அமுத வெண்பா!
அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ ஆகிய 11 எழுத்துக்களை அமுத எழுத்தென்பர். இவ்வெழுத்துக்களைச் சீர்களின் முதலெழுத்தாகக் கொண்டு பாடப்படும் வெண்பா அமுத வெண்பாவாகும். வாழ்த்தும், மங்கலமும், விழுமிய பொருளும் கருவாக அமையும்.
மேற்கூறிய நான்கு உயிர்களோடு [அ,இ,உ,எ] புணர்ந்து தோன்றும் உயிர்மெய் எழுத்துக்களும், கம்முதல் வவ்வீறாகக் கூறிய மெய்யெழுத்தினோடு [க்,ச்,த்,ந்,ப,ம,வ,] புணர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துக்களும் அமுதெழுத்தாகும்.
கசதப நமவ ஏழொடும் அகரம்
இகரம் உகரம் எகரம் நான்கும்
அமுத எழுத்தென்று அறைந்தனர் புலவர்
[இலக்கண விளக்கம் 779]
அஇஉஎ கசதந பமவவும்
அமுத எழுத்து
[முத்து வீரியம் 71]
பன்னிரு பாட்டியல் - 23, நவநீதப் பாட்டியல் - 10, சிதம்பப் பாட்டியல் - 4, வெண்பாப் பாட்டியல் - 7, தொன்னுல் விளக்கம் 290, சுவாமிநாதம் - 175, பொருத்த விளக்கம் - 29 ஆகிய இலக்கண நுால்களில் அமுத எழுத்தைக் குறித்து நுாற்பாக்கள் உள்ளன.
யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ய், ர், ல், ள், ஃ, மகரக் குறுக்கம்,உயிரளபெடை, ஒற்றளபெடை, ஆகிய எழுத்துக்களை நச்செழுத்தென்று மேற்கூறிய இலக்கண நுால்களில் காண்கிறோம். நச்செழுத்தின்றி அமுதவெண்பா அமைதல் சிறப்பு. ய்.ர்,ல்,ள் ஆகிய வர்க்க எழுத்துக்களை நீக்குதல் சிறப்பு.
அமுத எழுத்துக்களைக் சீரின் முதல் எழுத்தாகக் கொண்டும், நச்செழுத்து இன்றியும் அமுத வெண்பா அமைய வேண்டும்.
அமுத வெண்பா!
பண்ணைப் படைக்கப் பறந்தே..வா! வண்ணமுடன்
மண்ணைப் படைக்க மணந்தே..வா! - தண்டமிழே!
பற்றே..தா! பண்பைப் பழுத்தே..தா! நற்றவத்தைக்
கற்றே கமழுமென் கண்!
வெண்பாவின் 15 சீர்களும் அமுத எழுத்தில் தொடங்க வேண்டும்,
[அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ]
வெண்பாவில் வரக்கூடாத எழுத்துக்கள்
ய், ய, யா, யி, யீ,...................யௌ
ர், ர ரா, ரி, ரீ, ய், ...................ரௌ
ல், ல, லா, லி, லீ,...................லௌ
ள், ள, ளா, ளி, ளீ,...................ளௌ
ஃ, மகரக் குறுக்கம், உயிரளபெடை, ஒற்றளபெடை.
அமுத நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
01.12.2020
Aucun commentaire:
Enregistrer un commentaire