vendredi 26 août 2016
jeudi 25 août 2016
வினா விடை வெண்பா
வினா விடை
வெண்பா -1
நீதி யறிந்த நெடுங்கவியே! வாழ்வழிக்கும்
சாதிப் பிரிவுமேன் சாற்றுகவே? - ஆதியிலே
உண்டு கொழுத்திடவே நண்டுத் தமிழர்களைக்
கண்டு பிரிதார் கணித்து!
வெண்பாவின் முதல் ஏழு சீர்களில் வினாவைத் தொடுக்க
வேண்டும். எட்டாம் சீரிலிருந்து பதினைந்தாம் சீருக்குள் விடை அமையவேண்டும்.
மகடூஉ முன்னிலை சிறப்புடையது.
வினா விடை
வெண்பா -2
நான்குவகை யென்பார்! நறும்பூ வினையென்பார்!
ஊன்றுபுகழ் வாணர் உயிரென்பார்! - தோன்றுமெழில்
மேவிடத் தேயும்!விண் பேர்!புலவர் கூடுமிடம்!
பாவலர் பாவரங்கம் பார்!
வெண்பாவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வரும் பதில்களைச்
சேர்த்தால் இறுதி வினாவிற்கு விடையாக வரவேண்டும்.
நான்கு வகை - பா
நறும்பூ வினை - அலர்
கவிவாணரின் உயிர் - பா
தேயும் கருவி - அரம்
விண்ணின் பேர் - கம்
பா + அலர் + பா + அரம் + கம்
புலவர் கூடும் இடம் - பாவலர் பாவரங்கம்
வினா விடை
வெண்பா - 3
கக்கக்கக் கக்கக்கக் கக்கு!
ஈற்றில் விழியின்பேர்! ஏற்றசளி செய்யும்பேர்!
மாற்றிப் பலதுண்டை வார்க்கும்பேர் - சாற்றிடுமே
இக்கூட் டெலும்பின்பேர்! ஏந்துசிரிப் புற்றபேர்!
கக்கக்கக் கக்கக்கக் கக்கு!
கக்க்க்(கு)அக்(கு) அக்கக் கக்(கு) அக்கு!
ஈற்றில் உள்ள அக்கு - விழியை அக்கு என்றுரைப்பர்
கக்கு - கக்குதல், இருமுதல்
அக்கக் - அக்கக்காய்ப் பிரித்தல்
அக்கு - எலும்பு
கக்கக்கு - கக்கக்கெனும் சிரித்தற்குறிப்பு
வினா விடை
வெண்பா - 4
கண்ணே! கனிமொழியே! கண்கவரும் தேவதையே!
பெண்ணே! பெயரென்ன? பெற்றநகர் என்ன?
பழமைக் கெதிராகும்! ஈறுகெடும்! பாய்ந்து
செழுமைச் சிறப்பூட்டும் கையாற்றின் முன்னெழுத்து!
சாதிப் பெயராம்! தமிழில் வினாவாகும்!
ஓதும் புறநகரை! உண்மைப் பெயரொளிரத்
தங்கத்தில் சேரும்! சரமாகக் கோத்தாடும்!
தங்கு நலம்நல்கும் தாமரையாள்! நம்நாட்டில்
வார இதழாய் வருகின்ற பெண்ணவள்!
ஊரும் பெயரும் உணர்!
பழமைக் கெதிராகும் ஈறுகெடும் - புதுமை - புது
கையற்றின் முன்னெழுத்து - வைகை - வை
சாதிப் பெயராகும் - முதலி
தமிழில் வினாவாகும் - யார்
ஓதும் புறநகரை - பேட்டை
சரமாகக் கோத்தாடும் - முத்து
தாமரையாள் - லட்சுமி
வார இதழ் - தேவி
விடையாக வந்த சொற்களைச் சோத்தால் காதலன் கேட்ட கேள்விக்கு
விடை கிடைக்கும்.
புதுவை முதலியார்பேட்டை முத்துலட்சுமி தேவி
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.08.2016
சதுரங்க சித்திர கவி ஓங்கார நாயகன்
ஓங்கார
நாயகன்
ஓதுமறை
ஐங்கரனே! வா!நாவோங் கொண்டமிழை
ஏதுகுறை
யின்றித்தா! என்னுயிருள் - மோதுமலை
வீழ்கவே!
உன்னருளால் மேவிய காதலின்
சூழ்கவே
துாய தொடர்பு!
பக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து
நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை
ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும்
விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக
அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும்
சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில்
குதிரை "ட" அமைப்பில் தாண்டிச் செல்லும்)
பாட்டரசர்
கி. பாரதிதாசன்
25.08.2016
சதுரங்க சித்திரகவி ஓம் நமோ நாராயணா
சித்திரகவி
ஓம் நமோ நாராயணா!
கண்ணா!என் மன்னா!செம் மண்ணிட்ட மோகமுகா!
வண்ணா!தா மோதரா! மாமலரா! - தொண்டுளம்
தாங்கிடத் துாயவனே தாராய்நா மம்!நலமே
ஓங்கிட நல்வழி ஊட்டு!
பக்கத்திற்கு எட்டுக் கட்டங்கள் அமைந்து அறுபத்து நான்கு கட்டங்கள் உள்ள சதுரங்க சித்திரத்தில், ஒரு கட்டத்தினின்று புறப்பட்ட குதிரை ஒன்று குதித்த இடத்தில் மீளவுங் குதிக்காமல் அறுபத்து நான்கு கட்டங்களிலும் ஒன்றும் விடாமற் செல்லுங்கால் செய்யுளிலுள்ள வரிசைப்படி எழுத்துகளைக் கட்டத்திற்கு ஓரெழுத்தாக அமையுமாறும், நேர் வரிசையிலோ கோணாந்தரங்களிலோ, அன்றி வேறு விதமாகவோ விருப்பமான பெயர்களும் சொற்றொடர்களும் புலப்படப் பொருந்துமாறும் புலவன் இயற்றும் கவிதை. (சதுரங்க விளையாட்டில் குதிரை "ட" அமைப்பில் தாண்டிச் செல்லும்)
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.08.2016
lundi 22 août 2016
ஒன்றில் நான்கு [சதுர்பங்கி]
ஒன்றில் நான்கு [சதுர்பங்கி]
ஒரு பாடலை நான்காகப் பகிர்தல்
எண்சீர் விருத்தம்!
கற்கண்டுக் காரிகையே! ஞாலம் போற்றும்
நற்றொண்டு செய்கின்றாய்!
காலம் போற்றும்!
சொற்கொண்டு பாடுகிறேன்! கோலப் பெண்ணே!
விற்கொண்ட விழியழகே! வேலன்
காப்பான்!
பற்றுண்டு! பணிவுண்டு! நெஞ்சக் கூட்டில்!
பொற்புண்டு! புகழுண்டு! கொஞ்சும்
பாட்டில்!
கற்புண்டு! கனிவுண்டு! விஞ்சும் இன்பம்!
வற்புண்டு காதலிலே! தஞ்சம்
நானே!
1. வஞ்சித்துறை
கற்கண்டுக் காரிகையே!
நற்றொண்டு செய்கின்றாய்!
சொற்கொண்டு பாடுகிறேன்!
விற்கொண்ட விழியழகே!
2. வஞ்சித்துறை
ஞாலம் போற்றும்
காலம் போற்றும்
கோலப் பெண்ணே!
வேலன் காப்பான்!
3. வஞ்சித்துறை
பற்றுண்டு! பணிவுண்டு!
பொற்புண்டு! புகழுண்டு!
கற்புண்டு! கனிவுண்டு!
வற்புண்டு காதலிலே!
4. வஞ்சித்துறை
நெஞ்சக் கூட்டில்!
கொஞ்சும் பாட்டில்!
விஞ்சும் இன்பம்!
தஞ்சம் நானே!
இலகக்கணக் குறிப்பு:
ஒரு செய்யுள் ஒரு பொருள்
பயப்பதன்றி, அதுவே நான்கு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.08.2016
Inscription à :
Articles (Atom)



