12.08.1969 - 18.11.2020
கண்ணீர்க் கவிதை
உறவே பிரிந்ததுமேன்? உள்ளம் உடைந்திங்[கு]
இரவே இறங்கியது! ஏன்இக் - கரவே..சொல்?
தாங்காத் துயரளித்தாய்! தக்க செயலிதுவோ?
துாங்கா[து] உறைந்தோம் துடித்து!
அய்யா வணக்கம் என்பாயே!
அழகாய் அழைத்துச் செல்வாயே!
செய்யாப் பணிகள் ஒன்றுண்டோ?
சேவைக்[கு] என்றே வந்தாயோ?
பெய்யா நிலமாய்த் துயர்மேவப்
பிழைகள் என்ன யாம்செய்தோம்?
மெய்யா இறைவன்? புலம்புகிறேன்!
மீண்டும் உன்னைக் காண்பேனா?
வீட்டைத் தேடி அலைந்தனையே!
விண்ணில் மின்னும் குறையில்லா
வீட்டை நாடி அடைந்தனையோ?
மீளாத் துன்பம் அளித்தனையே!
ஓட்டை உடலில், இதயத்தில்
ஓட்டம் குன்றிக் கிடைந்தனையே!
"சேட்டை செய்வார்" என்பாயே
செப்ப மறந்து சென்றதுமேன்?
பிள்ளை செயலை நினைத்தாயோ?
பெண்ணின் வாழ்வை நினைத்தாயோ?
கொள்ளை புரியும் உலகத்தின்
கொடுமை கண்டு பதைத்தாயோ?
தொல்லை தந்த உறவுகளால்
துவண்டு நெஞ்சம் துடித்தாயோ?
எல்லை கடந்து சென்றதுமேன்?
இதயம் வெடிக்கச் செய்ததுமேன்?
மாமி சொன்ன சொல்லாலோ,
மனைவி சொன்ன மொழியாலே,
பூமி சொன்ன உரையாலோ,
பொல்லார் சொன்ன பழியாலோ,
நேமி போகும் போக்காலோ,
நேயம் அற்ற கூற்றாலோ,
சாமி இடத்தை நாடினையோ?
தரணி வெறுத்தே ஓடினையோ?
நாளும் புரிந்த பயனெண்ணி
நட்பும் உறவும் உனைத்தேடும்!
மூளும் வினையை நீக்கிடவே
முன்னே உன்றன் நினைவுவரும்!
தோளும் புடைக்கப் பெருஞ்சுமையைத்
துாக்கி என்முன் நீ..செல்வாய்!
மாளும் சுமையை ஏன்..தந்தாய்?
மாமன் தங்கை அழுகின்றோம்!
நுாறு வருடம் பேசுவதை
நோவா[து] ஐம்ப[து] ஆண்டுகளில்
கூறும் உன்வாய் மூடியதேன்?
கூடும் உறவை வாட்டியதேன்?
மாறும் காலம் என்றனையே!
மாயம் ஆக மறைந்தனையே!
தேறும் வழிகள் தெரியலையே!
தேம்பும் நெஞ்சம் அடங்கலையே!
அம்மா அப்பா தேடிடுவார்!
அண்ணன் தம்பி நாடிடுவார்!
இம்மா நிலத்தில் உன்தங்கை
என்றும் எண்ணி வாடிடுவாள்!
சும்மா கூட உனக்குள்ளே
சூதும் வாதும் இலையென்பேன்!
பெம்மான் விருப்பம் கொண்டதனால்
பிறப்பை முடித்துக் கொண்டாயோ?
வண்டி ஓட்டும் உன்..கைகள்
மாயன் இடத்தில் சரண்புகுமே!
சண்டி செய்யும் பேர்களையே
தாக்கும் வீரம் படைபுகுமே!
நொண்டி செல்லும் வாழ்க்கையினை
நோக்கி இதயம் அரண்தருமே!
தொண்டில் இருக்கும் நான்..இங்குத்
தோழா எங்குச் செல்வேனோ?
நாடு கேட்கப் பாடுபவன்
காடு கேட்கக் கதறுகிறேன்!
கூடு விட்டுப் புரிந்தாலும்
கொடுத்த நலனை மறப்பேனா?
தேடு பொருளை உறவுக்கே
சூடும் உன்போல் யார்உள்ளார்?
வாடும் வாடும் நட்புலகம்
வார்த்தை இன்றிக் குமுறுகிறேன்!
உறையும் குளிர்ச்சி அறைக்குள்ளே
உவந்து வேலை புரிந்தாயே!
மறையும் பொழுதில் குளிர்பெட்டி
வா..வா என்றே அழைத்ததுவோ?
குறையும் நிறையும் தெளிந்தவனே!
குடும்ப நிலையை மறந்ததுமேன்?
கரையும் எங்கள் துயர்க்கண்கள்!
கருத்துள் நிலைத்த பாற்கரனே!
உன் பிரிவால் வாடும்
பாட்டரசன்
18.11.2020
Aucun commentaire:
Enregistrer un commentaire