mardi 7 décembre 2021

விருத்த மேடை - 58

 


விருத்த மேடை - 58

 

எண்சீர் விருத்தம் - 11

 

எட்டுக்காய் [வேறு]

 

அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரும்

   அடிமாற நடித்தாரும் முடிமாறன் அடித்தாரும்

உன்னுமற மொழிந்தாரும் பின்னுமற மொழிந்தாரும்

   உகைத்திடுமா னேற்றாரும் மிகைத்திடுமா னேற்றாரும்

என்னகத்தா முரியாரும் கைந்நாகத்தா முரியாரும்

   எருக்கிதழி மணத்தாரு மருக்கிதழி மணத்தாரும்

வன்னிவடி வனத்தாரும் சென்னிவடி வனத்தாரும்

   வருகருணைப் பதியாரும் பெருங்கருணைப் பதியாரே!

 

[சைவ எல்லப்ப நாவலரின் அருணைக் கலம்பகம் - 54]

 

இப்பாடல் விருத்தமேடை - 57ல் உள்ள எட்டுக் காய் எண்சீர் விருத்தமே யாகும். சைவ எல்லப்ப நாவலர் இவ்விருத்தத்தில் ஒவ்வோர் அரையடியிலும் 1, 3 சீர்கள் எதுகை பெறும் வண்ணம்  பாடியுள்ளார். [அன்னிய - பின்னிய] [அடிமாற - முடிமாறன்] [உன்னுமற - பின்னுமற]....... [வருகருணை - பெருங்கருணை]   

 

கண்ணீரில் குளிக்கின்றேன்!

 

கற்கண்டு மொழியாளே! நற்கெண்டை விழியாளே!

   கண்ணுன்னைத் தேடுதடி! பெண்ணே..நீ பிரிந்ததுமேன்?

நற்றொண்டுச் சுந்தரியே! பொற்கொடியே! என்னுயிரே!

   நடுத்தெருவில் எனைவிட்டுக் கொடுந்துயரைக் கொடுத்ததுமேன்?

வெற்றென்று நினைத்தாயோ? கற்பகமே துடித்தாயோ?

   வெந்துருகி வாடுகிறேன்! நொந்துருகி ஓடுகிறேன்!

சற்றென்று சிறுநொடியில் முற்றுமெனை மறந்ததுமேன்?

   தண்ணிலவே தவிக்கின்றேன்! கண்ணீரில் குளிக்கின்றேன்!

 

[பாட்டரசர்]

 

ஓரடில் எட்டுக் காய்ச்சீர்கள் வரும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும். ஒவ்வோர் அரையடியில் 1ஆம் சீரும் 3 ஆம் சீரும் எதுகையால் ஒன்றும்.

விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
07.12.2021

samedi 4 décembre 2021

விருத்த மேடை - 57

 


விருத்த மேடை - 57

 

எண்சீர் விருத்தம் - 10

 

எட்டுக்காய்

 

மந்தாரை மலர்ந்திருக்க மதுவுண்ணும் வண்டெங்கே?

   மாமுல்லைக் கொடிபடர வளருங்கொள் கொம்பெங்கே?

சிந்தாத மணியிருக்க ஒளியெங்கே சென்றதெனத்

   தேரூரில் பலர்கூடித் தெரிந்துகொளக் கேட்டதற்கு

நந்தாத பரஞான அமுதுண்டு தெவிட்டெறியும்

   நற்பரமா னந்தனருள் பெறச்சென்ற நண்பா!நீ

வந்தாலே மறுமொழியும் வகுப்பமெனச் சோதிடநுால்

   வல்லாரும் கூறுகின்றார் வகையேதும் அறியேனே!

 

[கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]

 

வீரியம் பெருக்கு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

உள்ளொளியும் உடலொளியும் ஓங்கிடவே வேண்டுகிறேன்

   ஊழ்வலியும் உயிர்வலியும் நீங்கிடவே வேண்டுகிறேன்!

செல்வழியும் சேரிடமும் சிறந்திடவே வேண்டுகிறேன்

   சிந்தனைகள் செம்மாந்து பிறந்திடவே வேண்டுகிறேன்!

சொல்மொழியும் சுவையினமும் இணைந்திடவே வேண்டுகிறேன்!

   தொண்டுளமும் அன்புளமும் மணந்திடவே வேண்டுகிறேன்

வெல்வழியும் வீரியமும் பெருகிடவே வேண்டுகிறேன்!

   வேங்கடவா! உன்னருளைப் பருகிடவே வேண்டுகிறேன்!

 

 [பாட்டரசர்]

 

ஓரடில் எட்டுக் காய்ச்சீர்கள் வரும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

04.12.2021

jeudi 2 décembre 2021

விருத்த மேடை - 56

 


 விருத்த மேடை - 56

 

எண்சீர் விருத்தம் - 9

 

ஆறு காய் + மா + தேமா

 

தமிழ்மொழியின் பெருமைதன்னை உலகறிய எடுத்தறைந்த

   தனிப்பறையின் பேரோசை தணிந்த தேயோ!

துமியுரைத்த கவியரசன் சுவையிளக்கக் கம்பனுக்காய்த்

   துாதுவந்த பாதமலை துவண்ட வேயோ!

அமிழ்ந்துறங்கும்  தமிழர்களை அடிமையிருள் அகன்றதென

   அழைத்தெழுப்பும் கோழிகுரல் அடைத்த தேயோ?

குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச்

   சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை! 
   

[நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை]

 

வையத் தலைமைகொள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

பன்மொழிகள் விளையாடும் பாரரங்கில் பாட்டரசே!
   பண்ணரசே! பண்பரசே! பறையைத் தட்டு!

தென்மொழிகள் தொழுகின்ற செந்தமிழைத் திசையெட்டும்
   செப்பிடவே சந்தப்பா தீட்டிக் கொட்டு!

பொன்மொழிகள் புகழ்மொழிகள் புனைமொழிகள் பூத்திடவே
   புவித்தமைமை ஏற்றிடுவாய் புகழைத் தொட்டு!

வன்மொழிகள் நீங்கிவிடும்! இன்மொழிகள் ஓங்கிவரும்!

   வாழ்வினிக்க அன்பருளாம் மாலை கட்டு!

 

 [பாட்டரசர்]

 

நான்கு காய் ஒருமா தேமா என்ற வாய்பாட்டில் அறுசீர் விருத்தம் உள்ளது. ஆறு காய் ஒருமா தேமா என்ற வாய்பாட்டில் அமைந்த எண்சீர் விருத்தம் இது. நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் ஏழாம் சீரும் மோனையுறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.12.2021

mercredi 1 décembre 2021

விருத்த மேடை - 55

 


விருத்த மேடை - 55

 

எண்சீர் விருத்தம் - 8

 

 விளம் + விளம் + விளம் + மா
   விளம் + விளம் + விளம் + மா

குண்டலம் குழைதிகழ் காதனே என்றும்,

   கொழுமழு வாட்படைக் குழகனே என்றும்,

வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்,

   வாய்வெரு  வித்தொழு தேன்,விதி யாலே!

பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்

   பசுபதி பதிவின விப்பல நாளும்,

கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவும்

   கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே!

 

 [சுந்தரர் தேவாராம் - திருக்கழுமலம் ]

 

விதையினைத் தெரிந்து இடு [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

நீர்வளம் நிலவளம் ஆய்ந்துணர்! உழைப்பே

   நிறைவளம் நல்கிடும் ஏற்றுணர்! நெஞ்சுள்

நேர்வளம் ஓங்கிடும் குறளுணர்! இன்ப

   நீடுளம் பெற்றிடும் அருளுணர்! வாழ்வில்

சீர்வளம் சேர்த்திடும் தமிழுணர்! மின்னும்

   தேர்வலம் தந்திடும் மாண்புணர்! ஆல

வேர்வளம் தாங்கிடும் தகையுணர்! நன்றே

   விதைவளம் ஈந்திடும் பயனுணர் தோழா!

 

 [பாட்டரசர்]

 

அரையடி தோறும் இறுதியில் [நான்காம் சீர்] மாச்சீரும், முதல் மூன்று இடங்களில் விளச்சீரும் வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஏற்கும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.12.2021