dimanche 3 mai 2020

கேட்டலும் கிளத்தலும்


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கேட்டலும் கிளத்தலும்
  
மொழி ஈற்று மகரத்தின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்?
  
பாவலர் இளமதி, சர்மனி.
  
-------------------------------------------------------------------------------------------
  
மகர வீற்றுப்பெயர் முன் வல்லினம் வர இருவழியும் ஈறுகெட்டு வலி மிகுத்து வரும்.
  
மரம் + கோடு = மரக்கோடு
மரம் + செதில் = மரச்செதிள்
மரம் + தோல் = மரத்தோல்
மரம் + பூ = மரப்பூ
  
மரம் + அடி = மரவடி ['வ்' உடன்படுமெய்]
மரம் + வேர் = மரவேர்
மரம் + யாழ் = மரயாழ்
  
வேற்றுமைக்கண் ஈறுகெட்டு வல்லினம் மிக்கு முடிந்தன. உயிரும், இடையினமும் வர ஈறுகெட்டுப் புணர்ந்தன.
  
வட்டம் + கல் = வட்டக்கல்
வட்டம் + சுனை = வட்டச்சுனை
வட்டம் + தாழி = வட்டத்தாழி
வட்டம் + பாறை = வட்டப்பாறை
  
கமலம் + கண் = கமலக்கண்
  
பவளம் + இதழ் = பவளவிதழ்
பவளம் + வாய் = பவளவாய்
வட்டம் + ஆழி = வட்டவாழி [வ் உடன்படு மெய்]
வட்டம் + வடிவம் = வட்டவடிவம்
  
அல்வழிக்கண் இருபெயரொட்டுப் பண்புத்தொகையிலும் உவமைத் தொகையிலும் ஈறுகெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன. உயிரும் இடையினமும் வர ஈறுகெட்டுப் புணர்ந்தன.
  
மகர வீற்றுப்பெயர் முன் இருவழியும் வல்லினம் வர, வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற இன மெல்லெழுத்துத் திரிந்து வரும் இடங்களும் உள்ளன.
  
வேற்றுமை
  
இலவம் + கோடு = இலவங்கோடு
இலவம் + செதிள் = இலவஞ்செதில்
இலவம் + தோல் = இலவந்தோல்
  
அல்வழி
[பண்புத்தெகை, உவமைத்தொகை நீங்கி அல்வழிக்கண் இனமெல்லெழுத்துத் திரிந்து வரும்]
  
மரம் + குறிது = மரங்குறிது
மரம் + சிறிது = மரஞ்சிறிது
மரம் + தீது = மரந்தீது
  
நாம் + கடியம் = நாங்கடியம்
நிலம் + தீ = நிலந்தீ
உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு
உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம்
பூதனும் + தேவனும் = பூதனுந்தேவனும்
  
இருவழியும் மகர ஈற்றுப் பெயர் முன் பகரம் வரக் கேடும் திரிபும் இன்றி இயல்புமாகும்
  
இளவம் + பூ = இளவம் பூ [வேற்றுமை]
மரம் + பெரிது = மரம் பெரிது [அல்வழி]
  
அல்வழியில் உயிரும், இடையினமும் வர இயல்பாய் புணரும் இடங்களும் உள்ளன.
  
மரம் + அழகியது = மரமழகியது
வடம் + அற்றது = வடமற்றது
மரம் + வலிது = மரம் வலிது
மரம் + யாது = மரம் யாது
வெல்லும் + வில்லி = வெல்லும் வில்லி
ஓடும் + யானை = ஓடும் யானை
அருளும் + யோகி = அருளும் யோகி
    
மேற்றுமைக்கண் மகர வீற்றுப்பெயர் முன் வல்லினம் வர, ஈறுகெட்டு உழழ்ந்துவரும் இடங்களும் சில உள்ளன.
  
குளம் + கரை = குளக்கரை - குளங்கரை
குளம் + சேறு = குளச்சேறு - குளஞ்சேறு
குளம் + தாது = குளத்தாது - குளந்தாது
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.05.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire