dimanche 19 février 2017

விருத்த மேடை - 2



அறுசீர் விருத்தம்  - 2
[மா + மா + காய் அரையடிக்கு]

வயலில் வளரும் களைகளினால்
   வளமே குன்றிப் பயிர்வாடும்!
புயலில் சிக்கும் கரையூர்கள்
   பொலிவை இழந்து துயர்மேவும்!
அயலில் உள்ள பிறமொழியை
   அன்னைத் தமிழில் கலப்பதுவோ?
உயிரில் கொடிய நஞ்சியினை
   ஊட்டும் செயலாம் உணருகவே!  
  
இப்பாடல் "மா + மா + காய் + மா + மா + காய்" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
    
இலக்கணம் நுாற்பா
  
இருமா காய்ச்சீர் அரையடிக்காய்  
இவையே மற்ற அரையடிக்கும்  
      - விருத்தப் பாவியல் [2]

  
கையூட்டைக் குறித்து [ஊழல்] இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.02.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire