samedi 29 décembre 2018

காதல் வலி


காதல் வலி
  
ஆசை அனலை மூட்டியவள்!
   அமுதை அள்ளி யூட்டியவள்!
ஓசை இனிக்கும் உயர்தமிழை
   உள்ளம் மகிழ மீட்டியவள்!
மீசை முறுக்கி நான்..காட்ட
   மின்னல் கனவைக் காட்டியவள்!
காசை எண்ணிப் பிரிந்தாளோ?
   கண்கள் உறக்கம் இழந்தனவே!
  
கொடிபோல் சுற்றித் தழுவியவள்!
   குயில்போல் பாடித் தாவியவள்!
செடிபோல் பூத்தே ஆடியவள்!
   தேன்போல் சுவையைச் சூடியவள்!
துடிபோல் கொண்ட இடுப்பழகால்
   துாண்டும் உணர்வை ஏற்றியவள்!
இடிபோல் தாக்கிப் பிரிந்ததுமேன்?
   இதயம் வெந்து கொதிக்கிறதே!
  
கூடிக் களித்த இடமெல்லாம்
   கோடிக் கதைகள் கூறிடுமே!
ஆடிக் களித்த இடமெல்லாம்
   அழகைக் காண அழைத்திடுமே!
பாடிக் களித்த இடமெல்லாம்
   பார்வைக் குள்ளே படர்ந்திடுமே!
தேடிக் களித்த இடமெல்லாம்
   தேள்போல் கொட்டப் பிரிந்ததுமேன்?
  
முயல்போல் ஆட்டம் காட்டியவள்!
   மோகக் கலையைச் சூட்டியவள்!
உயிர்போல் என்னை எண்ணியவள்!
   உலவும் நிலவாய் மின்னியவள்!
பயிர்போல் பசுமை ஏந்தியவள்!
   பாட்டுக் கடலில் நீந்தியவள்!
துயா்மேல் துயரை எனக்கீந்து
   துணிந்து வழியில் பிரிந்ததுமேன்?
  
சொக்கி மார்பில் சாய்ந்தவளாம்!
   துாபம் போன்று மணந்தவளாம்!
எக்கி முத்தம் பதித்தவளாம்!
   இன்பக் கவிகள் இசைத்தவளாம்!
திக்கித் திக்கி மொழிபேசிச்
   சிக்கித் தவிக்கச் செய்தவளாம்!
கொக்கி போட்டு நெஞ்சத்தைக்
   குத்திக் கொல்லும் பிரிவேனோ?
  
செல்லம் என்ற ஒருசொல்லில்
   உள்ளம் ஒன்றி மயங்கிடுவாள்!
வெல்லம் என்றே என்கவியை
   விரும்பி நாளும் சுவைத்திடுவாள்!
அல்லும் பகலும் நினைந்தேங்க
   அமுதை யள்ளி வழங்கிடுவாள்!
இல்லம் இருண்டு பாழாக
   ஏனோ என்னைப் பிரிந்தாளோ?
  
கன..மை கண்கள் கொண்டிடலாம்!
   கார்..மை கூந்தல் பெற்றிடலாம்!
மன..மை ஏற்றல் சரியாமோ?
   மதி..மை ஏற்றல் முறையாமோ?
தனிமைச் சிறையில் வாடுகிறேன்!
   தாகம் தணிய வழியில்லை!
இனிமை தந்த இளங்கொடியாள்
   எங்கே போனாள்? தேடுகிறேன்!
  
காதல் சோலை வாடிடுமே!
   கண்கள் அழகைத் தேடிடுமே!
மோதல் புரிந்து நினைவலைகள்
   மூச்சுக் குழலை முட்டிடுமே!
ஓதல் மறந்து்ம், நினைவிழந்தும்
   உற்ற தமிழின் துணைமறந்தும்,
சாதல் நோக்கி மனமோடும்!
   தடுத்துக் காக்க வருவாளோ?
  
மெய்யும் உயிரும் புணர்கின்ற
   மேன்மை உறவை மறந்தாளோ?
செய்யும் வேள்வி அவள்..உறவே!
   செப்பும் வார்த்தை அவள்..பெயரே!
பெய்யும் மழையால் மண்குளிரும்!
   பேசும் அழகால் கண்குளிரும்!
உய்யும் வழிகள் எனக்குண்டோ?
   உறக்கம் இன்றி வாடுகிறேன்!
  
அவளுக் கென்ன? இல்லத்தில்
   அழகாய் வாழும் அகமுற்றாள்!
துவளும் புழுவாய் என்னெஞ்சம்!
   துயரைத் துளியும் அறிவாளோ?
நுவலும் இப்பா, என்வலியை
   நுாற்றில் ஒன்றை உரைத்திடுமோ?
கவரும் காலன் வருமுன்னே
   கன்னி உறவைப் பெறுவேனோ?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.12.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire