வெண்பா மேடை - 69
நிரையொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
நேரிசை வெண்டாழிசை
விழியென மொழியினை விரிவுரை எழுதுவாய்!
பொழிலென மொழியினைப் புகழுவாய்! - அழிவிலா
அழகெனத் தமிழினை அணி!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இன்னிசை வெண்டாழிசை
தமிழ்மொழி இனிதெனத் தரையெலாம் மொழிவதை
இமியுமே நினைத்திடா திருப்பவர் முகமதில்
உமிழ்வதும் உயர்வென உணர்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
ஆசிரிய உரிச்சீரான கருவிளம் மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நிரையொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் பெறும். வெண்பாவின் ஈறுபோல் மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் முடியும்..
மூன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
பண்பின் உயர்வை வலியுறுத்தி நிரையொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.05.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire