vendredi 4 mai 2018

வெள்ளொத்தாழிசை


வெண்பா மேடை - 65
  
இன்னிசை வெள்ளொத்தாழிசை
  
சிந்தியல் வெண்பாவின் இனமாக வெள்ளொத்தாழிசை அமைகின்றது, மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள்மேல் அடுக்கிவருதல் வெள்ளொத்தாழிசை யாகும். இப்பாடல் இன்னிசையாலும் ஒரு விகற்பத்தாலும் பாடப்பட்டுள்ளது. இன்னிசையில்தான் இப்பாடல் சிறப்பாக அமையும். இசைப்பாடலின் எடுப்பு, தொடுப்பு ஆகிய அடிகளை மீண்டும் மீண்டும் பல முறை பாடுதல்போன்று, வெள்ளொத்தாழிசையிலும் முதல் சிந்தியல் வெண்பாவில் அமைந்த சொற்கள் அடுத்து வரும் இரண்டு சிந்தியல் வெண்பாக்களிலும் வந்து அமைந்தால் இசையோசை சிறக்கும். இப்பாடலை ஒரு விகற்பத்தில் பாடுதலே மரபாகும். ஒரு விகற்பமே ஓசை இனிமையும், புலமை வளமையும் ஊட்டும்.
  
அம்பேருண் கண்ணார் கழிந்த மடநெஞ்சே!
கொம்பே றுடையான் கழிலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே இறந்து விடல்.
  
வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே!
நீணாகம் பூண்டான் கழிலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே இறந்து விடல்.
  
கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே!
ஆளாக ஆண்டான் கழிலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா இருந்து விடல்.
  
[சிதம்பரச் செய்யுட் கோவை]
  
என இவை வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை ஏற்காமல் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வெள்ளொத்தாழிசை யாகும்.
  
தாய்மொழி
  
அன்பை அளித்திடுமே! பண்பைக் கொடுத்திடுமே!
இன்பை விளைத்திடுமே! ஈன்றவுன் தாய்மொழியே!
பொன்னை நிகரெனப் போற்று!
  
ஆக்கம் அளித்திடுமே! ஆற்றல் கொடுத்திடுமே!
ஊக்கம் விளைத்திடுமே! உன்னரும் தாய்மொழியே!
பூக்கும் வனமெனப் போற்று!
  
நன்மை அளித்திடுமே! நற்றேன் கொடுத்திடுமே!
வன்மை விளைத்திடுமே! வல்லவுன் தாய்மொழியே!
புன்மை அகற்றுமெனப் போற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மின்னும் விழியழகில் விந்தைக் கவிதைகளைப்
பின்னும் இளங்கொடியே! பித்தேறி வாடுகிறேன்!
மன்னும் கனவே மலர்ந்து!
  
மீட்டும் மொழியழகில் விந்தைக் கவிதைகளை
ஊட்டும் உயரழகே! பித்தேறி வாடுகிறேன்!
வாட்டும் கனவே மலர்ந்து!
  
வீசும் குளிர்காற்றாய் விந்தைக் கவிதைகளைப்
பேசும் கலைமகளே! பித்தேறி வாடுகிறேன்!
வாசக் கனவே மலர்ந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
நம் நாட்டின் இன்றைய நிலையை உரைக்கும் வண்ணம் இன்னிசை வெள்ளொத்தாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.05.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire