சிந்துப்பா மேடை - 2
கிளிக்கண்ணி
விண்மகன் கிளிக்கண்ணி
விண்ணின் திருமகனார்
மண்ணில் பிறந்தாரடீ!
கண்ணில் நிறைத்தேனடீ - கிளியே!
பண்ணில் குழைத்தேனடீ!
பனிநிறை காலத்திலே
நனிதேவர் வந்தாரடீ!
கனிச்சுவை ஊறுதடீ! - கிளியே!
தனிச்சுவை ஏறுதடீ!
அந்தத் தொழுவத்திலே
வந்து சிரித்தாரடீ!
விந்தை விளைத்தாரடீ - கிளியே!
சிந்தை நிலைத்தாரடீ!
அன்பைப் பொழிந்திடவே
பண்பர் மலர்ந்தாரடீ!
துன்பம் துடைத்தாரடீ - கிளியே!
இன்பம் படைத்தாரடீ!
வேதம் இசைத்திடவே
துாதர் உதித்தாரடீ!
ஓத எழுவோமடீ - கிளியே!
பாதம் பணிவோமடீ!
பொல்லா உலகிடையே
நல்லார் நடந்தாரடீ!
கல்லால் துவண்டாரடீ! - கிளியே!
முள்ளால் வதைந்தாரடீ!
பாவச் சுமையகற்றத்
தேவர் சுடர்ந்தாரடீ!!
ஏவல் புரிந்தாரடீ - கிளியே!
காவல் தொடர்ந்தாரடீ!
நேயம் உரைத்திடவே
ஆயர் அலர்ந்தாரடீ!
தாயாய்த் திகழ்ந்தாரடீ - கிளியே!
ஓயா துழைத்தாரடீ!
பேணிப் புவியணைக்க
ஞானி ஒளிர்ந்தாரடீ!
ஆணிச் சிலுவையினைக் - கிளியே!
மேனி தரித்தாரடீ!
தேவி திருவயிற்றில்
மேவி எழுந்தாரடீ!
கூவி அழைத்தாரடீ - கிளியே!
ஆவி அளித்தாரடீ!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
இந்தக் கிளிக்கண்ணியில் நான்கு அரையடிகள் ஓரெதுகையில் அமையும். நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும். ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். மூன்றாம் அரையடிக்குப் பின் கிளியே - தனிச்சொல் வரும். இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்
இந்த வகையில் விரும்பிய பொருளில் ஐந்து கிளிக் கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.12.2018
Aucun commentaire:
Enregistrer un commentaire