விருத்த மேடை - 63
எண்சீர் விருத்தம் - 16
எழு மா + ஒரு காய்
சிந்தைக் குள்ளே விந்தை புரியும்
சின்ன பெண்ணே! வண்ணப் பேரழகே!
சந்தம் சிந்தும் சொந்தத் தமிழே!
தங்கம் மின்னும் அங்கம் கொண்டவளே!
எந்தப் பொழுதும் வந்த கனவும்
இளமை பொங்க வளமை கூட்டுதடி!
இந்த அழகைத் தந்த இறையை
என்றும் தொழுது நன்றி உரைத்திடுவேன்!
[பாட்டரசர்]
இந்தப் பாடல் நான் புதியதாக உருவாக்கிய வாய்பாடாகும். ஓரடியில் ஏழு மாச்சீர்களும் ஒரு காய்ச்சீரும் வரும். ஒவ்வோர் அரையடியும் பொழிப்பெதுகை பெறும்.[சிந்தை -விந்தை] [சின்ன-வண்ண] ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகையை ஏற்கும்
விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
24.03.2022
Aucun commentaire:
Enregistrer un commentaire