lundi 26 juin 2023

பாவலர் திருமகள்


 

பாவலர் திருமகள் வாழியவே!

 

பாட்டின் அரங்கில் பைந்தமிழைப்

       பாடிப் பட்டம் பெற்றவராம்!

நாட்டின் அரங்கில் ஒளிர்கின்ற

       நல்லோர் நெறியைக் கற்றவராம்!

வீட்டின் அரங்கில் பூஞ்சோலை

       விளைத்து மகிழுந் திருமகளார்!

ஏட்டின் அரங்கில் புகழேந்தி

       எழிலார் தமிழ்போல் வாழியவே!

 

இறையின் ஒளியால் வாழுகிறார்!

       இன்பத் தமிழை ஆளுகிறார்!

நிறையின் ஒளியால் பாடுகிறார்!

       நேய மலர்கள் சூடுகிறார்!

மறையின் ஒளியால் மனமோங்கி

       மாட்சி பொலியுந் திருமகளார்!

துறையின் ஒளியால் கவிப்புலமை

       சுடர்ந்து படர்ந்து வாழியவே!

 

மணிகள் மின்னும் அழகாக

       மனமே மின்னும் வரம்பெற்றார்!

அணிகள் மின்னும் கவிபாடி

       அகில மின்னும் பெயருற்றார்!

பணிகள் மின்னும் எந்நாளும்

       பண்பே மின்னுந் திருமகளார்!

திணைகள் மின்னுந் தமிழ்மரபில்

       திளைத்துக் களித்து வாழியவே!

 

எழின்மேல் காதல் பூண்டெழுதும்

       ஈடில் புலவர் வழிகண்டார்!

விழிமேல் காதல் விளைந்தாடும்

       விருத்தக் கம்பன் அடிதொழுதார்!

பொழின்மேல் காதல் சுரும்பெனவே

       புவிமேல் காதல் திருமகளார்

மொழிமேல் காதல் உளம்பூத்து

       முன்னைக் கவிபோல் வாழியவே!

 

விருத்தம் பாடிப் பாவலராய்

       வெற்றி யடைந்தார்! உவமைகளின்

பொருத்தம் பாடிப் புலவரெனப்
       போற்றத் திகழ்ந்தார்! இறையவனின்

நிருத்தம் பாடி உள்ளுருகி

       நெஞ்ச நெகிழ்ந்தார்! திருமகளார்

அருத்தம் பாடி யெனும்பேரை

       அருளால் அணிந்தார் வாழியவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

26.06.2023

1 commentaire:

  1. இனிய வணக்கம் ஐயா

    நனிநன்றி நனி நன்றி ஐயா

    பைந்தமிழால் பாடி அணிசெய்த ஆசானே
    சிந்தை மகிழ்ந்தேன் திருவே- வந்தனை
    செய்து நானும் செகத்தில் வணங்கியே
    நெய்வேன் கவிதை நெகிழ்ந்து

    பாவலர் திருமகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    RépondreSupprimer