lundi 30 juin 2014

மகளிா் விழாப் படங்கள்

பிரான்சு கம்பன் மகளிா் அணி நடத்திய
மகளிா் விழாப் புகைப்படங்கள்
29.06.2014





 

jeudi 26 juin 2014

வஞ்சித்துறை




வஞ்சித்துறை - 1

கண்ணைக் கைகளால்
புண்ணாய்ச் செய்வரோ?
பெண்ணை அடிமையாய்
மண்ணில் கொள்வதோ?

தேமா+விளம், நான்கடிகளும் ஓரெதுகை, 

வஞ்சித்துறை - 2

பிறந்த பிள்ளை
சிறந்த கல்வி
நிறைந்து நாளும்
அறிந்து வாழ்க

புளிமா+தேமா, நான்கடிகளும் ஓரெதுகை.

வஞ்சித்துறை - 3

பூவளர் தமிழை
ஆவலாய்க் கற்று
நாவல மிக்க
பாவலன் ஆனேன்

கூவிளம்+மா, நான்கடிகளும் ஓரெதுகை, 

வஞ்சித்துறை - 4

கற்றவர் போற்ற
சொற்றிற மிக்க
நற்றமிழ்த் தேனைப்
பற்றுடன் உண்க!

கூவிளம்+தேமா, நான்கடிகளும் ஓரெதுகை, 

வஞ்சித்துறை - 5

வெல்லுந் திறத்தாலே
கல்லுங் கலையாகும்
சொல்லுஞ் செயலானால்
செல்லும் இடமோங்கும்

தேமா+காய், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 6

பெற்றவர் மகிழ்ந்திடவே
கற்றவர் வழிநடப்பாய்!
உற்றவர் உவந்திடவே
மற்றவர்க்(கு) உதவிடுவாய்

கூவிளம்+காய், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 7

பழகு தமிழ்போலே
அழகு மொழியுண்டோ?
உழவு செழித்தாலே
நிழலும் மகிழாதோ?

புளிமா+புளிமாங்காய், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 8

செந்தமிழ்மொழி ஒன்றையே
சிந்தையில்நினை என்றுமே!
வந்தவர்மொழி சூழினும்
நந்தமிழ்க்கென வாழ்கவே!

கூவிளங்கனி+விளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 9

தூய்மொழிதமிழ் அமிழ்தினைச்
சேய்களுக்குநீ அளித்திடு!
தாய்மொழிதமிழ் பருகிட
வாய்வழிதனில் கசக்குமோ?

கூவிளங்கனி+கருவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 10

திருக்குறள்நெறி ஒன்றுதான்
கருகொளச்செயும் அன்பினை!
நெருப்பெனச்சுடும் தீமையை!
உருப்படச்செயும் வாழ்வினை!

கருவிளங்கனி+கூவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 11

பன்மொழிகளில் ஈடிலா
என்தமிழ்மொழி என்றுதான்
தன்தலைதனைத் தூக்குமோ?
என்மனம்அலை கின்றதே!

கூவிளங்கனி+கூவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 12

அருளுடையவர் பெருகவும்
பொருளடையவர் பொலியவும்
தெருளுடையவர் திகழவும்
திருஅருள்துணை புரிகவே!

கருவிளங்கனி+கருவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

15-07-2004

mardi 24 juin 2014

வண்ண மீன்கள்



வண்ண மீன்கள்!

இறை வணக்கம்

மீனம் ஆகி இவ்வுலகை
     மீட்டுத் தந்த பரம்பொருளே!
வானம் ஆகி என்னெஞ்சம்
     வண்ணத் தமிழைப் பொழியாதோ?
ஊனம் ஆகி ஒதுங்குவதோ?
     உண்மைத் தொண்டன் வாடுவதோ?
ஞானம் ஆகி எனக்குள்ளே
     நாரா யணனே ஒளிருகவே!

தமிழ் வணக்கம்

கடலில் நீந்தும் மீன்போன்று
     கவிதைக் கடலில் நீந்துகிறேன்!
உடலில் நீந்தும் உணர்வலையுள்
     ஓங்கும் அன்னைத் தமிழ்ப்பற்றே!
மடலில் நீந்தும் பெருங்கவியின்
     மாண்பை நானும் பெற்றிடவே
இடரில் நீந்தும் நிலைநீக்கி
     இன்பத் தமிழே காத்திடுக!

அவை வணக்கம்!

குளிக்க வந்தீர்! குளிர்தமிழைக்
     குடிக்க வந்தீர்! கவிபாடிக்
களிக்க வந்தீர்! இன்பமுடன்
     கழிக்க வந்தீர்! நட்பேந்தி
அளிக்க வந்தீர்! மனச்சுமையை
     அழிக்க வந்தீர்! கம்பன்சீர்
விளிக்க வந்தீர்! நம்பெருமை
     விளைக்க வந்தீர்! வணங்குகிறேன்!

கம்பன் கழகம்

கம்பன் கழகம் கடற்கரையில்
     கட்டும் கவிதை அரங்கத்தை
இம்மண் பார்த்து வியப்பெய்தும்!
     எங்கும் ஒலிக்கும் தமிழோசை!
செம்பொன் மீன்கள் செந்தமிழின்
     சீரைக் கேட்டுத் துள்ளினவே!
நம்முன் அலைகள் தாம்வந்து
     நல்ல தமிழைச் சுவைத்தனவே!

வண்ண மீன்கள்!

வண்ண மீன்கள் எனும்தலைப்பின்
     வாசல் திறந்து வைக்கின்றேன்!
எண்ண மீன்கள் துள்ளினவே!
     இதயம் தன்னை அள்ளினவே!
விண்ணில் மீன்கள் உள்ளனவாம்!
     கண்ணில் மீன்கள் உள்ளனவாம்!
பண்ணில் மீன்கள் பிடித்திடவே
     பறந்து கவிஞர் வந்துள்ளார்!

வண்ண வண்ண மீன்களென
     வந்தே மின்னும் கற்பனைகள்!
உண்ண உண்ணத் திகட்டாத
     ஒளிரும் இயற்கை ஒப்பனைகள்!
மண்ணில் மலர்ந்த பலவண்ண
     மலர்கள் மனத்துள் நீந்தினவே!
கண்ணில் கருத்தில் நீந்தவது
     கன்னி கொண்ட அழகன்றோ?

மழலை சிந்தும் சிரிப்பினிலே
     வண்ண மீன்போல் நீந்துகிறேன்!
விழலை நீக்கி என்னெஞ்சம்
     வெற்றி காண நீந்துகிறேன்!
குழலை மேவும் மென்காற்றுக்
     கொட்டும் இசையில் நீந்துகிறேன்!
அழகைக் கண்டால் கவியுள்ளம்
     ஆடித் துள்ளும் மீன்அன்றோ?

வண்ணம் தீட்டும் கலைஞனிடம்
     வண்ண மீன்கள் தோற்றனவே!
கிண்ணம் நிறைய மதுவருந்தக்
     கிளம்பும் மனத்துள் மீன்துள்ளும்!
எண்ணம் கூட மீன்போன்றே
     எங்கும் பாய்ந்து சென்றிடுமே!
தண்ணம் துழாய்போல் மணக்கின்ற
     தமிழின் வண்ணம் என்சொத்து!

கெண்டை துள்ளும் விழியினிலே
     கீர்த்தி துள்ளும் மொழியினிலே!
தண்டை துள்ளும் காலினிலே!
     தமிழே துள்ளும் நாவினிலே!
வெண்டை விரல்கள்! மணக்கின்ற
     கொண்டை மலர்கள்! என்னுடைய
மண்டைக் குள்ளே பெருங்காதல்
     வண்ண மீன்போல் நீந்திடுமே!

இளமை துள்ளும்! காதலினால்
     இதயம் துள்ளும்! நல்லுழைப்பில்
வளமை துள்ளும்! பேய்ஆட்சி
     வறுமை துள்ளும்! கொடுஞ்செயலால்
உளம்..மை இருட்டாய் ஆகுமெனில்
     உயிர்மை துள்ளும்! வாக்கிட்டுத்
துளி..மை விரலில் பெறுகின்றோம்!
     தூண்டில் மீன்போல் துடிக்கின்றோம்!

கனவில் நீந்தும் பொன்மீனே!
     கருத்தில் நீந்தும் கலைமீனே!
நினைவில் நீந்தும் நம்முயிரை
     நெகிழச் செய்யும் கண்மீனே!
மனத்தில் நீந்தும் மணித்தமிழின்
     மாண்பைக் காக்கும் பெண்மீனே!
கணத்துள் நீந்தும் இனியதமிழ்க்
     கவிஞன் நெஞ்சுள் கவிமீனே!

சிட்டுக் குள்ளே இணைந்தாடித்
     சிறக்கும் ஆசை! பருவமெனும்
கட்டுக் குள்ளே ஒளிர்கின்ற
     காதல் கன்னி! என்னுடைய
மெட்டுக் குள்ளே புகும்சொற்கள்!
     மொட்டுக் குள்ளே புகும்கதிரோன்!
தொட்டிக் குள்ளே பெண்மீனைத்
     தொடரும் ஆண்மீன் போலிவையே!

சின்ன மீனை விழுங்குகிற
     தீமை நாட்டில் பெருகுவதேன்?
கன்னக் கோல்போல் கணக்காகக்
     கற்றோன் வலையை விரிப்பதுமேன்?
என்ன போட்டால் மீன்சிக்கும்!
     எங்கே போட்டால் பணம்காய்க்கும்!
சொன்ன சொற்கள் காற்றோடு
     சுரண்டும் ஆட்சி திமிங்கிலமே!

மீன்போல் நழுவும் நபருண்டு!
     மீண்டும் மீண்டும் நெஞ்சத்துள்
தேன்போல் நழுவும் பெண்ணுண்டு!
     தென்றல் வீசும் வேகத்தில்
ஊன்மேல் நழுவும் துணியுண்டு!
     உண்மை நழுவும் காலத்தில்
வான்மேல் மண்மேல் இயற்கையருள்
     வற்றி வரண்டு மறைந்திடுமே!

மின்னும் வண்ண மீன்களையே
     கன்னல் தமிழில் தந்திட்டேன்!
தின்னும் வண்ணம் இருந்திட்டால்
     திண்மைத் தமிழின் அருளென்பேன்!
முன்னும் பின்னும் அமர்ந்திங்கு
     முல்லைத் தமிழைச் சுவைத்தோரே
என்னுள் இருக்கும் நன்றியினை
     இயம்பி நிறைவு செய்கின்றேன்!

21.06.2014 கம்பன் கழகக் கடற்கரைக் கவியரங்கம்!

dimanche 22 juin 2014

கடற்கரைக் கவியரங்கம்

பிரான்சு கம்பன் கழகத்தின் 
கடற்கரைக் கவியரங்கம்


ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம் என் தலைமையில் கடற்கரைக்  கவியரங்கத்தை நடத்தி வருகிறது.

21.06.2014
வண்ண மீன்கள் என்ற தலைப்பில் கம்பன் கழகக் கவிஞர்கள் 
கவிதை படைத்தனர்



jeudi 12 juin 2014

இளங்கோ அடிகள்




இயற்கைக் கவிஞர் இளங்கோவடிகள்

தத்தித் தவழ்ந்து தளிர்நடை நடந்தே
அத்தி மோவின் அருங்கலைக் கழகம்
பருவம் அடைந்த பாவை போன்றே
உருவம் பெற்று ஒளிர்கிறாள் இன்று!

பெருமை மேவும் பீடுடைச் செயல்களை
அருமை நண்பர் அருந்தமிழ்த் தொண்டர்
நற்பொன் னரசர் நன்றே செய்கிறார்
பொற்புடைப் பூந்தமிழ் பொலியக் காண்கிறேன்!

கழகம் காக்கும் கண்மணித் தோழரை
அழகுத் தமிழில் அடியேன் வணங்கினேன்!
புரவலர் பெத்ரூசு புகழ்ப்பணி தொடர்க!

சிந்தை யள்ளும் சிலப்பதி காரம்
முந்தைத் தமிழனின் முத்தமிழ்ச் சொத்து!
மொந்தைக் கள்ளென மோகம் கொடுக்கும்!
விந்தை நிறைந்த சந்தம் படைக்கும்!
தமிழர் வாழ்வைத் தரணிக்கு உரைக்கும்
அமிழ்த ஏடு! அறமலர்க் காடு!

இறைவனை அரசனை இயம்பும் நூல்கள்
நிறைய உள்ளன! நெடுந்தமிழ் மணக்கக்
குடிமகன் தன்னைத் தலைவனாய்க் கொண்டு
வடித்த காவியம்! வண்டமிழ் வழங்கி
இவ்விழாத் தலைமையை எழிலுற நடத்தும்
செவ்விய நெஞ்சர்! செந்தமிழ்க் கணிபொறி
என்றே கபிலரை இயம்புதல் பொருத்தம்!
இந்திய வரைபடம் இவரின் முகத்தில்
சொந்தமாய்த் தெரியும்! சூட்டினேன் வணக்கம்!

பால கிருட்டினன் படைக்கும் உரையில்
கோலத் தமிழாள் கொஞ்சு களிப்பாள்!
தம்பி தனச்செல்வி தண்டமிழ் சுவைக்கும்
தும்பி! தூய் தமிழ்ப்பணி தொடர்க!

இலக்கி வேந்தர் எங்கள் பெஞ்சமின்!
இலக்கிய மேடைகள் கணக்கில் அடங்கா!
தேவன் தொண்டும், செந்தமிழ்ப் பணியும்
மேவிய விழிகள்! மேன்மை காண்கவே!

உன்னால் முடியும் தோழி என்று
பண்ணார் தமிழில் பயனுரை அளித்த
வல்ல லூசியா லெபோ வாழ்கவே!
நல்ல இலதா நன்றே வளர்கவே!

அவையில் அமர்ந்த அன்பரை வணங்கிச்
சுவைத்தமிழ்க் கவிகளைத் தொடர்வேன் யானே!

இயற்கைக் கவிஞர் இளங்கோ அடிகள்
உயர்கை தீட்டிய ஒண்மணி காவியம்!
சேர சோழ பாண்டியர் மூவரும்
ஆரத் தழுவி வீரத் தமிழைக்
காத்து வளர்த்த காட்சியைக் காட்டும்!
கூத்தும் இசையும் குளித்தமிழ்ச் செல்வம்!
அன்று தோன்றிய அருந்தமிழ் இன்னிசை
இன்று தமிழர் மறந்த தேனோ?
இருளை நீக்கும் இளங்கதிர் போன்று
மருளை நீக்கும் அருட்சுடர் சிலம்பை
ஈன்ற இளங்கோ  இயற்கைச் கவிஞர்!
சான்றோர் போற்றும் சமத்துவக் கவிஞர்!

இப்புவி, அழகின் இலக்கியம் ஆகும்!
ஒப்பிலா வானம் ஒளிமணி மாடம்!
விதம்வித மான வெண்முகில் பயணம்!
நிதம்நிதம் மகிழ்ச்சி நீட்டும் காட்சி!
கீழ்திசை வானில் சீர்கதிர் தோன்றி
வாழ்வின் வளத்தை வரைந்து காட்டும்!

விடிந்தும் விடியா வைகறைப் பொழுது!
வடிக்கும் ஓவியம் வசந்த விரிப்பு!
ஆழ்கடல் மேலே அடிவான் கிழித்துத்
தாழ்திறந்து இன்முகம்  ஆதவன் காட்டி
மெல்லக் கிளம்பி மேலே செல்லச்
அள்ளி வழங்கும் வெள்ளிக் கதிர்களை!
காலைக் கதிரவன் உழைப்பின் சின்னம்!
சோலைக் கவிஞனைச் சொக்கச் செய்யும்!

மரம்,செடி, கொடிகள் வண்ணத் தளிர்கள்
சரமணி தங்கத் தகடாய் மின்னும்!
அருவியின் வீழ்ச்சி ஆயிரம் ஆயிரம்
குருவிகள் போடும் இன்பக் கூச்சல்!

மருவி மருவி மாலை மயங்கத்
தழுவிக் கொள்ளத் தண்ணிலா வருவாள்!
இரவெனும் போர்வையை இழுத்துப் போர்த்த
உறவெனும் உஞ்சலில் உயிர்கள் மகிழும்!

இன்ப தேனாய் இறங்கும் வான்மழை!
குன்று மலையில் கூத்து நிகழ்த்தும்!
ஆறுகள் நடக்கும் அழகைக் கண்டு
நாடும் நகரமும் செழித்து வளரும்!
இயற்கைத் தாயின் எழில்முகம் இயம்பினேன்!
இயற்கை மறுமுகம் இன்னல் விளைப்புது!
மெல்லிய காற்று சொல்லும் இசையைத்
தள்ளிப் புயலாய்த் தாவி சீறும்!
அலைகடல் பொங்கி ஆட்டம் போடும்!
கலைகளை அழித்தக் காடாய் மாற்றும்!
எரிமலை வெடிக்கும்! இடிவந் திடிக்கும்!
புவிவாய் திறந்து புன்னகை செய்யத்
தவியாய்த் தவித்து மலை,கடல யாவும்
நிலைகுலைந் தாடி நிற்கும் இயற்கை!

இயற்கை என்னும் இன்பக் களஞ்சியம்
உயிர்கள் உலவும் உன்னத சோலை!
அன்பு மணக்கும் அறிவுத் தோட்டம்!
பண்பு பழகும் பல்கலைக் கழகம்!

இந்த இயற்கை வீழ்ச்சியும் மாட்சியும்
சிந்தனை செய்தால் எல்லாம் அற்புதம்!
கற்பனைக்(கு) எட்ட அற்புதம் படைத்த
பொற்புடைப் புலவர்! புரட்சி துறவியர்!
ஞாயிறைப் போற்றினார்! திங்களைப் போற்றினார்!
தாயாம் மாமழை போற்றினார்! சால்பாய்ப்
பொங்கும் பொலிவுடைப் பூம்புகார் போற்றினார்!
தங்கத் தமிழின் தனிப்புகழ் சாற்றினார்!
காவிரி நாடன் கருணை போற்றினார்!
மேவிய இயற்கையின் மேன்மை சொல்லி
மன்னனைப் போற்றியே மங்கையாக் கரசி
கண்ணகி கற்பினைக் காவியம் தீட்டினார்!

ஞாலம் போற்றும் நாயகன் கோவலன்
காலக் கையில் கடுகென ஆனான்!
மாதவி மார்பில் மணியாய்க் கிடந்து
காதல் கசக்கக் கட்டினான் நடையை!
வீட்டில் இருந்த மாட விளக்குப்
பூட்டைத் திறந்து புறப்பட்ட போது
ஊதித் தீயே உருவம் எடுத்தது!

பெண்ணும் இயற்கையும் ஒன்றெனும் படைப்பு!
அண்ணல் அடிகளார் ஆக்கிய சிலம்பு!
திங்கள் போன்று மங்கலம் வழங்க,
செங்கதிர் போன்று சீரொளி வீச,
மாமழை போன்று மாவளம் அருள,
தாமரைப் பொய்கை தண்ணெழில் கமழ,
மங்கையர் உள்ளம் மாதவம் காண்க!
எங்கும் இயற்கை இனிமை பொழிகவே!

25.04.2008