samedi 21 mars 2026

விருத்த மேடை - 101

 


விருத்த மேடை  - 101

 

கட்டளை அறுசீர் விருத்தம்

[நேர் : 19 எழுத்து, நிரை : 20 எழுத்து]

 

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

……. சங்கொடு சக்கரம்வில்

ஒண்மை யுடைய வுலகையொள் வாள்தண்டு

…… கொண்டுபுள் ளூர்ந்துலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

…… மாளப் படைபொருத

நன்மை யுடையவன் சீர்பர வப்பெற்ற

…… நானோர் குறைவிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

…… கோலச்செந் தாமரைக்கண்

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

…… ஒளிமணி வண்ணன்கண்ணன்

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

…… அசுரரைக் காய்ந்தவம்மான்

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

…… யானொரு முட்டிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

இல்லம் இனிக்க இளமை செழிக்க

…… இளையவள் வந்திடுவாள்!

வெல்லம் இனிக்க விருந்து மணக்க

…… வியன்கவி தந்திடுவாள்!

உள்ளம் இனிக்க உறவு கொழிக்க

…… உயர்மனை காத்திடுவாள்!

செல்லம் அவளின் சிறப்பை யுரைக்கச்

…… செகத்தினில் சொல்லிலையே!

 
[பாட்டரசர்] 20.03.2026

 

ஓரடியில் ஐந்து சீர்களைப் பெற்றுவரும் கட்டளைக் கலித்துறை இலக்கணத்தை ஒத்து, ஓரடியில் ஆறு சீர்களைப் பெற்றுவரும் கட்டளை அறுசீர் விருத்தம் இது. நேரசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 19 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 20 எழுத்துக்களையும் பெறும்.  ஒவ்வோர் அடியும் வெண்டளை பெறும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. அடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 6 ஆம் சீர் இடத்தில் மாங்கனியும், மாந்தண்பூ ஆகிய சீர்கள் அருகி வரும். மேலே இரண்டாம் விருத்தத்தில் தேமாந்தண்பூ  [வண்ணன்கண்ணன்] வந்துள்ளதைக் காண்க.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

20.03.2026

Aucun commentaire:

Enregistrer un commentaire