கட்டளைக்
கலிப்பா!
நெஞ்சுள் நின்றிடும் நேரிழை! பொற்கவி
நேயன் நெய்திடும் சீரிழை!
மெல்லிழைப்
பஞ்சில் பின்னிய பாவையின் பட்டுடல்
பட்டுத் தீயெனப் பற்றுதே
என்னுடல்!
கொஞ்சிக் கூடிடும் கோல நினைவுகள்
கோடி கோடி குலவிடும்!
கூத்திடும்!
மஞ்சள் சிட்டென மாதுளை முத்தென
வஞ்சி நல்லெழில் விஞ்சி
மிளிருதே!
வண்ணப் பெண்ணே! மனத்தினைக் கொல்லாதே!
மணத்தை ஏற்க வரும்நெஞ்சைத்
தள்ளாதே!
எண்ணம் யாவும் இருளெனக் கொள்ளாதே!
இடரில் வாழ்வை இருத்தியே
துள்ளாதே!
கண்ணில் நீயே! கருத்திலும் நீயே!என்
பண்ணில் நீயே! படர்நலம்
நீயே!வா!
பெண்ணில் நீயே பிழையிலா நல்லெழில்!
மண்ணில் என்னை மகிழ்வுறச்
செய்கவே!
கட்டளைக் கலிப்பா
இலக்கணம்
எட்டுச் சீர்களைக்
கொண்ட நான்கடிகள் ஓரெதுகையில் அமையவேண்டும். ஐந்தாம் சீரில் மோனை வரவேண்டும்.
மா + கூவிளம் + கூவிளம்
+ கூவிளம் என்ற அமைப்பில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும்.
அனைத்து அரையடிகளிலும்
முதல் சீர் குறிலீற்று மா [முதற்சீரின் இறுதி, குறிலாக அல்லது குறில் ஒற்றாக வரும்]
முதலிரு சீர்கள்
மாமுன் நேராக வருவது கட்டாயம். 2, 3 ஆம் தளைகள்
விளமுன் நேராகவோ, மாமுன் நிரையாகவோ [ இயற்சீர்
வெண்டளையாக] வரலாம்
நேரசையில் தொடங்கும்
அரையடியின் எழுத்தொண்ணிக்கை 11. நிரையசையால் தொடங்கும் அரையடிக்கு எழுத்தெண்ணிக்கை
12.
பாடலின் இறுதியில்
ஏகாரம் வரும்.
விளச்சீர் வரும்
இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரும். [ விளங்காய் வாராது]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.12.2016
Aucun commentaire:
Enregistrer un commentaire