தைம்மகள் குறட்பத்து!
1.
தங்கத் தமிழ்மணக்கத் தைம்மகளே வந்திடுக!
பொங்கல் மணக்கப் பொலிந்து!
2.
சங்கத் தமிழ்மணக்கத் தைம்மகளே வந்திடுக!
எங்கும் இனிமை இசைத்து!
3.
தழைத்தோங்கும் இன்பத்தைத் தைம்மகளே தாராய்!
விழித்தோங்கும் மெய்ம்மை விளைத்து!
4.
சாதிமதத் தீதகற்றித் தைம்மகளே! சன்மார்க்க
சோதி அளிப்பாய் தொடர்ந்து!
4.
தலைமை தலைமையெனத் தைம்மகளே சில்லோர்
உலகைக் சுருட்டுகிறார்! ஓட்டு!
5.
தாரணிக்கு அன்பூட்டித் தைம்மகளே! மாண்பொளிரும்
சீரணிக்குள் வாழ்வைச் செலுத்து!
6.
தாராய் நலமெல்லாம் தைம்மகளே! சால்பொளிரும்
கூரறிவை நன்றே குவித்து!
7.
தன்னே ரிலாவுழவன் தைம்மகளே இன்பமுற
இன்னே வழிகள் இயற்று!
8.
தமிழர் விழைகின்ற தைம்மகளே! பொங்கல்
அமுத விருந்தை அளி!
9.
தமிழரின் புத்தாண்டே! தைம்மகளே! என்றும்
கமழ்வாய் மனத்துள் கலந்து!
10.
தண்டமிழ் வாழியவே! தைம்மகளே வாழியவே!
தொண்டுளம் வாழியவே சூழ்ந்து!
15.01.2016
வணக்கம்
RépondreSupprimerஐயா
தைம்மகளே பற்றி சொல்லிய குறள் வெண்பாக்களை இனிதே படித்து மிகிழ்ந்தேன் ஐயா.
தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
ஓடோடி வந்தீர்!கருத்தளித்தீர்! ஓங்குநலம்
கோடான கோடி கொடுத்து!
பத்துக் குறள்களும் பைந்தமிழ்த் தாயணியும்
RépondreSupprimerமுத்துச் சரமென்பேன்! முற்றியுள - கொத்துக்
கதிரளிக்கும் இன்பக் கவிபடைத்தீர்! வற்றா
நதியளிக்கும் நன்மை நவின்று!
வணக்கம்!
Supprimerபொங்கல் சுவையாக வெண்பா புனைந்தனையே!
உங்கள் உளத்துக்கு நன்றியுரைத்தேன்! - திங்கள்
திருவருளைப் பெற்றிடுக! சீர்கள் சிறக்கக்
குருவருளை பெற்றிடுக கூர்ந்து!
ஐயா வணக்கம்.
Supprimerதங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் கழக உறுப்பினர்கள் நண்பர்கள் அனைவர்க்கும் என் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!
“பொங்கல் சுவையாக வெண்பா புனைந்தனையே!
உங்கள் உளத்துக்கு நன்றியுரைத்தேன்! - திங்கள்
திருவருளைப் பெற்றிடுக! சீர்கள் சிறக்கக்
குருவருளை பெற்றிடுக கூர்ந்து!”
என்னும் கவிஞர் தமிழ்ச்செல்வனுக்கான தங்கள் இம் மறுமொழி வெண்பாவில், இரண்டாம் அடியின் மூன்றாம் சீரில், “ நன்றியுரைத்தேன் ” என நான்கசைச் சீர் வருகின்றதே ஐயா!
இவண், இதற்கேதும் யாப்பமைதி உண்டா?
அறியத்தர வேண்டுகிறேன்
“ குருவருளை பெற்றிடுக ” என்பது ‘குருவருளைப் பெற்றிடுக’ என்று ஒற்று மிகுத்து வர வேண்டும் எனக் கருதுகிறேன்.
நன்றி.
Supprimerவணக்கம்!
//குருவருளைப் பெற்றிடுக// வலி மிகும்.
வெண்பாவில் நான்கசைச் சீர் வரக்கூடாது. எனவே
உங்கள் உளத்துக்கென் நன்றிபல! என மாற்றிப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
பதிவைப் படித்தும், அதன் கருத்துகளையும் படித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி! என் கவனக் குறைவுக்குப் பொறுத்தாற்றுமாறு வேண்டுகிறேன்
Supprimerவணக்கம்!
என்னை உயர்விக்கும் ஒண்கருத்து ஈந்துள்ளீர்
பொன்னை நிகருளம் பூத்து!
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
தமிழர் திருநாள் தரணியில் பூக்க
நமதினம் காணும் நலம்!
பத்துக்கள் முத்து....
RépondreSupprimerஅருமை ஐயா...
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Supprimerவணக்கம்!
பத்துக் குறள்களும் பைந்தமிழ்த் தேன்சுரக்கும்
கொத்து மலரெனக் கூறு!
அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அருமைத் திருநாளை ஆடிப் களிப்போம்!
உரிமைக் குரலை உரைத்து!
உழவர் திருநாளில் ஊட்டினீர் பாடல்!
RépondreSupprimerவழங்கினேன் நானுமோர் வாழ்த்து!
Supprimerவணக்கம்!
வழங்கிய வாழ்த்தின் வளங்கண்டேன்! தாரை
முழங்கிய இன்பம் முகிழ்த்து!
வணக்கம் ஐயா !
RépondreSupprimerதாமதத்திற்கு மன்னிக்கணும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள் ...!
தைமகளாள் தந்திடுவாள் தங்கும்நற் சீர்களெலாம்
வையகமும் வானகமும் வாழ்த்தத் தளைத்தோங்கும்
மையிட்ட கண்கள் மகிழ்ந்திருக்க மாண்பென்று
கையும் கலைவடிக்கும் காண் !
மெய்மறந்தேன் மிஞ்சுமும் மின்னற் கவியழகில்
உய்யும் உலகும் உணர்ந்து !
தைத்திங்கள் போற்றும் தனிச்சுவைப் பாக்குறள்கள்
RépondreSupprimerபத்தும் பழச்சுவைதாம் பார்!
தமிழ்மாமணி 'பரிதி' இரா. வேங்கடேசன்,
அரியாங்குப்பம், புதுச்சேரி