jeudi 15 janvier 2015

பொங்கல் திருநாளே பொங்கு!



பொங்கல் திருநாளே பொங்கு!

1.
எல்லோரும் இன்புற்று வாழ்கவே! அன்பொளிரும்
சொல்லோடு மன்பதை சுற்றுகவே! - நல்லமுதாம்
சங்கத் தமிழ்மணக்கச் சந்தக் கவியினிக்கப்
பொங்கல் திருநாளே பொங்கு!

2.
ஒற்றுமை ஓங்கி ஒளிருகவே! நல்லொழுக்கம்
பற்றுனைப் பற்றிப் படருகவே! - நற்றுணையாய்த்
திங்கள் தரும்நலமாய்த் தென்றல் கமழ்மணமாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!

3.
உழைப்பே உயர்வுதரும்! உண்மையொளி யூட்டும்!
இழைப்பே பொலிவுதரும்! எங்கும் - குழையாமல்
தங்க மனமேந்தித் தந்த வளமேந்திப்
பொங்கல் திருநாளே பொங்கு!

4.
மாண்பெனும் சோலை மலருகவே! வண்டமிழ்
ஆண்டெனத் தைமகளை வேண்டுகவே! - பூண்டொளிரும்
மங்கை அணியழகாய் மாலை மதியழகாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!

5.
செய்யும் தொழிலையே தெய்வமென எண்ணிடுக!
உய்யும் வழியுணர்க! ஒண்டமிழ் - நெய்கின்ற
வங்கக் கடல்புதுவை வாழும் புலமையெனப்
பொங்கல் திருநாளே பொங்கு!

6.
துணிவே துணையெனக் கொண்டிடுக! நெஞ்சுள்
பணிவே உயர்வுதரும் பண்பாம்! - பணிசிறக்க!
செங்கதிர் முற்றிச் செழித்துள்ள பொன்னிலமாய்ப்
பொங்கல் திருநாளே பொங்கு!

7.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பிடுக! கற்றோர்
பழக்கம் பயனுறுக! பாரே - செழித்தாட
மங்கலம் நல்கும் மலர்த்தமிழ் வாய்மறையைப்
பொங்கல் திருநாளே பொங்கு!

8.
அன்பொன்றே இவ்வுலகை ஆட்படுத்தும்! பேராற்றல்
ஒன்றென்றே ஓதி  உணர்வுறுக ! - நன்றாடித்
தொங்கும் மனக்குரங்கைத் தங்கும் வழிகாட்டிக்
பொங்கல் திருநாளே பொங்கு!

9.
கடமையும் கண்ணியமும் நற்கட்டுப் பாடும்
உடமையாய்ப் பெற்றே ஒளிர்க! - குடியோங்கித்
தங்கி மகிழ்விருக்கத் தாள இசையொலிக்கப்
பொங்கல் திருநாளே பொங்கு!

10.
எண்ணமே வாழ்வாகும்! என்றென்றும் உண்மையொளிர்
வண்ணமே ஆன்ம வளமாகும்! - மண்ணுலகம்
எங்கும் இனிமையுற ஏற்ற நெறிகளைப்
பொங்கல் திருநாளே பொங்கு!

21 commentaires:


  1. நல்ல தமிழளித்த நன்னெறியை இப்பொங்கல்
    வல்ல முறையில் வழங்கட்டும்! - சொல்லினிக்கச்
    சூட்டி மகிழ்ந்தீர்! சுடர்மிகும் வாழ்வுதனைக்
    காட்டி மகிழ்ந்தீர் கமழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பொங்கல் திருநாளைப் போற்றும் கவிபடித்து
      எங்கள் மனம்மகிழ இங்களித்தாய் - செங்கரும்பு
      வெண்பா! வியக்கும் தமிழ்ச்செல்வா! என்நன்றி!
      தண்பா தருவாய் தழைத்து!

      Supprimer
  2. கவிமழை பொழிந்து
    எம் போன்று வறண்டு கிடக்கும் குட்டைகளிலும்
    நீர்வார்த்துப் போகும் கவிஅரசே
    வாழ்க வளர்க தங்கள் தன்னிகரற்ற தமிழ்த்தொண்டு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. அங்கம் சிலிர்க்கும் அருமையான வெண்பாக்கள்
    பொங்கல் திருநாளே பொங்கு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கவிஞர்.
    த.ம.3

    RépondreSupprimer
  5. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    RépondreSupprimer
  6. வணக்கம் !

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா ! அருமையான வெண்பா
    மாலை கண்டு வியந்தேன் அதற்கும் என் நல் வாழ்த்துக்கள் ஐயா

    RépondreSupprimer
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  9. பொங்கலன்று திதிக்கும் கவிகேட்கவே இங்கு
    ஓடோடி வந்தேன்.இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்
    ஐயா.

    RépondreSupprimer
  10. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    RépondreSupprimer
  11. அய்யா கவிஞர் கி.பாரதிதாசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  12. போதாதே ஐயா பத்தாம்
    பொங்கல் வெண்பாவே மேலும்
    ஆகாதோ எழுதினால் அளவின்றி
    அன்னைத் தமிழும் தளர்வின்றி
    வாகாய் வளர வருநாளில்
    வாழும் பொங்கல் திருநாளில்
    ஆகா! உமதுத் தொண்டேதான்
    அயலகம் தன்னில் கண்டேன்நான்

    RépondreSupprimer
  13. இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  14. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  15. தங்கள் கவி சர்க்கரைப்பொங்கலைவிட இனிக்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  16. அற்புதமான பொங்கல் வாழ்த்துக் கவிதை
    என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    தளிஞ்சான்
    தமிழ் பேராசிரியர்
    பிரான்ஸ்

    RépondreSupprimer
  17. kudumbathaar anaivarukkum iniya ponkal vaalthukkal !

    RépondreSupprimer
  18. தங்களது திகட்டாத பொங்கலை ரசித்தோம், ருசித்தோம். நன்றி.

    RépondreSupprimer
  19. வணக்கம் ஐயா!

    சங்கம் முழங்கியே சாற்றுமும் பேர்தனை
    பொங்கும் திருநாளே பொங்கு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer