கட்டளைக் கலித்துறை - 6
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் + கூவிளம்
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லம்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே!
[திருஞான சம்பந்தர் தேவாரம் - 1471]
நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 14 இருக்கும்.
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலைத ருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்க மால்விடை மேல்வரு வீரடி கேள்செல்லீர்
அரக்க னாற்றல ழித்தரு ளாக்கிய ஆக்கமே!
[திருஞான சம்பந்தர் தேவாரம் - 1476]
உண்மை வென்றிடும்! ஊழகம் துன்புறும்! ஊர்புகழ்
வண்மை வாழ்வுறும்! வஞ்சகம் தாழ்வுறும்! வண்டமிழ்த்
தண்மை தேன்றரும்! தாயகம் காப்பிடும்! தங்கமாம்
பெண்மை இன்பிடும்! பேரகம் நற்பணி பேணுமே!
[பாட்டரசர்] 10.02.2024
நரியின் நெஞ்சினில் நல்லருள் என்பதும், நாறிய
கரியின் நெஞ்சினில் காப்பருள் என்பதும், காட்டுடை
அரியின் நெஞ்சினில் அன்பருள் என்பதும், ஆசையால்
விரியும் நெஞ்சினில் விண்ணருள் என்பதும் விந்தையே!
[பாட்டரசர்] 10.01.2024
இக்கட்டளைக் கலித்துறையில் விளம் வருமிடங்களில் தேமாங்காய் அருகிவரும்.
ஓரடியில்
ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும்.
1.5 ஆம் சீர்களில் மோனை யமையும்.
மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
10.02.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire