dimanche 4 février 2024

கலித்துறை மேடை - 7

 


கலித்துறை மேடை - 7

      

கட்டளைக் கலித்துறை - 5

 

முதல் இருசீர் மா அல்லது விளம் + மா + கூவிளம் + கூவிளம்

முதல் 3 சீர்கள் வெண்டளையைப் பெற்றிருக்கும்

 

மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை

ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே

பாசற வெய்தி யறிவி ழந்தெனை நாளையும்

ஏசறு மூரவர் கவ்வை தோழீயென் செய்யுமே?

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. மாசறு -1]

 

நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 14  இருக்கும்.

 

கடியன் கொடியன் நெடிய மாலுல கங்கொண்ட

அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்

கொடியவென் னெஞ்சம் அவனென் றேகிடக் கும்மெல்லே

துடிகொ ளிடைமடத் தோழீ! அன்னையென் செய்யுமோ?

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. மாசறு - 5]

 

நிரையசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 15  இருக்கும்.

 

கன்னல் கவிகள் படைக்கக் கண்ணெழில் காட்டுவாள்!

பின்னல் மலர்ச்சடை போட்டுப் பித்துற வாட்டுவாள்!

மின்னல் ஒளியினை வீசி வெற்றியை யீட்டுவாள்!

இன்னல் இனியிலை என்றே இன்னிதழ் ஊட்டுவாள்!

 

[பாட்டரசர்] 07.01.2024

 

அரும்புச் சரஞ்சூடி என்றன் ஆசையை மூட்டுவாள்!

கரும்புக் கவிபாடி நெஞ்சக் காதலைக் கூட்டுவாள்!

விருந்து சுவையாடி நாளும் மெல்லிசை மீட்டுவாள்!

பருந்து விழிக்காரி பார்வை யால்துயர் ஓட்டுவாள்!

 

[பாட்டரசர்] 07.01.2024

 

மேலுள்ள பாடல்களில் கங்கொண்ட, மாயத்தன் என்பன கூவிளம் வருமிடங்களில் தேமாங்காய் வந்தன.

 

என்செய்யு மூரவர் கவ்வை தோழீ இனிநம்மை

என்செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்

முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி

என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே!

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. மாசறு - 2]

 

மேலுள்ள பாடலில் 4 சீர் கூவிளம் வர வேண்டி இடத்தில் தேமா வந்துள்ளது [தோழீ, என்னை, மேனி] அவ்வாறு தேமா வந்தால் 5ஆம் சீர் கூவிளமாக வராமல் கருவிளமாக வரும்.

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.4 ஆம் சீர்களில் மோனை யமையும்.

முதல் மூன்று சீர்கள் வெண்டளையைப் பெற்றிருக்கும். மூன்றாம் சீர் மாவாக அமையும். நான்காம் ஐந்தாம் சீர்கள் கூவிளமாகும்.

 

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

21.01.2024

 

Aucun commentaire:

Enregistrer un commentaire