jeudi 27 décembre 2018

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
'வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி'
[நன்னுால்181]
  
இவ்விதியால் 'வாழ்த்துக்கள்', 'எழுத்துக்கள்' வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிக வேண்டுமென நண்பர் உரைக்கின்றார். விளக்கம் தர வேண்டுகிறேன்.
  
பாவலர் அருணாசெல்வம், பிரான்சு
  
------------------------------------------------------------------------------------------
  
வணக்கம்
  
'வன்றொடர் அல்லன முன்மிகா அல்வழி'
[நன்னுால்181]
  
அல்வழிப் புணர்ச்சியில் நெடிற்றொடர், மென்றொடர், இடைத்தொடர், உயிர்த்தொடர், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்னே வல்லினம் இயல்பாகும்.
  
நாடு + செழித்தது = நாடு செழித்தது [நெடிற்றொடர்க் குற்றியலுகரம்]
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது [மென்றொடர்க் குற்றியலுகரம்]
சால்பு + பெருகும் = சால்பு பெருகும் [இடைத்தொடர்க் குற்றியலுகரம்]
கிணறு + சிறிது = கிணறு சிறிது [உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்]
எஃகு + கடிது = எஃகு கடிது [ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்]
  
'வன்றொடர் அல்லன முன்மிகா' என்றதால் அல்வழியில் வன்றொடரில் வல்லினம் மிகும் என்பது பெறப்படும்.
  
இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்றிடையில்
மிகாநெடில், உயிர்த்தொடர், முன்மிகா வேற்றுமை
[நன்னுால் 182]
  
வேற்றுமைப் புணர்ச்சியில், இடைத்தொடர், ஆய்தத்தொடர், இடையில் ஒற்று மிகாத நெடிற்றொடர், இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன்வரும் வல்லினம் இயல்பாகும்.
  
சால்பு + பெருமை = சால்பு பெருமை [இடைத்தொடர்]
எஃகு + கடுமை = எஃகு கடுமை [ஆய்தத்தொடர்]
நாகு + கால் = நாகு கால் [நெடிற்றொடர்]
வரகு + கதிர் = வரகுகதிர் [உயிர்த்தொடர்]
  
வேற்றுமையில் வன்றொடர் முன்னும், மென்றொடர் முன்னும் வல்லினம் மிகும் என்பது பெறப்படும்.
  
குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி
கொக்கு + தலை = கொக்குத்தலை
  
1.
இடைத்தொடர், ஆய்தத்தொடர், நெடிற்றொடர், உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன்னே வேற்றுமையிலும், அல்வழியிலும் வல்லினம் மிகாது.
  
2.
வன்றொடர் முன்னே வேற்றுமையிலும், அல்வழியிலும் வல்லினம் மிகும்.
  
3.
மென்றொடர் முன்னே வேற்றுமையில் வல்லினம் மிகும். அல்வழியில் வல்லினம் மிகாது
  
மேலுள்ள இந்நுாற்பாவால் வாழ்த்துக்கள் என்றுதான் வரவேண்டும் என்பது பிழையாகும். நிலைமொழியாக வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லிருக்க, வருமொழி முன்னே க,ச,த,க பெயர்ச்சொல், வினைச்சொல் வர இருவழியும் வல்லினம் மிகும்.
  
கொக்குப் பறந்தது [எழுவாய்த் தொடர்]
சுக்குத் திப்பிலி [உம்மைத் தொகை]
முறுக்குப் பிழிந்தான் [இரண்டாம் வேற்றுமைத் தொகை]
கொக்குக்கால் [ஆறாம் வேற்றுமைத் தொகை]
  
வன்றொடர்க் குற்றியலுகரவீற்றாயினும் வினைத்தொகையிலும், வினைமுற்றிலும் வல்லினம் மிகாது. [இலக்கணச் சுருக்கும் 105 ஆம் விதி]
  
ஈட்டுபொருள் [வினைத்தொகை]
சாற்றுகவி [வினைத்தொகை]
நடத்து தலைவா [ஏவல் ஒருமை வினைமுற்று]
  
கூவிற்றுக் குயில், குறுந்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வினைமுற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க. [இலக்கணச் சுருக்கும் 105 ஆம் விதி]  
அஃறிணைப் பன்மையை உணர்த்தும் 'கள்' என்னும் இடைச்சொல் புணர்ச்சி ஒரு சொல்லுக்குள் நடக்கும் அகப்புணர்ச்சியாகும். வன்றொடர்ச் சொல்லுடன் 'கள்' விகுதி சேரும் அகப்புணர்ச்சியில் கோப்புகள், வாக்குகள், முத்துகள் என வருதலும் உண்டு. ஓசையைக் கருதி எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என வருதலும் உண்டு. இற்றை இலக்கண வல்லுநர் பலரும் எழுத்துகள் என எழுதுவதே சிறப்பென உரைக்கின்றனர். எழுத்துகள் என்று சொல்லும்பொழுது எழுத்தின் பின் 'கள்' சேரும்பொழுது ஓசை குன்றுவதாக உணருகிறேன். ஓசையை உணர்ந்து இவ்வகப் புணர்ச்சியை ஆளுதல் நெறியாகும்.
  
சங்க இலக்கியங்களில் 'கள்' விகுதி பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை. 'கள்' என்ற சொல் மதுவைக் குறிக்கும் உணவுப் பொருளாகத்தான் கையாளப்பட்டிருக்கிறது. அஃறிணைப் பெயர்கள் 'கள்' விகுதி ஏலாமலே, தாம் கொண்டு முடியும் வினைகளின் வழியே, ஒருமையை, பன்மையை உணர்த்தும் வண்ணம் உள்ளன. [குதிரை வந்தது - ஒருமை] [குதிரை வந்தன - பன்மை]
வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லுடன் மதுவைக் குறிக்கும் கள் என்ற பெயா்ச்சொல் வரும்பொழுது வல்லினம் மிகுத்தே வரும். [தோப்புக்கள் - வேற்றுமை ] [தோப்புகள் - பன்மை]
  
அஃறிணைப் பன்மைக்குரிய 'கள்' விகுதி தொல்காப்பியர் காலத்திலேயே உயர்திணைக்கும் வந்துள்ளது.
  
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே [தொல். 484]
  
'மக்கள்' இது மரூஉப் புணர்ச்சியாகும். மகவு என்னும் பெயர் குழந்தையைக் குறிக்கும். பகுத்தறிவில்லாத குழந்தை அஃறிணையின் பாற்பட்டதே. தொல்காப்பிய மரபியலில் குரங்கினது குட்டிக்கும் மகவு எனப் பெயர் கூறப்பட்டதைக் காணலாம். முதலில் அஃறிணை மரபில் சிறுபிள்ளையைக் குறிக்கவந்த மக்கள் என்னும் பெயர்ச்சொல், பின்னே ஒரு மாந்தனின் மக்களையும், ஓர் ஊர்த்தலைவனின் மக்களான பொதுமக்களையும் குறிக்கத் தலைப்பட்டது என்று கொள்வதற்கு இடமுண்டு.
  
இன்று 'கள்' விகுதி இரு திணையிலும் விகுதிமேல் விகுதியாக வரக் காண்கிறோம். அவை, இவை, எவை, அவர், இவர், எவர், மாந்தர் என்பன பன்மைச் சொற்களே ஆனாலும் அவற்றோடு 'கள்' விகுதியும் சேர்த்து எழுதப்படுகிறது. [ அவைகள், இவர்கள், மாந்தர்கள்]
  
வினைச்சொற்களுக்குப் பன்மைப்பால் குறிக்க அர், ஈர் என்ற விகுதிகள் இருந்தும், அவற்றின் மேலும் விகுதிமேல் விகுதியாகக் 'கள்' விகுதி கொள்ளலாயின. தந்தார், தந்தீர் என்றாலே பன்மை உணர்த்தினும் அவற்றோடு 'கள்' சேர்ந்து 'தந்தார்கள்', 'தந்தீர்கள்' என்றே மக்கள் உரைக்கலாயினர். அவர்கள் வந்தர்கள் என்பதே மரியாதைக்குரிய தொடராக இன்று ஏற்கப்பட்டது.
  
கள் பின்னொட்டுப் புணர்ச்சி விதிகள்
  
ஓரெழுத்து ஒருமொழிப்பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகுத்தே புணரும்.
  
பா + கள் = பாக்கள்
பூ + கள் = பூக்கள்
  
ஓரெழுத்து ஒருமொழி ஐகார உயிர்மெய் எழுத்தின் பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகுவதில்லை.
  
கை + கள் = கைகள்
பை + கள் = பைகள்
  
குறில் நெடில் இணையாய் வரும் ஆகார ஈற்று நிரையசைச் சொற்களின் பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகும்.
  
விழா + கள் = விழாக்கள்
வினா + கள் = வினாக்கள்
  
ஈரெழுத்து ஒருமொழி முற்றியலுகரத்தின் பின் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகும்.
  
தெரு + கள் = தெருக்கள்
கொசு + கள் = கொசுக்கள்
  
இணைக்குறிலாயினும் உகர ஈறு அல்லாத இடங்களில் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
  
அணி + கள் = அணிகள்
கனி + கள் = கனிகள்
  
குறில்மெய் நிலைமொழி ல், ள் ஈற்றின் பின் 'கள்' விகுதி சேரும்போது திரியும். நெடில்மெய் நிலைமொழி ல், ள் பின் 'கள்' விகுதி சேரும்போது இயல்பாகும்.
  
கல் + கள் = கற்கள்
முள் + கள் = முட்கள்
  
கால் + கள் = கால்கள்
நாள் + கள் = நாள்கள்
  
மகர ஈற்றின் பின் 'கள்' விகுதி சேரும்போது மகரம், இன மெல்லெழுத்தாகும்.
  
வரம் + கள் = வரங்கள்
உம் + கள் = உங்கள்
  
மேற்கூறிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் 'கள்' விகுதி சேரும்போது வல்லினம் மிகுவதில்லை.
  
பண் + கள் = பண்கள்
துாண் + கள் = துாண்கள்
மான் + கள் = மான்கள்
பொய் + கள் = பொய்கள்
சீர் + கள் = சீர்கள்
யாழ் + கள் = யாழ்கள்
மொழி + கள் = மொழிகள்
மலை + கள் = மலைகள்
மரபு + கள் = மரபுகள்
பொருள் + கள் = பொருள்கள்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
22.12.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire