mercredi 16 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 12



கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 12

61.
நெல்முற்றித் தலைசாயும்! நெடுந்தென்னை நீர்பாயும்!
புல்முற்றி வளங்காட்டும்! புள்பலவும் புணர்ந்தேங்கும்!
சொல்முற்றிக் கவிபாடும் தூயதமிழ்த் தைச்சுவைபோல்
வில்முற்றி விழிகாட்டும் வியன்செல்வி வாழியவே!

62.
கடல்கரையில் நீராடிக் கமழ்கின்ற கவிபாடி
உடல்கரையில் அமர்ந்திருக்கும்! உயிர்வானில் சிறகடிக்கும்!
சுடர்மரையில் சுரக்கின்ற தேனுண்டு வண்டாடும்!
மடல்தொடரில் மதுவுண்டு மகிழ்ந்தாடும் என்மனமே!

63.
முன்னொளிரும் தாமரையே! முத்தொளிரும் பேரழகே!
மின்னொளிரும் மென்னடையே! விளைந்தொளிரும் இளங்கொடியே!
இன்னொளிரும் நினைவலையே! இசைத்தொளிரும் தண்டமிழே!
பொன்னொளிரும் சுடர்விளக்கே! பூச்சூடிப் போற்றுகிறேன்!

64.
அன்பூறும் அகத்தவளே! அமுதூறும் இதழ்கனியே!
என்பூறும் குருதியென என்கூட்டில் இருப்பவளே!
சொன்னூறும் கற்பனைகள் சுடர்ந்தூறும் செம்பகமே!
என்னூறு வருடமென என்ஆயுள் ஏறுதடி!

65.
எப்போது வருவாயோ? எனக்கின்பம் தருவாயோ?
அப்போது நீ..சொன்ன அத்தனையும் மறந்தோயோ?
தப்போதும் கண்டாயோ தளிர்க்கொடியே என்னிடத்தில்?
ஒப்பேதும் இல்லாத ஓவியமே! காவியமே!

தொடரும்

6 commentaires:


  1. எந்நாளும் மின்னும் எழுகதிா்போல் உன்பாக்கள்!
    எந்நாடும் போற்றி இசைத்திடுமே! - செந்தமிழில்
    சிந்தாடும் சீா்கவியே! செந்தேன் விருத்தத்தில்
    வந்தாடும் காதல் வடித்து!

    RépondreSupprimer
  2. வணக்கம் !

    முன்னொளிரும் தாமரையே! முத்தொளிரும் பேரழகே!
    மின்னொளிரும் மென்னடையே! விளைந்தொளிரும் இளங்கொடியே!
    இன்னொளிரும் நினைவலையே! இசைத்தொளிரும் தண்டமிழே!
    பொன்னொளிரும் சுடர்விளக்கே! பூச்சூடிப் போற்றுகிறேன்!

    செந்தமிழைப் போற்றுவதும் சிந்து பாடி வலையில் ஏற்றுவதும்
    எந்த ஜென்மம் எடுத்தாலும் இனி அடங்கவே அடங்காது ஐயா :))
    மனம் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் .த .ம .3

    RépondreSupprimer
  3. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. ஒப்பேதும் இல்லாத ஓவியம் தான்
    தப்பேதும் இல்லாத காவியம் தான்
    அருமை அருமை நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer