தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
1.
பொங்கும் திருநாளைப் போற்றி மகிழ்ந்திடுவீர்!
எங்கும் தமிழின் எழிலுரைப்பீர்! - தங்குநலம்
சூழும்! சுவையேங்கும்! சூடுகிறேன் வாழ்த்துப்பா!
வாழும் வளங்கள் வளர்ந்து!
2.
பற்றுடன் பைந்தமிழைப் பாடி மகிழ்ந்திடுவீர்!
பொற்புடன் வாழ்வைப் புனைந்திடுவீர்! - நற்றவதால்
ஊரும் உயர்ந்தோங்கும்! ஓதுகிறேன் வாழ்த்துப்பா!
சீரும் சிறந்தோங்கும் சேர்ந்து!
3.
ஒற்றுமை வேண்டும்! உறவாடி இன்புறுவீர்!
நற்றுணை வேண்டும்! நலம்புரிவீர்! - கற்றோர்..போ்
ஓங்கிடவே வேண்டும்! உரைக்கின்றேன் வாழ்த்துப்பா!
தேங்கிடவே வேண்டும் செழிப்பு!
4.
இனங்காக்க வேண்டும்! இணைந்திங்கு வாழ்வீர்!
மனங்காக்க வேண்டும்! மகிழ்வீர்! - வனங்காக்கும்
பேரழகு வேண்டும்! பிணைக்கின்றேன் வாழ்த்துப்பா!
தாரழகு வேண்டும் தழைத்து!
5.
ஏறு தழுவுதலை ஏத்திப் பறையடிப்பீர்!
பேறு தழுவுதலைப் பேணிடுவீர்! - ஆறு..தரும்
பன்னலம் பெற்றிடுவீர்! பாடுகிறேன் வாழ்த்துப்பா!
பொன்னலம் காண்பீர் பொலிந்து!
6.
பொங்கலோ பொங்கலெனப் பொங்கிப் புகழ்ந்திடுவீர்!
திங்களோ திங்களெனத் தேரிழுப்பீர்! - மங்களம்
சூடி சுடர்ந்திடுவீர்! சொல்கின்றேன் வாழ்த்துப்பா!
பாடிப் படைத்திடுவீர் பண்பு!
7.
அன்பாம் அமுதருந்தி ஆடிக் களித்திடுவீர்
நன்றாம் நெறிகளை நாட்டிடுவீர்! -
குன்றாகத்
தோள்வலிமை காண்பீர்! தொகுக்கின்றேன் வாழ்த்துப்பா!
நீள்வலிமை காண்பீர் நிலைத்து!
8.
சாதிமதச் சண்டைகளைத் நீக்கி அகம்தெளிவீர்!
நீதிநெறி ஆய்ந்து நிலையுணர்வீர்! - ஆதிநெறி
வள்ளுவனின் நுால்கற்பீர்! வார்க்கின்றேன் வாழ்த்துப்பா!
உள்ளத்துள் ஏற்பீர் ஒளி!
9.
வடலுார் வழியேற்று வாழ்வை வடிப்பீர்!
உடலுார் உணர்வால் உயர்வீர் - சுடர்கின்ற
நெஞ்சம் அடைவீர்! நெகிழ்ந்துரைதேன் வாழ்த்துப்பா!
தஞ்சம் அடைவீர் தமிழ்!
10.
அருளார் தமிழ்த்தேனை அள்ளிஉளம் உண்பீர்!
பொருளார் பணிகள் புரிவீர்!
- பெருங்கம்பன்
தீட்டும் மொழியேற்பீர்! செப்புகின்றேன் வாழ்த்துப்பா!
கூட்டும் புகழைக் குவித்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.01.2017
இனிய தமிழர் தின வாழ்த்துக்கள் ஐயா...
RépondreSupprimerநான்கு கால் செல்லங்களுக்கு
RépondreSupprimerநான்கு கால் செல்வங்களுக்கு
நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!