கண்ணன் என் காதலன்!
குன்றேந்திக்
கன்றினைக் காத்தவன்!
துண்டேந்திக்
கன்னியைக் காக்கிறான்!
ஆநிரையை
அருளேந்திக் காத்தவன்!
ஆயிழையை
அன்பேந்திக் காக்கிறான்!
ஆடையை
எடுப்பதும் - பின்
கொடுப்பதும் - அவனின்
அலகிலா விளையாட்டும்!
கருமேகக் கண்ணன்!
வருமேகம் காணாமல்
உறவாடும் காட்சியினை
உடையால் மறைக்கின்றான்!
திருவாயில்
உலகுடையான்!
அவள் வாயில்
உளமுடையான்!
கண்ணழகில்
மறந்தாள் பாதை!
மயங்கும் கோதை!
பெண்ணழகில்
மறந்தான் கீதை!
மாமலை மேதை!
நீல வண்ணன்
நீந்துகிறான்
காதலால்!
கோல விழிகளின்
மோதலால்!
மொழியின்றி
விழிகள் பேசும்!
முகுந்தன் முகத்தழகு
மோகம் வீசும்!
உடைகொண்டு மறைத்து - தேன்
அடையுண்ண எண்ணுகிறான்!
இடையொன்று இல்லாமல்
இவள் வளைந்து மின்னுகிறாள்!
புல்லாங்குழலாகப்
பொன்மகளை வாசிக்கக்
கண்ணன்
திட்டமிடுகின்றான்!
கள்ளன்
கொட்டமிடுன்றான்!
காதல்
வட்டமிடுகின்றான்!
உடையால்
பட்டம் விடுகின்றான்!
உடை,
குடையானது! - காதல்
கொடையானது!
எடை,
குறைவானது! - இன்பம்
நிறைவானது!
இடை,
கொடியானது! - சொர்க்கப்
படியானது!
நடை,
நடமாடுது! - தேன்
குடம்சூடுது!
தடை,
உடைந்தோடுது! - ஆசை
உறைந்தோங்குது!
தீராத விளையாட்டுப்
பிள்ளை! - அவன்
தீண்டாமல் அகன்றிடுமோ
தொல்லை!
ஆறாத ஆசைக்கேது
எல்லை? - அவன்
அழகுருவம் பூத்தாடும்
கொல்லை!
மாயக் கண்ணன்!
நேயக் கண்ணன்!
கொஞ்சும் காட்சி! - காதல்
விஞ்சும் மாட்சி!
படத்தைக் கண்டு
படைத்த சொற்கள்!
படிப்போர் மனத்தில்
படைக்கும் நற்..கள்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
18.02.2017
படம் கண்டு, பா புனைந்து
RépondreSupprimerகண்ணன் கதை பாடி
எம்மைச் சுவைக்க வைத்த
பாட்டரசர் வாழ்க!