வெண்பா மேடை - 68
நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
நேரிசை வெண்டாழிசை
குன்றின் வேலன் கோல யாப்பை
ஒன்றிக் கற்க ஊட்டி - நின்றான்
நன்றி சொன்னேன் நான்!
இன்னிசை வெண்டாழிசை
உள்ளம் தன்னில் உண்மை ஓங்க
வெள்ளம் போன்று மேவும் நன்மை!
பள்ளம் நீங்கும் பார்!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
ஆசிரிய உரிச்சீரான தேமா மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நேரொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் அடியாகும். வெண்பாவின் ஈறுபோல் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
அன்பின் அமுதை வலியுறுத்தி நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை, நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.05.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire