வண்ண மீன்கள்!
இறை வணக்கம்
மீனம் ஆகி இவ்வுலகை
மீட்டுத்
தந்த பரம்பொருளே!
வானம் ஆகி என்னெஞ்சம்
வண்ணத்
தமிழைப் பொழியாதோ?
ஊனம் ஆகி ஒதுங்குவதோ?
உண்மைத்
தொண்டன் வாடுவதோ?
ஞானம் ஆகி எனக்குள்ளே
நாரா
யணனே ஒளிருகவே!
தமிழ் வணக்கம்
கடலில் நீந்தும் மீன்போன்று
கவிதைக்
கடலில் நீந்துகிறேன்!
உடலில் நீந்தும் உணர்வலையுள்
ஓங்கும்
அன்னைத் தமிழ்ப்பற்றே!
மடலில் நீந்தும் பெருங்கவியின்
மாண்பை
நானும் பெற்றிடவே
இடரில் நீந்தும் நிலைநீக்கி
இன்பத்
தமிழே காத்திடுக!
அவை வணக்கம்!
குளிக்க வந்தீர்! குளிர்தமிழைக்
குடிக்க
வந்தீர்! கவிபாடிக்
களிக்க வந்தீர்! இன்பமுடன்
கழிக்க
வந்தீர்! நட்பேந்தி
அளிக்க வந்தீர்! மனச்சுமையை
அழிக்க
வந்தீர்! கம்பன்சீர்
விளிக்க வந்தீர்! நம்பெருமை
விளைக்க
வந்தீர்! வணங்குகிறேன்!
கம்பன் கழகம்
கம்பன் கழகம் கடற்கரையில்
கட்டும்
கவிதை அரங்கத்தை
இம்மண் பார்த்து வியப்பெய்தும்!
எங்கும்
ஒலிக்கும் தமிழோசை!
செம்பொன் மீன்கள் செந்தமிழின்
சீரைக்
கேட்டுத் துள்ளினவே!
நம்முன் அலைகள் தாம்வந்து
நல்ல
தமிழைச் சுவைத்தனவே!
வண்ண மீன்கள்!
வண்ண மீன்கள் எனும்தலைப்பின்
வாசல்
திறந்து வைக்கின்றேன்!
எண்ண மீன்கள் துள்ளினவே!
இதயம்
தன்னை அள்ளினவே!
விண்ணில் மீன்கள் உள்ளனவாம்!
கண்ணில்
மீன்கள் உள்ளனவாம்!
பண்ணில் மீன்கள் பிடித்திடவே
பறந்து
கவிஞர் வந்துள்ளார்!
வண்ண வண்ண மீன்களென
வந்தே
மின்னும் கற்பனைகள்!
உண்ண உண்ணத் திகட்டாத
ஒளிரும்
இயற்கை ஒப்பனைகள்!
மண்ணில் மலர்ந்த பலவண்ண
மலர்கள்
மனத்துள் நீந்தினவே!
கண்ணில் கருத்தில் நீந்தவது
கன்னி
கொண்ட அழகன்றோ?
மழலை சிந்தும் சிரிப்பினிலே
வண்ண
மீன்போல் நீந்துகிறேன்!
விழலை நீக்கி என்னெஞ்சம்
வெற்றி
காண நீந்துகிறேன்!
குழலை மேவும் மென்காற்றுக்
கொட்டும்
இசையில் நீந்துகிறேன்!
அழகைக் கண்டால் கவியுள்ளம்
ஆடித்
துள்ளும் மீன்அன்றோ?
வண்ணம் தீட்டும் கலைஞனிடம்
வண்ண
மீன்கள் தோற்றனவே!
கிண்ணம் நிறைய மதுவருந்தக்
கிளம்பும்
மனத்துள் மீன்துள்ளும்!
எண்ணம் கூட மீன்போன்றே
எங்கும்
பாய்ந்து சென்றிடுமே!
தண்ணம் துழாய்போல் மணக்கின்ற
தமிழின்
வண்ணம் என்சொத்து!
கெண்டை துள்ளும் விழியினிலே
கீர்த்தி
துள்ளும் மொழியினிலே!
தண்டை துள்ளும் காலினிலே!
தமிழே
துள்ளும் நாவினிலே!
வெண்டை விரல்கள்! மணக்கின்ற
கொண்டை
மலர்கள்! என்னுடைய
மண்டைக் குள்ளே பெருங்காதல்
வண்ண
மீன்போல் நீந்திடுமே!
இளமை துள்ளும்! காதலினால்
இதயம்
துள்ளும்! நல்லுழைப்பில்
வளமை துள்ளும்! பேய்ஆட்சி
வறுமை
துள்ளும்! கொடுஞ்செயலால்
உளம்..மை இருட்டாய் ஆகுமெனில்
உயிர்மை
துள்ளும்! வாக்கிட்டுத்
துளி..மை விரலில் பெறுகின்றோம்!
தூண்டில்
மீன்போல் துடிக்கின்றோம்!
கனவில் நீந்தும் பொன்மீனே!
கருத்தில்
நீந்தும் கலைமீனே!
நினைவில் நீந்தும் நம்முயிரை
நெகிழச்
செய்யும் கண்மீனே!
மனத்தில் நீந்தும் மணித்தமிழின்
மாண்பைக்
காக்கும் பெண்மீனே!
கணத்துள் நீந்தும் இனியதமிழ்க்
கவிஞன்
நெஞ்சுள் கவிமீனே!
சிட்டுக் குள்ளே இணைந்தாடித்
சிறக்கும்
ஆசை! பருவமெனும்
கட்டுக் குள்ளே ஒளிர்கின்ற
காதல்
கன்னி! என்னுடைய
மெட்டுக் குள்ளே புகும்சொற்கள்!
மொட்டுக்
குள்ளே புகும்கதிரோன்!
தொட்டிக் குள்ளே பெண்மீனைத்
தொடரும்
ஆண்மீன் போலிவையே!
சின்ன மீனை விழுங்குகிற
தீமை
நாட்டில் பெருகுவதேன்?
கன்னக் கோல்போல் கணக்காகக்
கற்றோன்
வலையை விரிப்பதுமேன்?
என்ன போட்டால் மீன்சிக்கும்!
எங்கே
போட்டால் பணம்காய்க்கும்!
சொன்ன சொற்கள் காற்றோடு
சுரண்டும்
ஆட்சி திமிங்கிலமே!
மீன்போல் நழுவும் நபருண்டு!
மீண்டும்
மீண்டும் நெஞ்சத்துள்
தேன்போல் நழுவும் பெண்ணுண்டு!
தென்றல்
வீசும் வேகத்தில்
ஊன்மேல் நழுவும் துணியுண்டு!
உண்மை
நழுவும் காலத்தில்
வான்மேல் மண்மேல் இயற்கையருள்
வற்றி
வரண்டு மறைந்திடுமே!
மின்னும் வண்ண மீன்களையே
கன்னல்
தமிழில் தந்திட்டேன்!
தின்னும் வண்ணம் இருந்திட்டால்
திண்மைத்
தமிழின் அருளென்பேன்!
முன்னும் பின்னும் அமர்ந்திங்கு
முல்லைத்
தமிழைச் சுவைத்தோரே
என்னுள் இருக்கும் நன்றியினை
இயம்பி
நிறைவு செய்கின்றேன்!
21.06.2014 கம்பன் கழகக் கடற்கரைக் கவியரங்கம்!
வணக்கம்
RépondreSupprimerஐயா.
புலர்ந்த காலைப்பொழுதில் படிக்க படிக்க திகட்டாத கவிதைத் துளிகள் படித்து படித்து பருகினேன் ஐயா.
பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
RépondreSupprimerத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கம்பன் கழகம் கடற்கரையில்
RépondreSupprimerகட்டும் கவிதை அரங்கத்தை
இம்மண் பார்த்து வியப்பெய்தியது ஐயா
தம 3
RépondreSupprimerஅற்புதமான கவிதை ஐயா...
RépondreSupprimerமிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
வணக்கம் ஐயா!
RépondreSupprimerஎண்ணம் சிறக்க இனிமையான பாக்கள்!சொல்
வண்ணம் சொரிந்து வழிகிறதே! - இன்னுமிங்கே
கேட்டிட எங்களுள்ளம் கெஞ்சும்! கவிக்கோவே!
ஊட்டிடுவீர் உண்போம் உவந்து!
சொல்லுக்கடங்கா மகிழ்வுதரும்
சொக்க வைக்கும் விருத்தப் பாக்கள்!
அற்புதம் ஐயா!!
மிக்க நன்றியுடன் என் வாழ்த்துக்களும் ஐயா!
வணக்கம் கவிஞரையா!
RépondreSupprimerஎண்ணங்களுக்குள் துள்ளி விழுந்த
வண்ண மீன்கள்! கொள்ளை அழகு!
உங்கள் கவிதைகளில் என்ன கலந்து தருகிறீர்கள் ஐயா!
இப்படிக் கிறங்க வைக்கின்றதே.. :)
அருமை! அருமை!
வாழ்த்துக்கள் கவிஞரே!
ஊமைக்கனவுகள்.24 juin 2014 03:55
RépondreSupprimerபொழியும் கவிதைப் பெருமழையில்
பொங்கும் கடலும் துளியாக
விழிகள் விரித்துத் தமிழுள்ளம்
வியக்கும் கவிதை பேரழகு!
அழியும் நிலையில் தமிழென்றே
அலறித் துவளும் வேளையிலும்
எழிலார் மறவப் படைதிரட்டி
எடுக்கும் முயற்சி வாழியவே!
"மின்னும் வண்ண மீன்களையே
RépondreSupprimerகன்னல் தமிழில் தந்திட்டேன்!
தின்னும் வண்ணம் இருந்திட்டால்
திண்மைத் தமிழின் அருளென்பேன்!" என
தமிழை அழகாய் வடித்திருக்கிறீ்ர்கள்!