பாவலர்மணி நெய்தல் நாடன்
பிறந்தநாள் வாழ்த்து!
நன்னெறிப் பாக்கள் பாடும்
........நற்றமிழ் நெய்தல் நாடன்
பொன்னெறி ஈழ நாட்டில்
........பொலிவுடன் பிறந்த நன்னாள்
இன்னெறி சூடி வாழ்க!
........இனனலம் மேவி வாழ்க!
மின்னெறி கோடி யேந்தி
........மேதினி போற்ற வாழ்க!
பற்றுடன் மொழியைப் பேணும்
........பண்புடை நெய்தல் நாடன்
பொற்புடன் பணிகள் ஆற்றப்
........புவியினில் பிறந்த நன்னாள்
வற்புடன் ஓங்கி வாழ்க!
........வளர்புகழ் தாங்கி வாழ்க!
வெற்புடன் ஆண்ட சீர்போல்
........வெற்றியைக் குவித்து வாழ்க!
போர்க்களக் குடியில் வந்த
........புலிக்கொடி நெய்தல் நாடன்
சீர்க்களம் யாவுங் காணச்
........செகத்தினிற் பிறந்த நன்னாள்
ஏர்க்களப் பசுமை காண்க!
........எண்டிசைப் புதுமை காண்க!
தார்க்களத் தமிழைத் தம்மின்
........தலைக்களம் அணிந்து வாழ்க!
கற்றவர் களிக்கும் வண்ணம்
........கமழ்ந்திடும் நெய்தல் நாடன்
பெற்றவர் களிக்கும் வண்ணம்
........பெயர்பெறப் பிறந்த நன்னாள்
உற்றவர் களிக்க வாழ்க!
........உறவுகள் திளைக்க வாழ்க!
நற்றவச் சீர்கள் காத்து
........நானிலம் போற்ற வாழ்க!
ஈழமே உயிரா யெண்ணி
........இயங்கிடும் நெய்தல் நாடன்
வேழமே கொண்ட வன்மை
........விளைந்திடப் பிறந்த நன்னாள்
அழுமே எழுத்தில் காண்க!
........அமுதமே படைப்பில் காண்க!
சோழனே நெஞ்சுள் கொண்டு
........தொடர்பணி புரிந்து வாழ்க!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
01.07.2023
Aucun commentaire:
Enregistrer un commentaire