dimanche 27 octobre 2024

சாற்றுகவி

 


திருமால் கோயில்கள் நுாலுக்குச்

சாற்றுகவி

 

திருமால் அழகன் பெயரோடு

       சிறந்து விளங்கும் திருத்தளங்கள்

அருளைப் பொழிந்தே அனைவர்க்கும்

       அழகாய் வழங்கும் பலவளங்கள்!

பொருளும் பொன்னும் பொலிந்திடவே

       புனைந்தார் கவிஞர் இளமதியார்! 

திருவும் கலையும் சேர்ந்திடவே

       செய்த இந்நுால் புகழ்சூடும்!

 

நுாற்றெட் டென்னும் திருப்பதிகள்

       நுண்மாண் கலையின் சிறப்போடு

போற்றும் வண்ணம் நம்நாட்டில்

       பொலியும் அழகு கூடங்கள்!

ஏற்ற பெருமைக் கீடேதாம்?

       இசைக்கும் தமிழுக் கிணையேதாம்?

சாற்றி யானும் மகிழ்கின்றேன்!

       தரணி கற்றுப் பயன்சூடும்!

 

கோயில் தொன்மை வரலாற்றைக்

       கொள்கைத் தமிழர் பண்பாட்டை

வாயில் வண்ண வடிவத்தை

       மனத்தைக் கவரும் பேரழகைத்

தாயின் பாயின் தன்மையதாய்த்

       தந்த கவிஞர் இளமதியார்

வேயின் வாணன் திருவருளால்

       மேலும் பன்னுால் தீட்டுகிவே!

 

வெண்பாப் புலவர் வரிசையிலே

       வெற்றி பெற்ற இளமதியார்

பெண்பால் புலவர் பல்லோரின்

       பெருமை யாவும் உற்றாரே!

பண்பால் அன்பால் மனமொன்றிப்

       படைத்த இந்நுால் கற்போர்க்குக்

கண்..பார் காட்சி அத்தனையும்

       கடவுள் அருளை உணர்த்திடுமே!

 

வண்ண வண்ணக் கோலமென

       வடிவாய் மின்னும் வெண்பாக்கள்

எண்ண வெண்ணப் பலகோடி

       இன்ப நல்கும்! நலஞ்சேர்க்கும்!

உண்ண வுண்ணத் தெவிட்டாத

       உயர்ந்த தமிழை நாடோறும்

பண்ணப் பண்ணப் மொழியோங்கும்!

       பாவம் யாவும் நமைநீங்கும்! [199]

 

26.10.2024


கவிஞர் தே. சனார்த்தனனர்

 


அருட்சுடர் அந்தாதி நுாலுக்குச் சாற்றுகவி

 

மரபிலே பாட வல்ல

       மன்னராய்ப் புகழைப் பெற்ற

தரந்தரும் தமிழைக் கற்ற

       சனார்த்தன கவிஞா் இந்நாள்

பொருட்சுவை மிக்க வாறும்

       புலவர்கள் போற்று மாறும்

அருட்சுடர் அந்தா தித்தேன்

       அருமையாய் அளித்திட் டாரே!

 

வள்ளலார் வகுத்த வாழ்வை

       மணந்திடும் மா..மா காயில்

உள்ளமே உருகும் வண்ணம்

       உயர்தமிழ் செழிக்கும் வண்ணம்

தெள்ளிய முறையில் யாத்தார்

       தே.சனார்த் தனனார்! இங்குப்

பள்ளமும் மேடும் இல்லாப்

       பாதையைப் படைத்தார் நன்றே!

 

பண்பிலார் உற்ற வாழ்க்கை 

       பாரினில் பாழாம் என்றார்!

அன்பிலார் உற்ற வாழ்க்கை 

       அதனினும் கேடாம் என்றார்! 

இன்னுயிர்க் காக வென்றும்

       இதயமே கொடுத்து நின்ற

பொன்னிகர் வடலுார் வள்ளல்

       புகழ்நெறி போற்று வோமே!

 

வாடிய பயிரைக் கண்டு

       வாடிய நெஞ்சர்! வள்ளல்

பாடிய பாக்கள் யாவும்

       பைந்தமிழ் யாப்பைக் காக்கும்!

தேடிய செல்வ மாகத்

       திருவருட் பாவைக் கொள்வீர்!

நாடிய வினைகள் நீங்கும்!

       நற்றவச் சோதி யோங்கும்!

 

விடுதலை வீரர்! சந்த

       வியன்கவி வாணர்! வாழ்வின்

தடுநிலை யாவும் வெல்லத்

       சனார்த்தனர் நன்னுால் தந்தார்!

சிடுநிலை உள்ளம் மாறிச்

       சில்லெனும் தண்மை மேவிப்

படர்நிலை இன்பம் கூடும்!

       பற்றுடன் இந்நுால் கற்போம்!

 

அருட்சுடர் எனுமந் தாதி

       அகமுறக் கற்றால் போதும்

வருமிடர் முற்றும் மாறி

       வனமென வாழ்க்கை பூக்கும்!

பொருள்படர் கவிதைக் குள்ளே

       புகழ்படர் வழிகள் கண்டேன்!

இருள்படர் நெஞ்சே கற்பாய்

       இறைதொடர் இந்நுால் காட்டும்!

      

26.10.2024

நிறைமதி நீலமேகம்

 


பாவலர்மணி நிறைமதி நீலமேகம்

பிறந்தநாள் வாழ்த்து!

 

நெஞ்சுறும் தமிழை வேண்டி

      நிறைமதி நீல மேகம்

பஞ்சுறும் மென்மை மிக்க

      பாக்களை நன்றே செய்தார்!

விஞ்சுறும் ஆற்றல் ஓங்கி

      விளைந்துள அகவை நன்னாள்

மஞ்சுறும் சீர்கள் பெற்று

      வளமுடன் வாழ்க! வாழ்க!!

 

நீதியைத் தலைமேல் சூடி

      நிறைமதி நீல மேகம்

சோதியை அகத்துள் ஏற்றிச்

      சுடர்மிகு மேடை கண்டார்!

சாதியைப் போக்கும் எண்ணம்

      சமத்துவம் பூக்கும் வண்ணம்

ஆதியை ஆழ்ந்து கற்றார்

      அறிவொளி சூழ்க! சூழ்க!!

 

நிகரிலா மரபைக் கற்று

      நிறைமதி நீல மேகம்

மிகுபலாத் தோப்பைப் போன்று

      விளைந்திடும் புலமை பெற்றார்!

பகையிலா உலகம் வேண்டும்!

      பசியிலா உயிர்கள் வேண்டும்!

புகழ்விழா நுால்கள் தீட்டிப்

      புவியினை வெல்க! வெல்க!!

 

நிழற்றரும் மரத்தை ஒத்த

      நிறைமதி நீல மேகம்

குழற்றரும் இசையைக் கூட்டிக்

      குயிற்றரும் இன்பம் தந்தார்!

எழற்றரும் ஊக்கம், வாழ்விற்[கு]

      எழிற்றரும் ஆக்கம் இட்டார்!

சுழற்றரும் காற்றாய் என்றும்

      தொடர்நலம் காண்க! காண்க!

 

நிதிதரும் குடிக்கண் தோன்றி

      நிறைமதி நீல மேகம்

ததிதரும் குளிர்ச்சி யாகத்

      தமிழ்தரும் மாட்சி யுற்றார்!

சுதிதரும் இனிமை, நன்றே

      சுவைதரும் மக்கள், காக்கும்

பதிதரும் வாழ்த்துச் சேர்க!

      பல்லாண்டு வாழ்க! வாழ்க! [210]

 

27.10.2024

dimanche 15 septembre 2024

கவிக்கோ துரை. வசந்தராசனார்

 


கவிக்கோ துரை. வசந்தராசனார்

71 ஆம் அகவை வாழ்த்து

 

பல்லாண்டு வாழ்க!

 

வண்ணத் தமிழ்காக்கும் பண்ணைத் திருவூரார்

எண்ண மனைத்தும் இனிப்பாகும்! - அண்ணாவின்

பொன்னெறி போற்றும் புகழ்ப்புலவர் வாழியவே

இன்னெறி யாவும் இசைத்து!

 

துாய கவிக்கோ துரைவசந்த ராசனார்

நேய மனத்துள் நிறைந்திருக்கும் - தாயன்பு!

பாட்டரசன் பாடுகிறேன் பல்லாண்டு! காண்கவே

நாட்டரசர் சூட்டும் நலம்!

 

விந்தைமிகு சந்தம் விளையாடும்! எந்நாளும்

சிந்தைமிகு வண்ணம் செழித்தாடும்! - செந்தமிழின்

தொண்டர் கவிக்கோ துரைவசந்த ராசனார்

கண்டார் கவிதைக் களம்!

 

பகுத்தாறிவு வாழ்வும், படிப்பகமும் கொண்டு

தொகுத்தறிவு தந்தார் தொடர்ந்து - மிகுத்தபுகழ்

தோற்றும் கவிக்கோ துரைவசந்த ராசனார்

ஆற்றும் பணியே அழகு!

 

வாழ்க வளத்துடனே! வண்டமிழ்ச் சீருடனே!

சூழ்க நிறைந்து நலமெல்லாம்! - ஏழ்பிறப்பும்

தொன்மைக் கவிக்கோ துரைவசந்த ராசனார்

நன்மை புரிவார் நமக்கு!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

15.09.2024