dimanche 5 mai 2024

செகவான் சிறப்புப் பாயிரம்

 

கவிஞர் செகவான் படைத்த  

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

கொடிமீன் பறக்குங் கூடற் றமிழால்

அடித்..தேன் சுரக்கும் அருமைக் கவிஞர்!

உழவுத் தொழிலை உயிராய்ப் போற்றி

ஒழுகும் குடியில் உதித்த சீலர்! 

வில்லி புத்துார்க் கல்விக் கூடம்

அள்ளி யளித்த அமுதப் பாடம்

தந்த திறனால் தகைசேர் பணியால்

முந்து புகழில் முகிழ்த்த வீரர்!

கண்துறை மருத்துவங் கற்றுச் சிறந்து

பண்துறை யாப்பைப் பாடிப் பயின்று

பாவலர் மணியாய்ப் பட்டம் பெற்று

நாவலர் போற்றும் நற்புகழ் பெற்றார்!

பாட்டின் அரசன் பாரதி தாசன்

காட்டிய நெறியில் தீட்டிய கவிகள்

விருத்த மாயிரம் வியன்பெயர் சூடிப்

பொருத்த மாகப் பொலியும் இந்நுால்!

ஈடில் கம்பன் எழுதிய வழியில் 

சூடிய படையல்! தொன்மைப் புதையல்!

மன்னர் வாழ்வை மரத்தின் வாழ்வைத்

தன்னுள் கொண்டு  தழைத்த சுவடி
ஆண்ட தமிழின் அழகைக் கூறும்!

நீண்ட மரத்தின் நிலையைச் சொல்லும்!

ஆசான் கேட்க அளித்த ஏடு

வாச மலராய் மணத்தை வழங்கும்!

பாவலர் பயிலும் பைந்தமிழ் அரங்கில்

காவலர் பலர்முன் களமே யேறி

யாப்பின் நுட்பம் யாவும் மீட்டித்

தோப்பின் கனியாய்ச் சுவையைக் கூட்டிக்

கற்றோர் வாழ்த்தக் கனிந்த யாக்கம்!

பற்றுடன் மொழியைப் பாது காக்கும்!  

இருமுறை ஆயிரம் இணையும் ஐம்பது

ஒருமுறை ஐந்தாம் ஒண்குறள் ஆண்டில்

பாரதம் என்னும் பழம்பெரு நாட்டில்

தேருலாச் செல்லும் செந்தமிழ்த் தாயின்

முகமே இமயம்! முக்கடல் சூழும்!

அகமே அறத்தின் ஆலய மாகும்!

மரபைக் கற்கும் மாணவர்க் கெல்லாம்

உரமே யாகி உயர்வைக் கொடுக்கச்

செகவான் என்ற செம்பெயர் புனைந்தே  

அகவான் ஒளிர அளித்தார் நுாலே!

கவி.சு. செல்வக் கடுங்கோ வாழியார்

புவியே போற்றும் புலமை பொலிகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

01.05.2024

 

Aucun commentaire:

Enregistrer un commentaire