vendredi 23 décembre 2016

கேள்வியும் பதிலும்

கேட்டலும் கிளர்த்தலும்

வணக்கம் ஐயா!

அன்பு. பண்பு எதுகையாக வருமா? நலம் வளம் எதுகையாக வருமா? தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை, இவைகளுக்கு இலக்கியச் சான்றுகளுடன் விளக்கம் தர வேண்டுகிறேன்.

எழில் ஓவியா. சேலம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
  
தலையாகு எதுகை
  
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. [ திருக்குறள் - 5]
  
இருள்சேர், பொருள்சேர் முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தன
  
இடையாகு எதுகை
  
அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு
  
அகர, பகவன் இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வருவது
  
கடையாகு எதுகை
  
இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல் வருக்கும், நெடில், இனம், ஆகியவற்றுள் அமைவதாகும்.
  
1. வருக்க எதுகை
  
அறத்தாறு இதுவென வேண்டா,சிவிகை
பொறுத்தானோ[டு] ஊர்ந்தான் இடை [ திருக்குறள் - 37]
  
ற, றா, றி, றீ, று, றுா, றெ, றே. றொ, றோ, றௌ என்னும் இவை றகர வருக்க எழுத்துகள். இவ்வெழுத்துகள் ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [ 1. ககர வருக்கம் 2. ஙகர வருக்கம், சகர வருக்கம்,...... 18 னகர வருக்கம்]
  
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகக்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! [திருப்பாவை - 27]
  
டகர வருக்க எழுத்துகள் எதுகைகயாக வந்துள்ளன.
  
2. நெடில் எதுகை
  
ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் - ஒருசாரார்
  
நெடில் எழுத்துகள் ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [இதுபோல் குறில் எழுத்துகளும் ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரலாம்.]
  
3. உயிர் எதுகை
  
[ 1.அகர எதுகை, 2. ஆகார எதுகை, 3. இகர எதுகை, ஈகார எதுகை.... 12 ஓளகார எதுகை]
  
ஆகார உயிர் எதுகை
  
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்!
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்!
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்!
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! [உலகநீதி - 1]
  
ஓதாமல் மாதாவை, போகாத, வாகாரும் - 'தா' எழுத்துக்கு 'கா' எழுத்து எதுகையாக வந்தது.
  
இகர உயிர் எதுகை
  
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு [ திருக்குறள் - 20]
  
'ரி' எழுத்துக்கு 'னி' எழுத்து எதுகையாக வந்தது.
  
மாறியது செஞ்சம்
மாற்றிது யாரோ/
காரிகையின் உள்ளம்
காண வருவாரோ?
  
'றி' எழுத்துக்கு 'ரி' எழுத்து எதுகையாக வந்தது.
  
ஐகார எதுகை
  
சுவையொளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு [திருக்குறள் - 27]
  
'வை' எழுத்துக்குக் 'கை' எழுத்து எதுகையாக வந்தது.
  
இப்படி பன்னிரு உயிர் எழுத்துகளைக் கண்டுகொள்க.
  
4. வல்லின எதுகை
  
தக்கார் தகவிலா் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் [ திருக்குறள் - 114]
  
வல்லின மெய்யெழுத்துகள்ஆறும் [க்.ச்.ட்.த்.ப்.ற்] ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [வல்லின மெய்யெழுத்துக்கு வல்லின உயிர்மெய் எழுத்து எதுகையாக வராது. க், க எதுகையன்று]
  
5. மெல்லின எதுகை
  
அன்பீனும் ஆா்வம் உடைமை, அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு [ திருக்குறள் - 74]
  
மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் [ங்,ஞ்,ண்,ந்.ம்.ன்] ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [மெல்லின மெய்யெழுத்துக்கு மெல்லின உயிர்மெய் எழுத்து எதுகையாக வராது. ங், ங எதுகையன்று]
  
6. இடையின எதுகை
  
எல்லா விளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
  
இடையின மெய்யெழுத்துகள்ஆறும் [ய்.ர்.ல்.வ்.ழ்.ள்] ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [இடையின மெய்யெழுத்துக்கு இடையின உயிர்மெய் எழுத்து எதுகையாக வரும். ர், ர எதுகையாக வரும்.]
  
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோசை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்! [திருப்பாவை - 1]
  
இடையின மெய்யெழுத்துக்கு அதன் வருக்கமும் எதுயைாக வரும்.
  
7. அளபெடை எதுகை
  
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது [திருக்குறள் - 1176]
  
அளபெடை எதுயைாக வந்துள்ளது.
  
8. ஆசு எதுகை
  
ய், ர், ல், ழ், என்றும் இவ்வெழுத்துகளில் ஒன்று, ஒரு செய்யுளில் மோனை எழுத்தாகிய முதல் எழுத்துக்கும், எதுகை எழுத்தாகிய இரண்டாம் எழுத்துக்கும் இடையே ஆசாக அமைய வருவது ஆசெதுகையாகும்.
  
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்! உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு [திருக்குறள் - 110]
  
இக்குறளில் 'ய்' ஆசாக வந்தது.
  
காத்துக் கிடந்தேன் கயல்விழியே! வட்டியுடன்
சேர்த்துக் கொடுப்பாய் செழிப்பு!
  
இக்குறளில் 'ர்' ஆசாக வந்தது.
  
நீகொண்டு வாவென்றாய்! நெஞ்சேந்தி வந்தவனை
வேல்கொண்டு தாக்கும் விழி
  
இக்குறளில் 'ல்' ஆசாக வந்தது.
  
ஈந்து மகிழ்ந்தேன் இலக்கணத்தை! நன்றாக
ஆழ்ந்து தெளிதல் அறிவு!
  
இக்குறளில் 'ழ்' ஆசாக வந்தது.
  
9. வழி எதுகை
  
ஒரு செய்யுளில் அடிதொறும் ஒன்றி வந்த எதுகையே சீர்தொறும் ஒன்றி வருவது வழி எதுகை எனப்படும்.
  
கட்டழகு கொட்டமிடும்! தொட்டுமனம் வட்டமிடும்!
மொட்டழகு கட்டியெனைக் சட்டமிடும்! - பட்டழகே!
சுட்டுவிழி முட்டியெனை வெட்டவரும்! எட்டியுள
வட்டநிலாத் தட்டோ!உன் பொட்டு! [பாட்டரசர்]
    
நாற்சீரடியில் முதல் இரண்டு சீர்களில் எதுகை அமைந்திருப்பது இணையெதுகை
[கண்ணா! வண்ணா! காப்பாய் உலகை!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது பொழிப்பெதுகை
[கண்ணா! கமல வண்ணா! காப்பாய்!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது ஒரூஉ எதுகை.
[கண்ணா! இந்தக் கவிஞனை எண்ணிடுவாய்!]
  
நாற்சீரடியில் முதல் மூன்று சீர்களில் எதுகை அமைந்திருப்பது கூழைஎதுகை.
[கண்ணா மண்ணை விண்ணைப் படைத்தாய்!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது மேற்கதுவாய் எதுகை.
[கண்ணா காப்பாய் மண்ணை விண்ணை!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது கீழ்க்கதுவாய் எதுகை.
[கண்ணா! கண்கவர் கமல வண்ணா! ]
  
நாற்சீரடியில் நான்கு சீர்களிலும் எதுகை அமைதிருப்பது முற்று எதுகை.
[கண்ணா! மன்னா! தண்மலர் வண்ணா!]
  
எதுகையைக் குறித்து இலக்கண நுால்கள் உரைக்குச் நுாற்பாக்களைத் தொகுத்து நாளை எழுதுகிறேன்.
  
எது..கை அகன்றாலும் என்றும் கவியுள்
எதுகை கமழ இசைப்பீர்! - புதுமைக்
கருத்தை அளிப்பீர்! கலைகற்போர் நெஞ்சுள்
விருந்தை அளிப்பீர் வியந்து!
  
தொடரும்.....

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2016

Aucun commentaire:

Enregistrer un commentaire