தெம்மாங்கு
ஒத்த ரூபாய் தாரேன் என்ற மெட்டு
ஆண்
மூட்ட நெல்லு தாரேன் - ஒரு
மூக்குத்தி வாங்கித் தாரேன்
காட்டுப் பக்கம் வாடி - யெனக்
கட்டி யின்பம் தாடி
பெண்
மூட்ட நெல்லு வேணா - ஒரு
மூக்குத்தி ஒன்னு வேணா
பாட்ட கொஞ்சம் மாத்து - இனிப்
பண்ண வேணா கூத்து
ஆண்
கட்டுக் கரும்பு தாரேன் - பவுன்
கம்மல் வாங்கித் தாரேன்!
தொட்டுப் பேச வாடி - மனம்
சொக்குங் கவிதை பாடி
பெண்
கட்டுக் கரும்பு வேணா - பவுன்
கம்மல் ஒன்னு வேணா
எட்ட போயி நில்லு - நீ
இளிக்க உடையும் பல்லு
ஆண்
பட்டுப் புடவ தாரேன் - யேன்
பாதிக் காணி தாரேன்
கிட்ட வந்து பேசு - மலர்
கிள்ளி மேல வீசு
பெண்
பட்டுப் புடவ வேணா - ஒம்
பாதிக் காணி வேணா
முட்டைக் கண்ணு மாமா - யேன்
மூச்சு முட்டுங் காமா
ஆண்
காலு கொலுசு தாரேன் - கைக்
காப்புச் செய்து தாரேன்
நாலு மணி யாச்சி - இனி
நடக்குங் காம னாட்சி
பெண்
காலு கொலுசு வேணா - கைக்
காப்புச் செய்ய வேணா
நாளு முழுதும் தொல்ல - ஓங்
நடிப்புக் கில்லை எல்ல
ஆண்
நெத்திச் சுட்டி தாரேன் - எழில்
நீலப் பதக்கம் தாரேன்
கத்தரித் தோப்புக் குள்ள - வா
காதல் பாடம் சொல்ல
பெண்
நெத்திச் சுட்டி வேணா - எழில்
நீலப் பதக்கம் வேணா
சுத்த மில்லாப் பேச்சி - ஓங்
புத்தி யெங்கே போச்சி
ஆண்
முத்து மால தாரேன் - ஓங்
முகத்துச் சாயம் தாரேன்
காத்துக் குயில் தோட்டம் - வா
காண மயில் ஆட்டம்
பெண்
முத்து மால வேணா - ஓங்
முகத்துச் சாயம் வேணா
செத்த மெல்லத் தள்ளு - மாமா
செய்யா திங்க லொள்ளு!
ஆண்
சீல வாங்கித் தாரேன் - காது
சிமிக்கை வாங்கித் தாரேன்
சோல பக்கம் வாடி - நாம
சொந்த மாவோங் கூடி
பெண்
சேல ஏதும் வேணா - காது
சிமிக்கை ஏதும் வேணா
வேல ஏதும் மில்ல - நீ
மேலும் மேலும் தொல்ல
ஆண்
தோடு வாங்கித் தாரேன் - மாந்
தோப்பு வாங்கித் தாரேன்
ஆடு மாடு மேயும் - ஓங்
அழகைக் கண்டு சாயும்
பெண்
தோடு போட வேணா - மாந்
தோப்புக் கூட வேணா
ஓடு வேறு பக்கம் - இலை
உண்ண ஆடு எக்கும்
ஆண்
ஒட்டி யாணம் தாரேன் - யேங்
உசுர கூடத் தாரேன்
ஒட்டிக் கொள்ள வாடி - நாம
ஒதுங்கு மிடம் தேடி
பெண்
ஒட்டி யாணம் வேணா - ஓங்
உசுர விட வேணா
தொட்டுப் பேசும் ஒன்ன - இங்குத்
துரத்தும் வழி யென்ன
ஆண்
வேலி வாங்கித் தாரேன் - நீ
வேண்டும் பொருள் தாரேன்
சாலி யாக வந்து - நீ
தருக மலர்ப் பந்து!
பெண்
வேலி ஒன்னும் வேணா - மச்சான்
மேவு பொருள் வேணா
தாலி செய்து கட்டு - பின்
தழுவிக் கும்மி கொட்டு
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.04.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire