கனாக் கண்டேன் தோழீ..நான்!
[கலிவிருத்தம்]
ஈழம் மலர்ந்தே இனிய தமிழாட்சி
வேழம் நிகர்நடை வீரர் அணிகாக்க
ஆழம் அகலம் அறிந்து தமிழ்கற்றோர்
சூழ இருக்கக் கனாக்கண்டேன் தோழீநான்!
எங்கும் எதிலும் எழிலார் தமிழ்மின்ன!
பொங்கும் புலமை பொலிந்து புகழ்மின்ன!
தங்கத் தலைவன் சமைத்த நெறிமின்ன!
சங்கம் தழைக்கக் கனாக்கண்டேன் தோழீநான்!
மண்ணை உயிரென எண்ணிய மாவீரர்
விண்ணை அடைந்தும் வியனருள் செய்கின்றார்!
பெண்ணை நிகரெனப் பேணிடும் சட்டங்கள்
கண்ணைப் பறிக்கும் கனாக்கண்டேன் தோழீநான்!
ஆங்கில மோகம் அறவே இலையென்பேன்!
பூங்குயில் கூவும் பொழில்கள் பலவென்னே்!
தேங்கொடி மீட்டும் இசையைத் தினம்உண்பேன்!
ஈங்கிணை இல்லாக் கனாக்கண்டேன் தோழீநான்!
கொஞ்சிக் களித்துக் குலவும் குயில்கள்..பார்!
விஞ்சும் நடனம் விளைக்கும் மயில்கள்..பார்!
வஞ்சியர் காதலும் பஞ்சியை வெல்லும்..பார்!
நெஞ்சம் நெகிழக் கனாக்கண்டேன் தோழீநான்!
சாதிகள் நீங்கிச் சமத்துவம் தானோங்கும்!
நீதியை நெஞ்சாய் நிலமகள் கொண்டோங்கும்!
ஆதியின் நுால்களை ஓதுயிர் நன்றோங்கும்!
சோதியாய்த் துாய கனாக்கண்டேன் தோழீநான்!
கையூட் டிலையே! கயவர்கள் இல்லையே!
பையூட் டிலையே! பழிகளும் இல்லையே!
மையூட் டழகில் மனமுறும் தொல்லையே!
தையூட்டுத் தண்மைக் கனாக்கண்டேன் தோழீநான்!
கன்னியர் காத்திடும் கற்பின் கனல்கண்டேன்!
மின்னியல் ஓங்கிடும் விந்தைத் திறங்கண்டேன்!
தன்னுயிர் தாயெனத் தாங்கும் தலைகண்டேன்!
என்னுயிர் இன்பக் கனாக்கண்டேன் தோழீநான்!
உணர்ந்தேன்! உழைப்போர் உலகின் உயிர்நாடி!
துணிந்தேன்! தொடரும் நலங்கள் பலகோடி!
அணிந்தேன் அறங்கள் அருமைக் குறள்பாடி!
இணைந்தேன் தமிழுள் கனாக்கண்டேன் தோழீநான்!
புலியின் கொடியைப் புவியே புகழ்ந்தேத்த!
மலையின் தொடரென மக்கள் இணைந்தோங்க!
அலையின் வளங்கள் நிலையாய் நிறைந்தோங்க!
கலையின் களமாய்க் கனாக்கண்டேன் தோழீநான்!
இலக்கண விளக்கம்
ஓரடிக்கு நான்கு சீர்கள் வரவேண்டும். நான்கடிகள் ஓரெதுகை
பெறவேண்டும். வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
ஓரடி முடிவும் அடுத்த அடி தொடக்கமும் உள்ள இடத்தில் வெண்டளை கட்டாயமில்லை. ஆனால் அவ்விடத்தில்
மா முன் நேர் மட்டும் வரக்கூடாது. விளங்காய்ச்
சீர்கள் இப்பாட்டில் வரக்கூடாது.
17.07.2016
Aucun commentaire:
Enregistrer un commentaire