சிந்துப்பா மேடை - 7
நாலடி நொண்டிச் சிந்து
பெரும்பாலும் நொண்டிச்சிந்து ஈரடிக் கண்ணிகளாக வரும். சிறுபான்மை நாலடிக் கண்ணிகளும், அருகி ஓரடிக் கண்ணிகளும் வருதல் உண்டு.
மண்ணுலகை வாட்டுதுயர் ஏன்... - ..?கண்ணா!
வன்கிருமித் துன்பொழிய இன்றெழுவா யே...!
விண்ணுலகைக் காக்குமரு ளே... -..இங்கு
வீழ்நிலையை மாற்றிமனம் ஆழ்ந்திடுவா யே...!
புண்ணுலகைப் பொய்யுலகைத் தான்... -..போக்கிப்
பொன்னுலகை நெஞ்சமுற நன்கருள்வா யே...!
தண்ணுலகைத் தாங்குமெழி லே... -..!மன்னா
தாக்கிவரும் நோயழியக் காப்பருள்வா யே!
[பாட்டரசர்]
நொண்டிச் சிந்துவின் இலக்கணத்தைச் சிந்துப்பா மேடை - 6 ஆம் பகுதியில் விரிவாகக் கண்டோம். இங்குச் சுருக்கமாகக் காண்போம்.
ஓரடிக்கு எட்டுச் சீர்கள் வரவேண்டும். [எண்சீர் அடிகள் நான்கு ஒரெதுகையில் அமைந்தால் நாலடி நெண்டிச்சிந்தாகும்]
மேலுள்ள கண்ணியில் 'மண்ணுலகை' என்பது முதல் 'இன்றெழுவாயே' என்பது வரையில் ஓரடி.
ஒவ்வோர் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும். [ம-வ] [வி-வீ] [பு-பொ] [த-தா]
அடியின் பிற்பாதிகளில் பொழிப்பெதுகை அமைவது இதன் சிறப்பியல்பு [வன்-இன்] [வீழ்-ஆழ்] [பொன்-நன்] [தாக்-காப்]
அடியின் ஒவ்வொரு சீரில் நான்கு அசை இருக்கும். [இப்பாடல் நான்மை நடைக்குரியது]
மூன்றாம் சீரிலும், எட்டாம் சீரிலும் ஒரே உயிர் இருக்கும், அவ்வுயிர் அளபெடுத்து நீண்டு ஒலிக்கும். [அளபெடுக்கும் ஒவ்வோர் எழுத்தும் ஓரசையாகும்]
ஒவ்வோர் அடியிலும் நான்காம் சீராக வரும் தனிச்சொல் மூவசைச் சீராக வரும். சிறுபான்மை நாலசையும், ஈரசையும், அருகி ஓரசையும் பெறும். இவ்விடங்களில், மூன்றாம் சீரின் ஈற்றசை நீண்டு நான்காம் சீரும் நாலசையைப் பெற்றொலிக்கும்.
இயற்பாவின் அசைகள் வேறு. இசைப்பாவின் அசைகள் வேறு. இயற்பாவில் நேரசை, நிரையசை என்ற பாகுபாடுகள் உள்ளன. ஆனால் அந்தப் பாகுபாடுகள் சிந்துப்பாவில் இல்லை. சிந்துப்பாவில் குறிலசை, நெடிலசை என்ற இரண்டு பாகுபாடுகள் உள்ளன.
குறிலசை
தனி உயிர்க் குறில் [அ]
உயிர்மெய் குறில் [க]
நெடிலசை
உயிர்நெடில் [ஆ]
உயிர்மெய் நெடில் [கா]
உயிர்க்குறில் ஒற்று [அல்]
உயிர்மெய்க்குறில் ஒற்று [கல்]
உயிர்நெடில் ஒற்று [ஆல்]
உயிர்மெய் நெடில் ஒற்று [கால்]
மேல்லுள்ள பாடலில் ஒவ்வொரு சீரிலும் இசைப்பா அசைகள் நான்கு வந்துள்ளன..
[மண்/ணு/ல/கை] [வாட்/டு/து/யர்] [ஏன்/./././ ]- [././கண்/ணா/]
[வன்/கி/ரு/மித்/ [துன்/பொ/ழி/ய] [இன்/றெ/ழு/வா/] [யே/./././]
சிலர் முகநுாலில் நொண்டிச்சிந்துவின் சீர்கள் ஒற்று நீக்கி மூன்றெழுத்து வரும் எனப் பிழையாகப் பாடம் உரைத்தனர். இசைப்பாவில் ஒற்றுகள் அளபெடுக்கும் என்பதால் ஒற்று நீக்கி என்று சொல்வது பிழையாகும். நொண்டிச்சிந்துவின் சீர்கள் நான்கு அசைகளைப் பெற்று வரும்.
நெஞ்ஞ்சுபெ றுக்குதில்லை யேஎஎஎ எஎ-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்ல்ல்ல்!
அஞ்ஞ்சியஞ் சிஇச்சாஅ வாஅஅஅ அஅர் - இவ[ர்]
அஞ்ஞசாத பொருளில்லை அவனியி லேஎஎஎ!
[மகாகவி பாரதியார்]
மகாகவியின் பாடலில் பல சீா்களில் ஒற்றுகள் அளபெடுத்து நாலசைகளைச் சீர்கள் பெற்றுள்ளன.
பாடும்போது இசை நீளும் இடங்களைப் புள்ளியிட்டுக் காட்டப்படும். எழுதும்போது இப்புள்ளிகள் இடுவதில்லை. கற்போர் உணரும் பொருட்டு மேலுள்ள பாடலில் அசை நீளும் இடங்களில் புள்ளியிட்டுள்ளேன்.
விரும்பிய பொருளில் ' நாலடி நொண்டிச் சிந்து' ஒரு கண்ணி பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
01.05.2020.
அருமை ஐயா...
RépondreSupprimer