dimanche 24 mars 2024

எல்லாமாகிய...

 


எல்லாமாகிய....

[நேரொன்றிய ஆசிரியத்தளை]

 

பொன்னும் என்ன? பூவும் என்ன?

மின்னும் வண்ண விந்தை யென்ன?

விண்ணும் என்ன? மண்ணும் என்ன?

தண்ணும் என்ன? தென்றல் என்ன?

தாயே உன்முன் தீயே யென்ன?

காயே யென்று காய்ந்த தென்ன?

துன்பங் கோடி சூழ்ந்த தென்ன?

என்றும் என்னை உன்னுள் வைத்துக்

காத்த தென்ன? கண்ணீர் என்ன?    

ஆத்தா வுன்றன் அன்புக் கீடாய்

ஈசன் இல்லை! வாசன் இல்லை!

ஆசா னாக ஆற்றல் தந்தாய்!

உண்டைச் சோற்றை ஊட்டி விட்டுத்

தொண்டை காய்ந்து துாக்கம் கொண்டாய்!

கற்றே மைந்தன் காப்பான் என்று

பற்றே வைத்தாய்! பாலம் இட்டாய்!

அக்கம் பக்கம் அல்லல் பட்டும்

சிக்கல் பட்டும் சீரே தந்தாய்!

என்பேர் ஒன்றே உன்வாய் சொல்லாய்

என்றும் ஆகி இன்பம் காணும்!

பாட்டின் மன்னன் பட்டம் பெற்றேன்!

ஏட்டில் தாயின் ஏற்றம் கற்றேன்!

அங்கே யன்னை இங்கே பிள்ளை

எங்கே செல்வேன் ஏங்கும் நெஞ்சே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.03.2024

 

Aucun commentaire:

Enregistrer un commentaire