vendredi 4 mai 2018

வெள்ளொத்தாழிசை 


வெண்பா மேடை - 64
  
வெள்ளொத்தாழிசை 
  
சிந்தியல் வெண்பாவின் இனமாக வெள்ளொத்தாழிசை அமைகின்றது, மூன்று சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள்மேல் அடுக்கிவருதல் வெள்ளொத்தாழிசை யாகும். இப்பாடல் இன்னிசையாலும் ஒரு விகற்பத்தாலும் பாடப்பட்டுள்ளது. இன்று வெள்ளொத்தாழிசையைப் நேரிசையிலும் பாடலாம் என்றாலும் இன்னிசையில்தான் இப்பாடல் சிறப்பாக அமையும். இசைப்பாடல்களில் எடுப்பு, தொடுப்பு, ஆகிய அடிகளை மீண்டும் மீண்டும் பல முறை பாடுதல்போன்று, வெள்ளொத்தாழிசையிலும் முதல் சிந்தியல் வெண்பாவில் அமைந்த சொற்கள் அடுத்து வரும் இரண்டு சிந்தியல் வெண்பாக்களிலும் வந்து அமைந்தால் இசையோசை சிறக்கும். இரு விகற்பத்திலும் இப்பாடலைப் பாடலாம் என்றாலும் ஒரு விகற்பத்தில் அமைவதே ஓசை இனிமையும், புலமை வளமையும் ஊட்டும்.
  
1.
ஏரினைப் போற்றுதும்! ஏரினைப் போற்றுதும்!
பாருல கத்தோர் பசிப்பிணிக் கோர்மருந்தாய்
ஆருயி ரோம்புத லான்.
  
2.
கைத்தொழில் போற்றுதும்! கைத்தொழில் போற்றுதும்!
ஒத்துல கத்தே உயர்வாழ்வுக் கானபொருள்
அத்தனையுந் தான்தருத லான்.
  
3.
வாணிகம் போற்றுதும் வாணிகம் போற்றுதும்!
ஏணிபோல் எப்பொருளும் எங்கும்இல் லென்னாமே
ஆணிபோ லேதருத லான்.
  
புலவர் குழந்தை [தொடையதிகாரம் பக்கம் - 433]
  
ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, முதல் அடியிலும் ஈற்றடியிலும் சொற்கள் ஒன்றி வந்துள்ளன. [போற்றுதும்] [தருதலான்]
  
1.
அன்னாய் அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்.
  
2.
ஏடி! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து
நேடான் துறந்து விடல்.
  
3.
பாவாய்! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து
காவான் துறந்து விடல்
  
ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, மூன்று அடிகளிலும் பல சொற்கள் ஒன்றி வந்துள்ளன. [அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி] [நலங்கவர்ந்து] [துறந்து விடல்]
  
இலக்கண நுாற்பா
  
மூன்றாடியாய் வெள்ளை போன்று இறும்
[யாப்பருங்கலக்கரிகை - 27]
  
அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை யாகும்
[யாப்பருங்கல விருத்தி - 66]
  
அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை
[இலக்கண விளக்கம் - 731]
  
ஈரடி முக்கால் இசையினும் தளையினும்
வேறுபட் டியல்வான வெண்டா ழிசையே
[காக்கை பாடினியார்]
  
அடிமூன் றாகி வெண்பாப் போல்
இறுவன மூன்றே வெள்ளொத் தாழிசை
[சிறுகாக்கை பாடினியார்]
  
அடிமூன்றாகி வெண்பாப் போல்
இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை
[அவிநயம்]
  
ஈரடி முக்கால் இசைகொள நடந்து
மூன்றுடன் அடுக்கித் தோன்றின்ஒத் தாழிசை
[மயேச்சுரம்]
  
முப்பாதம் தழுவிவெள்ளை
போன்றிறும் வெண்டாழிசை
[வீரசோழியம் - 121]
  
வெண்டா ழிசையெனில் வெண்சிந் தியல்போல்
அண்டாப் பிறதளை அணைந்து வருமே
[தொன்னுால் விளக்கம் - 243]
  
நேரிசை வெள்ளொத்தாழிசை
  
1.
என்னவளே!
  
பொன்னை நிகர்த்தவளே! பொங்குதமிழ் ஊட்டுகின்ற
அன்னை நிகர்த்தவளே! ஆரமுதே! - என்றென்றும்
உன்னைத் தொடரும் உயிர்!
  
தென்னை தரும்நீரே! தேனே! திருமகளே!
என்னை மயக்கும் இளங்கொடியே! - தென்னவளே!
உன்னைத் தொடரும் உயிர்!
  
முன்னைப் பயனென்பேன்! முற்றல் கனியென்பேன்!
மின்னை விளைக்கும் விழியென்பேன்! - அன்றிலென
உன்னைத் தொடரும் உயிர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, ஈற்றடி மூன்று பாடல்களிலும் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை]
  
2.
கடல்!
  
பற்றுடன் பாக்கள் படைக்கின்ற பாவலர்க்கு
நற்றுணை யாக நலங்கூட்டும்! - பொற்புடன்
கற்பனை ஊட்டும் கடல்!
  
மோதல் அலையாக மோக மனம்பாயும்!
ஊதல் இசையாக உள்ளினிக்கும்! - மாதவத்தால்
காதல் கமழும் கடல்!
  
மண்ணீர் உறைவீடு! மக்கள் மகிழ்வுறவே
விண்ணீர் உறும்பீடு! வேதனையால் - பெண்ணினத்தின்
கண்ணீர்த் தொகுப்போ கடல்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, பாடலின் ஈற்றுச் சீர் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை]
  
3.
என் தோழா!
  
பெற்ற விடுதலையால் உற்ற பயனென்ன?
முற்றித் துயரம்நம் மூச்சழுத்தும்! - நற்றோழா!
பற்றி எரிப்போம் பகை!
  
பற்றுடன் நன்குழைத்தும் பாரில் பயனென்ன?
பொற்புடன் வாழ்வு பொலியாதா? - நற்றோழா!
புற்றுறும் ஆட்சியைப் போக்கு!
  
கற்ற கலையினால் கண்ட பயனென்ன?
வற்றி வதங்கும் வகைமாற்ற - நற்றோழா!
வெற்றிப் பறைகளை மீட்டு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்து, முதலடியின் ஈற்றுச் சீரும் தனிச்சொல்லும் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை]
  
4.
திருமலையைச் சேர்வாய்!
  
திருமலைச் செல்வனைச் சேர்வாய் மனமே!
அருணிலை வாழ்வை அடைவாய்! - பெருமை
தருநிலை காண்பாய் தழைத்து!
  
விந்தை மிகுவெற்பை மேவு..என் உள்ளமே!
சிந்தை தெளிந்து சிறப்புறவே! - எந்நாளும்
தந்தை திருவடி தாங்கு!
  
வேங்கட வேந்தன் வினைதீர்ப்பான்! நெஞ்சமே
ஆங்கு..நீ சென்றே அமுதுண்பாய்! - தேங்குநலம்
ஓங்கிடும் என்றும் ஒளிர்ந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
[சொற்கள் ஒன்றி வராமல் கருத்தால் ஒன்றி வந்த வெள்ளொத்தாழிசை] [சொற்களும் ஒன்றிடப் பாடுதலே சிறப்புடைய வெள்ளொத்தாழிசையாகும்]
  
தாய்மொழிக் கல்வியின் சிறப்பை உரைக்கின்ற வண்ணம் நேரிசை வெள்ளொத்தாழிசை பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.05.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire