கழுத்துார்
முத்துமாரியம்மன்
குறள்
வெண்செந்துறை
முத்தமிழ்
வேண்டி முத்து மாரியைச்
சித்தம்
பதிக்கச் சீர்கள் சிறக்குமே!
கழுத்துார்
மாரியின் கண்கள் கண்டிட
அழுத்துந்
துயர்கள் அனைத்தும் அகலுமே!
அன்னை
மாரியின் அணிமலர் அடிகள்
முன்னை
வினைகளை முற்றும் முடிக்குமே!
எங்கள்
மாரியின் இணையடி தொழுதிட
அங்கப்
பிணியின் அடிவேர் அறுமே!
காக்கும்
மாரியின் கால்கள் பற்றிட
வாக்குச்
சிறந்து வளர்புகழ் தொடருமே!
சத்தி
மாரியின் தண்மலர்த் தாள்கள்
பத்துப்
பிறப்பின் பாவம் நீக்குமே!
கன்னல்
மாரியின் கமழ்மலர்ப் பாதம்
இன்னல்
அகற்றி இன்பம் அளிக்குமே!
எங்குல
மாரியை ஏத்திப் பாடிட
அங்குல
அளவும் அல்லல் இல்லையே!
வயல்சூழ் மாரியின் மலரடி போற்றிட
உயிர்சூழ் வினைகள் ஓடி மறையுமே!
முத்தா லம்மன் முன்னே இருந்தால்
சித்தாழ் ஞானஞ் செழித்துப் பூக்குமே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.05.2025
Aucun commentaire:
Enregistrer un commentaire