mercredi 4 juin 2014

ஊமைக் கனவுகள்



தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

ஊமைக் கனவுகள் http://oomaikkanavugal.blogspot.fr/ என்னும் வலைப்பூவைப் படைகின்ற புலவர் சோசப் ஐயா அவர்கள் தமிழ்ப்பற்றும் இனப்பற்றும் என்னைப்போல் உடையார் என்பதைக் கண்டு கொண்டேன்!

அவர்தம் கவிதைகளில் சந்தம் கொஞ்சி நடமாடுவதைக் கண்டு வியக்கின்றேன். அவர் ஆக்கும் தமிழமுதை உண்டு களிக்கின்றேன்.

என்னுடைய புன்னகைப் பூவே என்னும் இசைப்பாட்டுக்கு அவர் படைத்த சிந்து என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரின் கவிதையை இங்குத் பதிவு செய்கின்றேன்


புன்னகையில் கண்ணிமைத்து அன்னமென வண்ணகவி
பொன்பழித்து வந்ததுவோ அங்கு?- என்றன்
மென்மனது கண்திறந்து கண்டிதனைக் கொண்டதனால்
இன்கவிதை ஈந்ததுவோ இங்கு!

முத்தும்வாய் இன்னமுதும் மீன்களதும் வாழுமுகம்
சத்தமிலா வித்தைசெயும் கடலோ - அன்றிச்
சித்தமெலாம் ஆண்டென்றன் சிந்தையெலாங் கொண்டதனால்
சந்தமுள செந்தமிழின் உடலோ?

------------------------------------------------------------------------------------------------------------

புலவர் சோப் ஐயா படைத்த ஓசையில் மது குடித்த மயக்கத்தை நான் பெற்றுப் பாடிய வாழ்த்துமலர்!


கொஞ்சுதமிழ் மின்னிவரும் நெஞ்சுடனே பாட்டெழுதும்
கொள்கையொளிர் நற்புலமை கொண்டார்! - சோசப்
விஞ்சுபுகழ்ச் சொல்வரென வேந்தர்தமிழ் அன்பரென
மேன்மையொளி மாண்புகளைக் கண்டார்!

எத்திசையும் ஏத்திடவே முத்தமிழைத் தீட்டுகிற
புத்துலகச் சிற்பிசோசப் என்பேன்! - இவர்
புத்திநிறை சிந்தனையில் சக்தியுடன் சொல்பிறக்கும்
பக்தியுடன் நான்அதனை உண்பேன்!

மீட்டுகிற நல்லிசையாய்த் தீட்டுகிற பாமணக்கும்
மின்வலையின் நற்பெயர்தான் ஊமை! - சோசப்
காட்டுகிற கற்பனையில் பூட்டுகிற பொன்னணிகள்
காண்டவுடன் நீங்கிவிடும் தீமை!

புன்னகையின் சீர்படித்து மென்னடையில் பாவடித்து
என்னெழுத்தைப் போற்றிமகிழ் அய்யா! - என்றும்
பொன்னகையின் மின்னொளியைப் பொங்குகிற ஆற்றலுடைப்
பூந்தமிழில் நெஞ்சுருகும் நெய்யா!

சந்தமுள செந்தமிழைச் சொந்தமெனக் கொண்டவரே!
வந்துதினம் தீட்டிடுக பாட்டு! - நாளும்
சிந்தைதனில் நான்பதித்து வந்தனைகள் செய்திடுவேன்
தந்ததன தாளமிசை போட்டு!

04.06.2014
 

13 commentaires:

  1. புலவர் சோப் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  2. சிறந்த பகிர்வு
    வாழ்த்துகள்

    RépondreSupprimer
  3. வணக்கம் கவிஞரையா!

    மொழியும் இனமும் இருகண்களெனப் போற்றும்
    உங்களைப் போலொருவர்...
    உங்களின் அறிமுகத்தால் தெரிந்து கொண்டேன்...

    ஜோசப்பு ஐயா பொருட்டு நீங்கள் தந்த கவி வாழ்த்து - வெண்பாக்கள் மிக மிக அருமை!

    இருவருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களுடன்,
    அறிமுகம் தந்த உங்களுக்கும் என் நன்றிகள் பல ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. பிரதிபலன் பாராமல் தமிழையும்,தமிழனையும் நேசிப்பவர் கவிஞர் பாரதிதாசன் என்பது நேரில் பழகி நாங்கள் கண்ட உண்மை. அப்துல் தயுப், பிரான்ஸ்.

      Supprimer
    2. மிக்க மகிழ்ச்சி அப்துல் தயுப் ஐயா!
      தங்களின் கூற்று எங்கள் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறது.

      உணர்வு பூர்வமான பகிர்விற்கு மிக்க நன்றி!

      Supprimer
  4. வணக்கம்
    ஐயா

    ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  5. வணக்கம் !
    சிறப்பான அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் தங்களின் தித்திக்கும் கவி
    வரிகளோடு ! வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும் .த .ம .7

    RépondreSupprimer
  6. வணக்கம் கவிஞரே ! வண்ணக்கவி கண்டு தக்கதோர் வாழ்த்து உரைக்கும் மென்மனம் கண்டு மகிழ்ந்தேன். உண்டு களித்தேன் அவர் கவிதைகளை. இருவருக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  7. சிறப்புமிகு கவிதைக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா.
    Killergee
    www.Killergee.blogspot.com

    RépondreSupprimer
  8. சந்தப்புலவர்கள் சங்கமிக்கும் இடம் ஒன்று இதுவோ..

    அருமை........

    RépondreSupprimer
  9. கொஞ்சுதமிழ் அள்ளியள்ளி கொட்டுகின்ற சிந்துகளும்
    நெஞ்சிதழில் ஊருமுயிர் நீரோ - அஞ்சலவள்
    வஞ்சிபுகழ் பாடும்நீர் வாழு மிடமந்த
    அஞ்சிவிடா ஆரணன்வாழ் ஊரோ !

    அழகு அருமை கவிஞரே
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    11

    RépondreSupprimer
  10. நல்லதை வாழ்த்தவும் நல்ல மனம்வேண்டும்,
    உள்ளத்தில் நின்றீர்! உயர்சந்த - வெள்ளத்தைக்
    கண்டு களித்தேன் கவியின் தமிழ்ப்பண்பை
    உண்டு களித்தேன் உளம்

    RépondreSupprimer