கெண்டைவிழி
துள்ளுதடி! தண்டையொலி கிள்ளுதடி!
கேணியிடம்
வந்திடுவாய் தேனே தேனே...!
மண்டைவெறி
உற்றதுமேன் அண்டைநிலை அறியாமல்
மாமா.நீ
ஏங்குவது வீணே வீணே...!
பாட்டரசர்
கி. பாரதிதாசன்,
கம்பன்
கழகம், பிரான்சு,
தொல்காப்பியர்
கழகம், பிரான்சு.
12.05.2020.
//என்னதொட உன்னுடிப்பு!//
RépondreSupprimerபொருள் புரியவில்லை ஐயா,... ஏதும் சொற்குற்றமோ ? அல்லாவிடில் தயைகூர்ந்து விளக்கின் மகிழ்வேன்.